Friday 1 August 2014

சமையல் குறிப்புகள் ! பொடி வகைகள்!!!

கறி மசாலா பேஸ்ட்
ரெடிமேடாக வாங்காமல் நாம் வீட்டிலேயே செய்து வைத்து உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு கொஞ்சம் போட்டால் நல்ல ருசியைத்தரும். தேவையான பொருட்கள் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டேபிள்ஸ்பூன் ஒயிட் வினிகர் - 100 -150 மில்லி எண்ணெய் - 250 மில்லி (1 கப்) மல்லி விதை - 50 கிராம் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை - 2 இணுக்கு தண்ணீர் - 50 - 75 மில்லி செய்முறை முதலில் மல்லி,சீரகம்,சோம்பு,வெந்தயம்,கருவேப்பிலை லேசாக வெதுப்பி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன்,மிளகாய்த்தூள்,மஞ்சல் தூல்,வினிகர்,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளவும். ஒரு பேனில் 200 மில்லி எண்ணெய் காயவைத்து தயார் செய்த கறி மசாலா பேஸ்ட்டை பொட்டு 10 நிமிடம் கிளரவும்.தண்ணீர் வற்றி எண்ணெய் தெளிந்து மேலே வரும்.இறக்கி ஆற வைக்கவும். சுத்தம் செய்த கண்ணாடி ஜாரில் காய்ந்த ஸ்பூனால் எடுத்து போட்டு வைக்கவும்.மீதி உள்ள 50 மில்லி எண்ணெயை காய வைத்து மசாலா உள்ள ஜாரில் விடவும்.இது விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க உதவும்.இப்படி செய்வதால் பூஞ்சனம் வைக்காது.ஒரு துளி கூட ஜாரில்,ஸ்பூனில் தண்ணீர் படாதவாறு உபயோகிக்க வேண்டும்.விருப்பப்பட்டால் உப்பு சேர்க்கலாம். சுலபமாக கறி மசாலா பேஸ்ட் வீட்டிலேயே ரெடி.இதனை குழம்பு,குருமா,கறி,மசாலா வகைகளுக்கு உபயோகிக்கலாம். குறிப்பு: தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கலாம்.அவசரத்திற்கு மொத்தமாக போடுவதற்கு வசதியாக இருக்கும்.ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து வைத்து உபயோகிக்கலாம்.இது பேச்சுலர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும். ------------------------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள் இளசான கறிவேப்பிலை - 2 கப் மிளகு - 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயம் - 1/4 டீஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு. உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன் செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 3
தேவையான பொருட்கள் தனியா - 3 ஆழாக்கு துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு மிளகு - ஒரு ஆழாக்கு கடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு விரளி மஞ்சள் - 6 மிளகாய்வற்றல் - 5 வெந்தயம் - கால் ஆழாக்கு கடுகு - கால் ஆழாக்கு செய்முறை எல்லா சாமான்களையும் வெயிலில் தனித்தனியாக காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காயவைத்த சாமான்களை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த வகை பொடி எல்லா விதமான சாம்பார் வகைகளுக்கும் பயன்படுத்தலாம் ---------------------------------------------------------------------
இட்லி மிளகாய்ப் பொடி - 2
தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் - 100 கிராம் உளுத்தம் பருப்பு - 100 மில்லி கடலைப்பருப்பு - 100 மில்லி பெருங்காயம் - புளியாங்கெட்டை அளவு எள்ளு - ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி உப்பு - தேவைகேற்ப செய்முறை வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை வறுத்து எடுத்து விட்டு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, எள்ளு முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் மிளகாய், பருப்பு வகைகளை முதலில் பொடித்து விட்டு இறுதியில் உப்பு கலந்து பொடித்து எடுக்கவும். கறிவேப்பிலையை வாணலியில் தண்ணீர் சுண்ட வறுத்துத் தூள் செய்து தேவையானால் கலந்து கொள்ளவும். ----------------------------------------------------------------------
சாம்பார் பொடி - 1
தேவையான பொருட்கள் குண்டு மிளகாய் - 1/4 கிலோ, தனியா - 3/4 கிலோ, சீரகம் - 100 கிராம், மிளகு - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், விரளி மஞ்சள் - 100 கிராம், பச்சரிசி - 50 கிராம், செய்முறை எல்லாவற்றையும் நன்றாக வெய்யிலில் காய வைத்து மெஷினில் நைசாக அரைக்கவும் ----------------------------------------------------------------------------
கறிவேப்பிலைப் பொடி - 1
