Thursday, 6 November 2014

விசா(visa) பெறுவது எப்படி!!!

விசா(visa) பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான வழிகாட்டி இனையதளம்...

Visa Mapper
Visa Mapper

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com) வலைத்தளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.

இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Visa Map
Visa Map


இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.