Tuesday 17 December 2013

திருவாதிரைக் களி,. . .கூட்டு செய்வது எப்படி!!! - 2

ருடா வருடம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தில்லையம்பல நடராஜனுக்கு முதல் நாள் அபிஷேகமும், மறுநாள் ஆருத்ரா தரிசனமும் விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் அனைவரும் களி, கூட்டு என்று செய்து சிவபெருமானுக்கு நிவேதனம் செய்து விசேஷமாகக் கொண்டாடுவார்கள். அதிகாலை 5 மணிக்குள் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. இனி திருவாதிரைக்களி எப்படிச் செய்வது? எந்த எந்த மாவட்டக்காரர்கள் கூட்டை எப்படிச் செய்கிறார்கள்? என்று பார்க்கலாம். ஆனால், எப்படிச் செய்தாலும் அன்புடன் பக்தியுடன் ஆசாரமாகச் செய்வதை எந்தக் கடவுளும் ஏற்று நமக்கு நன்மை புரிவார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதை வடித்து ஒரு துணியில் பரத்தி சிறிது நேரம் வைக்கவும். நீரை, துணி உறிஞ்சியதும் மிக்ஸியில் இட்டு மாவாக்கி சலித்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து அதைத் தனியே பொடித்துக் கொள்ளவும். சலித்து வைத்துள்ள ஈரமாவை வாணலியில் இட்டு நன்கு ஈரம் போக வறுக்கவும். மாவை எடுத்து கோலம் போட்டால் கோல மாவில் போடுவதைப் போன்று பிசிறில்லாமல் வரவேண்டும். இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள இந்த மாவுடன் பொடித்து வைத்த பாசிப்பருப்பு மாவையும் கலந்து வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம், குக்கர் அல்லது வெண்கலப்பானையில் 1 டம்ளர் நீர்விட்டு வெல்லத்தைச் சீவிப் போடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் அதை மறுபடியும் வடிகட்டினால் அதிலுள்ள மண் நீங்கிவிடும். பிறகு அவ் வெல்லத் தண்ணீருடன் 1ரு டம்ளர் நீரைக் கூடுதலாகச் சேர்த்து அத்துடன் துருவிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து வெல்லவாசனை போக கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள மாவைக் கொட்டி கட்டியில்லாமல் நீர் வற்றும் வரை கிளறவும். மாவு நன்கு வெந்து நீர் வற்றியதும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கவும். பிறகு சிறிது நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொட்டி கிளறினால் திருவாதிரைக் களி ரெடி! சூட்டுடன் இருக்கும்போது சற்று குழைந்தும்; ஆறியவுடன் பொலபொல என புட்டுமாவு போலவும் இருக்கும்.
இப்படிச் செய்த திருவாதிரைக் களியை சுவாமிக்கு நிவேதனம் செய்து மற்றவர்க்கும் கொடுத்து நாமும் உண்டு மகிழலாம்.
கூட்டு எப்படிச் செய்வது?
திருவாதிரைக்களிக்கான கூட்டை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாகச் செய்வார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் 7 அல்லது 9 கொடிக்காய்களைச் சேர்த்து செய்வார்கள். கேரள மாநிலத்தவர் கிழங்கு வகைகளையும் கொடிக்காய்களையும் சேர்த்துச் செய்வர். அதிலும் குறிப்பாக காவத்தங்கிழங்கு என்னும் கிழங்கை அன்று கூட்டில் கண்டிப்பாகச் சேர்ப்பார்கள். இனி திருவாதிரைக் கூட்டு செய்யும் முறையைப் பார்ப்போம்.
இது கேரளா ஸ்டைல்!
சேனைக்கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய், அவரைக்காய், பறங்கிக்காய், மொச்சை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காவத்தங்கிழங்கு சேர்த்து, தனித்தனியே காய்கறிகளை வேகவைத்து ஒன்று சேர்க்கவும். ஒரு மூடி தேங்காய்த் துருவலையும் 10 பச்சை மிளகாயையும் மிக்ஸியில் அரைத்துலு கப் இலேசான புளித்த தயிரில் இதைக் கலந்து கொள்ளவேண்டும். இந்தக் கலவையை வேகவைத்த காய்கறிக்கலவையில் கொட்டிக் கிளறி கறிவேப்பிலை சேர்த்து, காயாத பச்சைத் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்கி இறக்கவும்.
இது நம்ம ஊரு ஸ்டைல்!
பூசணி, பறங்கி, அவரை, மொச்சை, தட்டைக்காய், புடலை, பீர்க்கு, பாகல்,  சேனைக் கிழங்கு சேர்த்து வேகவைத்து புளிவிட்டு கொதிக்கவிடவும். இதனுடன் பச்சை மிளகாய் 10 கீறிப்போட்டு உப்புப்போட்டு நன்கு புளி வாசனை போன உடன் பெருங்காயம் சேர்த்து அத்துடன் 1 அச்சு வெல்லத்தையும் சேர்ப்பார்கள். கூட்டு நீர்க்க இருந்தால் திருவாதிரைக் களிக்கு அரைத்த மாவில் 1 ஸ்பூன் எடுத்து நீரில் கலக்கி இதனுடன் சேர்ப்பார்கள். காய்கறிக் கூட்டு கெட்டியானதும் கீழே இறக்கி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்ய வேண்டும்.
இது கொங்கு நாட்டு ஸ்டைல்!
ஒன்பது காய்கறி (கொடிக்காய்கள்) வேகவைத்து நீர்ப்புளி விட்டு உப்புப் போட்டு கொதிக்க விடவும். மல்லிவிதை, கடலைப் பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றலை வறுத்து அத்துடன் வெந்தயம் சிறிதளவு சேர்த்து வறுத்து அரைத்து காய்கறிக் கலவையில் கொட்டிக் கிளறி கறிவேப்பிலைசேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெயில் தாளிதம் செய்ய மணக்க மணக்க புளிக்கூட்டு ரெடி.
இதையே சிதம்பரம், ஆற்காடு மாவட்டத்திலுள்ளோர் மேற்கண்ட கூட்டுடன் துவரம் பருப்பை, அல்லது முழுத்துவரையை, பச்சையாகக் கிடைத்தாலும் அதைச் சேர்த்து வேக வைத்துச் செய்வர்.
- சரஸ்வதி ராமசாமி,
கோயம்புத்தூர்.