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 50 கிராம் உளுத்தம்பருப்பு - 20 கிராம் மிளகாய் வற்றல் - 10 எண்ணெய் - சிறிதளவு செய்முறை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் இவற்றினை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். மிக்ஸியில் முதலில் மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு இரண்டையும் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதனுடன் வறுத்த கறிவேப்பிலையைச் சேர்த்து பொடி செய்யவும். விருப்பம் உள்ளவர்கள் சிறிதளவு உப்பும், பெருங்காயப் பொடியும் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். சூடான சாதத்திற்கு பொடியுடன் நல்லெண்ணெய்விட்டு சாப்பிட மிகவும் ருசியாய் இருக்கும் -------------------------------------------------------------------------------
ரசப்பொடி - 1
தேவையான பொருட்கள் மிளகாய் - 100 கிராம் மல்லி விதை - 300 கிராம் மிளகு - 50 கிராம் சீரகம் - 50 கிராம் மஞ்சள் - 10 கிராம் துவரம் பருப்பு - 250 கிராம் செய்முறை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்துக் கொள்ளவும். மிளகாயை தனியாக இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்களை தனியாக இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டையும் கலந்து தகுந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதனை ஒரு மாத காலத்திற்கு உபயோகப்படுத்தலாம். நாட்கள் அதிகமாக, மணமும் ருசியும் குறையும். -----------------------------------------------------------------------
கரம் மசாலா
தேவையான பொருட்கள் மிளகாய் - 200 கிராம் தனியா - 200 கிராம் சீரகம் - 100 கிராம் கிராம்பு - 25 கிராம் பட்டை - 5 கிராம் கசகசா - 200 கிராம் செய்முறை எல்லா சாமான்களையும் தனியாக வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புலவு வகைகள், மசாலா கறிவகைகள் செய்யும் போது இதில் கொஞ்சம் சேர்த்தால் வாசனையாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் - 400 மில்லி சோம்பு - 250 மில்லி மிளகு - 150 மில்லி பட்டை - 2 இஞ்ச் அளவுள்ள 7துண்டுகள் கிராம்பு - 80 பீஸ் ஏலக்காய் - 80 பீஸ் செய்முறை இவை அனைத்தையும் வெயிலில் சுமார் 1 மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத ஒரு பாட்டிலில்போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம். குறிப்பு: ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.ஆனால், நன்றாக மாவு போன்று பொடிபண்ணவேண்டும். -----------------------------------------------------------------------
சாம்பார் பொடி (4)
தேவையான பொருட்கள் வரமிளகாய் -அரை கிலோ மல்லி விதை -அறுநூற்றைம்பது கிராம் துவரம் பருப்பு - நூறு கிராம் கடலைப் பருப்பு - நூறு கிராம் வெந்தயம் - பத்து கிராம் மிளகு - பத்து கிராம் கட்டி பெருங்காயம் - இருபது கிராம் விரலி மஞ்சள் - இருபது கிராம் செய்முறை மஞ்சள், பெருங்கயத்தை சிறிய கட்டிகளாகத் தட்டி வைக்கவும். (பொடித்து விட வேண்டாம்) மிளகாயை காம்பு நீக்கி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து முதலில் பெருங்காயத்தைப் போட்டு பொரியும் வரை வறுக்கவும். பிறகு அதிலேயே மஞ்சள், மிளகு, வெந்தயம், பருப்புகள் எல்லாவற்றையும் போட்டு நிறம் மாற ஆரம்பிக்கும் வரை வறுத்து இறக்கவும். (அதிகம் சிவக்க வேண்டாம்) மல்லியை இளம் சூட்டில் நான்கு நிமிடம் வறுக்கவும். மிள்காயைப் போட்டு இளம் சூட்டில் ஐந்து நிமிடம் வறுக்கவும். எல்லாவற்றையும் சூடு ஆறும்வரை ஆற வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். குறிப்பு: பொடி அரைக்கும் முன்னும் பின்னும் சூடு ஆறும் வரை காய வைத்தால் போதுமானது. அதிக நேரம் பரப்பி ஆற வைத்தால் வாசனை கம்மியாக உள்ளது போல் இருக்கும். கட்டிப் பெருங்காயம் சாம்பார் பொடிக்கு மிகவும் உகந்தது. இந்தப் பொடி பெருங்காயம் சேர்ப்பதால் சாம்பர், வத்தல் குழம்பு, காரக் குழம்புகளுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும். பொதுவாக சாம்பார் செய்து இறக்கும் முன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவலுடன் கால் டீ ஸ்பூன் மல்லி விதை (பச்சையாக) சேர்த்து அரைத்து ஊற்றி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி கடுகு, உளுந்து, தட்டிய இரண்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மேலே மல்லி இலை தூவி இறுக மூடி ஐந்து நிமிடம் கழித்து திறந்து உபயோகப் படுத்திப் பாருங்கள். சுவை அலாதியாக இருக்கும். --------------------------------------------------------------------
வேப்பம்பூ பொடி
