Thursday 23 October 2014

மனதளவில் இளமை!!!

மனதளவில் இளமை
மௌனத்தின் நாதம்
காலதேவனின் கண்ணாமூச்சி ஆட்டத்தின் இறுதிக்கட்டம் முதுமை. தொலைந்து போனப் பொருளைத் தேடுவது போல இளமைக்கால நிகழ்வுகளை மனதளவில் தேடி அசையாமல் உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருக்கிறது பெரும்பாலான முதுமை. இது தான் பருவங்களில் கடைசி நிலை என்று சொல்லப்பட்டாலும். முதுமை என்பதுவும் ஒரு நோய்தான் என்று கூறுபவர்களும் உண்டு. நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் என்று பெருமையாகப் பேசிக் கொள்கிற எத்தனையோ முதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உடல் ஒத்துழைக்கா விட்டாலும் மனதளவில் இளமையாக இருக்கிற முதியவர்களைக் காணமுடிகிறது.
ஆனால் முதுமையைத் தள்ளிப் போட முடியும் என்று வைத்திய சாஸ்திரங்களாலும், சித்தர்களாலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அத்தகைய வழிமுறைகளை இளமையிலிருந்தே கைகொள்வது நல்ல பலனைத்தரும். மத்திம வயதிலிருந்து ஆரம்பித்தாலும் ஓரளவு பலன் கிடைக்கும் என்பதை மறுப்பதற்க்கில்லை. காலம் கடந்த பிறகு அதில் அவ்வளவாகப் பலன் கிடைக்காது. மேலும் வேறு ஏதாவது உபாதைகளுக்கு வழிவகை செய்தது போலாகிவிட வாய்ப்பு உள்ளது.
முதுமையின் அடையாளங்களாக நாம் காண்பது பல் உதிருதல், தோல் சுருங்குதல், முடி நரைத்தல் அல்லது கொட்டுதல், கூன் விழுதல், பார்வை மங்குதல் போன்றவைகளே. சிலருக்கு இவை 40 வயதுக்கு முன்பே ஏற்பட்டு விடுகிறது. சிலரோ 70 வயது தாண்டியும் மேற்கண்ட எந்த அறிகுறியும் ஏற்படாமல் இளமையாக பொலிவுடன் காணப்படுகிறார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது முதுமையும் ஒரு நோய்தான் என்று சொல்லத் தோன்றுகிறது. முதுமையை உண்டாக்குவது நரம்பு மண்டலமே. பல்வேறு பாதிப்புகளால் மூளையிலுள்ள நியூரான்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மூளையின் எடை குறைந்து விடுகிறது. நரம்புகள் தளர்வடைவதால் அதோடு சார்புடைய இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் கண்நரம்புகள் பாதிப்படைந்து பார்வை குறைபாடுகள் தோன்றுகின்றன.விழிகளின் அசைவு அல்லது நகர்வு குறைந்து விடுகிறது.செவி நரம்பு பாதிப்பால் கேட்கும் திறன் தரும் எலும்புகள் இறுகி கேட்கும் திறன் குறைகிறது. நாவில் சுவை நரம்புகள் பாதிப்பால் சுவை உணரும் திறன் குறைகிறது. நுகச்சி குறைகிறது, தொடு உணர்வு குறைகிறது. நடைத்திறன் குறைவதால் உடல் முன் புறமாக வளைந்து போகிறது.
ஞாபகத் திறன் கனிசமான அளவு குறைகிறது. ஜீரண மண்டலம்,இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றிலும் குறைபாடு தோன்றுவதால் செயல் திறன் குறைகிறது. இவையெல்லாம் வாழ்ந்து முடித்த வாழ்வுக்கு முதுமை தரும் பரிசுகள். இறுதி வரை முதுமையின் கோரப் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ள சித்தர்கள் நிறைய வழி முறைகளை சொல்லியிருக்கிறார்கள். புலன்களை அடக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி, குண்டலினியை மேலே ஏற்றி அமிர்தம் உண்டு, தரிசனம் கண்டு மரணமில்லா பெரு வாழ்வு அடைவது என்பதுவும், அதற்கு பல விதமான யோக முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பிராணாயாமம் தவறாமல் செய்வதன் மூலமும் நரை, திரை, மூப்பு இன்றி வாழலாம். அதாவது உடலில் உள்ள நரம்பு மண்டலங்கள், இரத்த ஓட்ட மண்டலங்கள் போன்ற பிற மண்டலங்களையும் வலுவடையச் செய்து
முதுமையைத் துரத்தலாம். உதாரணமாக மூலபந்தம், மஹாவேதை, எண்முக முத்திரை போன்ற சில பயிற்சிகள் நரம்புகளை வலிமைப் படுத்தும் பயிற்சிகளாகும்.
தனுராசனம்,
புஜங்காசனம்,
சலபாசனம்,
பாதாசனம்,
பவன முக்த்தாசனம்
போன்ற பயிற்சிகள் நரம்புகளுக்கும், இரத்த நாளங்களுக்கும் வலிமை சேர்த்து இளமையாகத் திகழ ஆவன செய்யும்.
அனைத்துக்கும் மேலாக உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் மிகவும் நல்லது. கார்போஹைட்ரேட் சத்து அடங்கிய தானியங்கள் 40%, புரதமடங்கிய உணவு 30%, DHA கொழுப்புச் சத்து அடங்கிய உணவுப் பொருள்கள்15%, நுண்ணூட்ட சக்தி அளிக்கும் வைட்டமின்கள் 10%, செல்கள், நரம்புகள், எலும்புகளுக்கு சக்தியளிக்கும் Fe, Ca, P, K, Na போன்ற தாதுக்கள் அடங்கிய காய், கனி, கீரை வகைகள் 5% என்ற விகிதாச்சார அடிப்படையில் தினமும் இருவேளை உணவு எடுத்துக் கொண்டாலும் இளமையோடு வாழ முடியும். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும். வாழும் போது ஆரோக்யமாகவும் இளமையோடும் வாழ்வது பெரிய விஷயமல்லவா ?