Saturday 13 September 2014

உடல்நலம்!!!

 »

ஆறாம் திணை-மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை-மருத்துவர் கு.சிவராமன்
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்–தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன். சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை என எச்சரிக்கிறார் நூலாசிரியர். ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. ‘கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்… உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம்’ என இப்படியாக மனித இனம் நோயில்லாமல் வாழ நூறு யோசனைகளை இந்த நூலில் விவரிக்கிறார். இதுதவிர எந்தக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்தினால் சக்தி கிடைக்கும்? குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன? அவை மனிதனுக்கு தரும் சத்து எத்தகையது..? அத்தனை அம்சங்களையும் தருகிறார். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில். ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் மனிதனை காக்க வந்த ஒரு ஆயுதம். வெளிச்சம் இல்லாத வீட்டில் வைத்தியன் நுழைவான் என்பது முதுமொழி. ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் இல்லாத வீட்டிலும் மருத்துவன் நுழைவான் என்பது புதுமொழி எனக் கொள்ளும் அளவுக்கு இதில் ஆரோக்கியத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படித்துப் பாருங்கள்… ஆறாம் திணை மனித சமுதாயத்துக்கு நல்ல துணை என்பது புரியும்
பதிவிறக்க
ஆறாம் திணை       

++++   +++   +++----------------------------------------------


சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-சுஜாதா ஜோசப்

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-சுஜாதா ஜோசப்
தற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்… போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.