Thursday, 18 September 2014

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!!!

மாவிலை
வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதற்குக் காரணமே இதில் உள்ள மருத்துவக் குணங்கள்தான். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து, சிறிது சிறிதாகக் கொடுத்தால் வாந்தி வருவது குறையும்.
கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால்தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.
வேப்பிலை
பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்து. வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இயற்கைக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
வேப்பந்துளிருடன் ஓமம், சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய் தீரும்.
வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து, நீர் விட்டு அரைத்து உடம்பின் மேல் தேய்த்தால் அம்மை, வியர்க்குரு, கரப்பான், சொரி, சிரங்கு மற்றும் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். * வேப்பிலை, மிளகு இரண்டையும் 8:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு பெரியவர்களுக்கும், சுண்டைக்காய் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம். மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.
வெற்றிலை
விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.
வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.
வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.
வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.
வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.
இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.
காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
துளசி:
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து மிக்க ஒர் இலை. பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும். காசநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலையும் பாதுகாக்கும். அதே நேரத்தில் மனரீதியான நோய்க்கும் பயன்படக்கூடியது.
துளசியை இளஞ்சூட்டில் அல்லது நீராவியில் காட்டினாலே சாறு கிடைக்கும். இந்தச் சாறில் 10 துளி எடுத்து, ஒரு அரிசி அளவு மிளகு சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகும்.
துளசி, மிளகு, வேப்பிலை கஷாயமாக்கிக் கொடுத்தால், சளி, உடல் வலி விரைவில் குணமாகும்.
200 மில்லி பசும் பாலில், 10 துளசி இலைகளைப் போட்டு வடிகட்டி எடுத்தால், பாலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தூய்மையான பால் கிடைக்கும்.
வெந்நீரில் இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, தலைவலி சரியாகும்.
துளசி இலை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறையாமல், உற்பத்தி மட்டும் தற்காலிகமாகத் தடைபடும். அந்த காலத்தில் ஆண்கள் பயன்படுத்தி வந்த இயற்கைக் கருத்தடை முறையாகவும் இது இருந்தது.
பெண்களுக்கு பிரசவ காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 30 மில்லி துளசி சாறைக் கொடுத்தால், வலி குறைந்து கருப்பையின் இயக்கம் அதிகமாகும்.
துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துத் தடவும்போது, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் சரியாகும்.