தேவையான பொருட்கள் வேப்பம்பூ - ஒரு டம்ளர் மல்லிவிதை - அரை டம்ளர் மிளகு - ஒரு தேக்கரண்டி மிளகாய் - 4 பெருங்காயம் - பட்டாணி அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை வேப்பம்பூவை வெறும் வாணலியில் இட்டு, மிதமான சூட்டில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும். பிறகு மல்லிவிதை, மிளகு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு முன்பு கல் உப்பையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்கவும். வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். சாதத்துடன் எண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் --------------------------------------------------------------------------
கறிக்குழம்பு கரம்மசாலா
தேவையான பொருட்கள் கசகசா - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு மேஜைக்கரண்டி தனியா - இரண்டு மேஜைக்கரண்டி சோம்பு - இரண்டு தேக்கரண்டி கிராம்பு - 4 பட்டை - 4 செய்முறை இவையனைத்தையும் தனிதனியாக வறுத்து ஒன்றாக பொடித்துவைத்துகொள்ளவும். கறிக்குழம்பு செய்யும் போது கடைசியில் ஆறு பல் பூண்டை நசுக்கி அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி இந்த கரம் மசாலா பொடியை சேர்த்து செய்தால் குழம்பின் வாசம் மற்றும் ருசி நன்றாக இருக்கும். --------------------------------------------------------------------------------
கறிவேப்பிலை (இட்லி) பொடி
இது இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானதும் கூட! தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 40 கொத்து கடலைப்பருப்பு - 100 மில்லி தோல் நீக்கிய உலுந்து - 100 மில்லி காய்ந்த மிளகாய் - 15 எண்ணெய் - 100 மில்லி உப்பு - 2 ஸ்பூன் செய்முறை கடலைப்பருப்பு, உலுந்து இரண்டையும் தனித்தனியாக லேசான பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை சுத்தம் செய்து எண்ணெயில் நான்கைந்து கொத்துகளாக போட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் காய்ந்த மிளகாயையும் தீயாமல் வறுத்தெடுக்கவும். அனைத்தையும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத பாட்டிலில் போட்டுவைக்கவும். -------------------------------------------------------------------------
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் வற்றல் - 200கிராம் கொத்தமல்லி - 50 கிராம் சீரகம் - 25 கிராம் உளுந்தம்பருப்பு - 10 கிராம் கடலை பருப்பு - 25 கிராம் துவரம் பருப்பு - 10 கிராம் புழுங்கல் அரிசி - 10 கிராம் மிளகு - 10 கிராம் வெந்தயம் - 1 தேக்கரண்டி காயம் - நெல்லிக்காய் கறிவேப்பிலை - ஒரு கொத்து மஞ்சள் - 2ஸ்பூன் உப்பு - 1 மேஜை கரண்டி செய்முறை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்னிரமாக வறுத்துமிசினில் அல்லது மிக்சியில் அரைத்து கொள்ளவும். குறிப்பு: சாம்பார் பொடியை குறைந்தது 5 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் ----------------------------------------------------------------------------
கரம் மசாலாப் பொடி
தேவையான பொருட்கள் கிராம்பு - 20 கிராம் பட்டை - 20 கிராம் ஏலம் - 20 கிராம் ஜாதிக்காய் - ஒன்று சீரகம் - 20 கிராம் மிளகு - 20 கிராம் தனியா - 40 கிராம் சுக்கு - 40 கிராம் செய்முறை இவையனைத்தையும் வெய்யிலில் காய வைத்து, பொடித்துக் கொள்ளவும் ------------------------------------------------------------------------------
சீரகப் பொடி
தேவையான பொருட்கள் சீரகம் -- 100 கிராம் இஞ்சி -- 50 கிராம் எலுமிச்சம் பழம் -- 15 (அ) 20 ஏலக்காய் -- 10 கிராம் (தோல் நீக்கியது) சீனா கல்கண்டு -- 100 கிராம் செய்முறை இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி 'ஜூஸ்' எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். --------------------------------------------------------------------------------

சாம்பார் பொடி -- ( 10 பேருக்கு )

தேவையான பொருட்கள்
  • காய்ந்த மிளகாய் -- 10 கிராம்
  • கொத்தமல்லி -- 20 கிராம்
  • வெந்தயம் -- 1 டீஸ்பூன்
  • கடலை பருப்பு -- 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் -- 1 துண்டு
  • கறிவேப்பிலை -- 2 இனுக்கு
  • தேங்காய் எண்ணைய் -- தே.அ

செய்முறை

  • எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும்.
  • கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும்.
  • இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி.
  • நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி.
  • ----------------------------------------------------------------------------------------