Saturday 27 September 2014

Household Tips!!!


உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சமயங்களில் பலன் கொடுக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து எழுதியிருக்கின்றேன். யாருக்கேனும் தக்க சமயத்தில் இவை கை கொடுத்தால் மகிழ்வாக இருக்கும்!

ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து சிறிய பிரஷ் (பழைய டூத் பிரஷ்) கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் புதிது போல் மின்னலடிக்கும்.

தண்ணீரில் சிறிது பாலை விட்டு துடைத்தால் வெள்ளி நகை பளிச்சிடும். அதே போல் டூத் பேஸ்டால் கழுவினாலும் வெள்ளி நகை பளபளக்கும். சிறிதளவு புளியை கரைத்து சிறிது உப்பு, சிறிது சமையல் சோடா உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, இதில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்தால் நகை பளிச்சென பளபளக்கும்.

மழைக் காலத்தில் தீப்பெட்டிக்குள் நான்கைந்து அரிசி மணிகளைப் போட்டு வைத்தால் தீக்குச்சி உரசியவுடன் பற்றிக் கொள்ளும்.

குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) எலுமிச்சம் பழத்தின் தோலை வைத்திருந்தால் உள்ளே உள்ள நாற்றம் நீங்கி மணமாக இருக்கும்.

ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துத் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.

● எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருக்கும்போதும், தப்பித்தவறி தீக்காயம் ஏற்படலாம். எனவே, தீப்புண்ணுக்கான மருந்து சமையலறையில் எப்போதும் தயாராக இருக்கட்டும். காய்கள், பழங்கள் நறுக்கும்போதும்... புதிய பாட்டில்களைத் திறக்கும்போதும் வெட்டுக்காயம் ஏற்படலாம். எனவே, கத்தி முதலிய உபகரணங்கள் புதியனவாகவோ, அப்போதுதான் சாணை பிடிக்கப்பட்டதாகவோ இருந்தால்... நிதானமாக, கவனமாகக் கையாள வேண்டும். சமையலறையில் பாண்டேஜ் துணி எனப்படும் வலைத் துணியை ஏழெட்டு அங்குலம் நீளமுள்ள துண்டுகளாக கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வெட்டுக்காயம் ஏற்பட்டால், இந்தத் துணியை நீரில் நனைத்து, காயம்பட்ட இடத்தில் அழுத்தி சுற்றலாம். ரத்தம் வருவது நின்றவுடன், துணியை எடுத்துவிட்டு தேவையான மருந்தைத் தடவலாம். தேவையானால், மருத்துவரிடம் செல்லலாம்.
● தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியிலுள்ள சேஃப்டி வால்வையும் சரிபார்ப்பது நல்லது. இல்லையென்றால், சமைக்கும்போது ஏதாவது பிரச்னைகள் வரலாம்.
● அடுப்பின் ஒரு பர்னரில் சூடான எண்ணெய் உள்ள பாத்திரம் இருந்தால், பக்கத்தில் உள்ள பாத்திரத்திலிருந்து நீர்த் திவலைகள் அதில் சொட்டி விடாமல் பார்த்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் சடசடவென எண்ணெய் வெடித்து உங்கள் மீது தெறிக்கும். சீடை, மைதா மாவு போண்டா போன்றவை தயாரிக்கும்போது மாவு மிகவும் கெட்டியாக இருந்தாலோ, மாவில் கல் இருந்தாலோ (கல் உப்பு கூட), எண்ணெயில் பொரிக்கும் போது வெடித்து, எண்ணெய் தெறிக்க வாய்ப்பு உண்டு.
● மூன்று நான்கு பர்னர்கள் கொண்ட அடுப்பை உபயோகிக்கும்போது, அதிகம் கிளறத் தேவையில்லாத பாத்திரங்களை (உதாரணம் குக்கர், ரசச்சொம்பு) பின்புறமும், அடிக்கடி கிளற வேண்டிய பொரியல், அப்பளம் பொரிக்கும் கடாய் போன்றவற்றை முன்புறமாகவும் வைப்பதோடு பாத்திரங்களின் சைஸும் தேவையான அளவே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
● கேஸ் ஸ்டவ்வை 'சிம்'மில் வைத்தே முதலில் பற்ற வைத்து, பாத்திரத்தை அதன் மீது வையுங்கள். பிறகு, தீயை அதிகப்படுத்தி எண்ணெய் ஊற்றுவது போன்ற அடுத்தக் கட்ட வேலைகளை ஆரம்பிக்கலாம்.
● கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்து கொண்டு இருக்கும்போதே, மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்வது கூடாது. ஸ்டவ் எரியாமல் இருப்பதோடு.... கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்.
● கடுகு தாளிக்கும்போது குமிழ் வைத்த மூடி ஒன்றால் மூடியபடி தாளித்தால், அது தெறித்து விழுந்து நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்கும். குறிப்பாக, கண்கள் பாதிப்பாகாமல் இருக்கும்.
●சமையலறையில் இரண்டு கிடுக்கிகளை நல்ல நிலையில் எப்போதும் வைத்திருங்கள். அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்க இவை பயன்படும். இதற்கு பதில் புடவைத் தலைப்பு, துண்டு, காகிதம் போன்றவற்றை சூடான பாத்திரங்களை இறக்க பயன்படுத்தாதீர்கள்.
● இப்போதுள்ள தரைகளில் தண்ணீர் கொட்டினால் சட்டென்று தெரிவதில்லை. அடுப்படியிலிருக்கும் சிங்க் அருகில் ஒரு மிதியடி போட்டு வைப்பது நல்லது. தட்டு, டம்ளர் போன்ற பாத்திரங்களிலுள்ள தண்ணீரை சிலர் உதறுவதால் கீழே தண்ணீர் சிதறலாம். அவ்வப்போது முடிந்தவரை கீழே துடைத்துவிடவும். தரையில் விழுந்துள்ள காகிதம், பிளாஸ்டிக் உறைகள், சின்ன ஸ்பூன்கள் போன்றவற்றின் மீது கால் வைத்தாலும் சர்ரென்று வழுக்கிவிடும் அபாயம் உண்டு.

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.