Wednesday, 5 November 2014

நார்த்தங்காய்!!!

நார்த்தங்காயும் பல்வலியும்!!

பொதுவாய் கசப்புத்தன்மை சிறிது கொண்ட நார்த்தங்காய் எனக்குப் பிடிக்கும். நார்த்தங்காயில் உப்பு ஊறுகாய், மிளகாய்த்தூள் போட்ட ஊறுகாய் செய்வதுண்டு. நார்த்தங்காயை சற்று பெரிய துன்டுகளாய் அரிந்து வேக வைத்து, மிளகாய் அரைத்துப்போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி உப்பும் சேர்த்து செய்யும் ஊறுகாய் அத்தனை ருசியாக இருக்கும். தயிர் சாதத்திற்கு அமிர்தமாய் ருசிக்கும். இதைத்தவிர நார்த்தங்காய் ஜூஸ் எடுத்து, சிறிது எலுமிச்சை சாறும் வெல்லமும் அல்லது சீனியும் கலந்து குடிப்பது வழக்கம். எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதமும் நன்றாக இருக்கும்.



மற்ற‌படி, அதன் மருத்துவப்பயன்கள் சிலவற்றையும் அறிந்திருக்கிறேன். ஆனால் ரொம்பவும் வித்தியாசமாக ஒரு பலனை சமீபத்தில் தான் அறிந்தேன். 

20 வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு பழைய புத்தகத் தொகுப்பில்  படிக்க நேர்ந்த ஒரு மருத்துவக்குறிப்பு இது. பல்வலிக்கு பல மருத்துவக்குறிப்புகள் படித்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. 

நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணி, கிராமத்திற்குச் சென்றபோது பல்வலி வர, அங்குள்ள‌வர்கள் சொன்ன கை வைத்தியம் இது. உடனேயே வலியும் போய் பற்களும்  வலியில்லாமல் வலுவுடன் இருப்பதை உணர்ந்து அடுத்தவர்களுக்கும் பயன்பட எழுதிய விபரம் இது. 

முன்பெல்லாம் உப்பு நார்த்தங்காய் போட்டு வீட்டில் பீங்கான் ஜாடியில் ப்த்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும். 


பல் வலியின் போது, எந்தப் பல் வலிக்கிறதோ அந்த பல் முழுவதும் படுவது போல ஒரு உப்பு நார்த்தங்காய் துன்டை அமுக்கி வைத்துக்கொன்டு அப்படியே படுத்துறங்கி விடலாம். காலை வலி இருக்காது.காலை எழுந்ததும் வாய்க்கொப்பளித்து விட்டு உப்பு கலந்த வெதுவெதுப்பான வெந்நீரில் வாயைக்கொப்பளிக்க வேன்டும். இது போல 3 நாட்கள் செய்து வந்தால் நார்த்தையிலிருக்கும் உப்பும் கசப்பும் பல்வலிக்குக் காரணமான பூச்சிகளைக் கொன்று பற்களை முன்னை விட வலுவானதாக மாற்றி விடுகிறதாம். 

துபாயிலுள்ள என் உறவினருக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அடுத்த வாரமே அவர்கள் ஃபோன் செய்து, தனக்கு திடீரென்று பல்வலி வந்ததாகவும், இந்த வைத்தியத்தை செய்ததுமே பல்வலி காணாமல் போய்விட்டதாகச் சொன்னதும் எனக்கு ஏதோ அவார்ட் கிடைத்தது போல அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. 
உப்பு நார்த்தங்காய் செய்யும் விதம்:
நார்த்தங்காயை கழுவி துடைத்து, சுருள் சுருளாக நறுக்கவும். தனியாக வராமல் ஸ்பிரிங் போல் வரவேண்டும்.
கல் உப்பை சுருளுக்குள் திணித்து, 3 நாட்கள் அப்படியே ஜாடியில் போட்டு வேடு கட்டி வைக்கவும். தினமும் குலுக்கி மட்டும் விடவும்.
நான்காம் நாள் தண்ணீரிலிருந்து (உப்பு கரைந்து தண்ணீராக இருக்கும்) எடுத்து காயை மட்டும் வெய்யிலில் காய வைக்கவும்.
மாலையில் திரும்ப எடுத்து, அந்த தண்ணீருக்குள் போட்டு குலுக்கி வைக்கவும்.
இது போல் தண்ணீர் வற்றும் வரை செய்யவும்.
பிறகு வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். மேலே உப்பு பூத்து விடும். அப்போது எடுத்து ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.





நார்த்தங்காயின் மருத்துவ பலன்கள்:

இந்த ஊறுகாயில் ஒரு துண்டெடுத்து உப்பை நன்கு கழிவிய பின் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குண‌மாகும்.
நார்த்தங்காயை எந்த விதத்திலும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுத்தமாகும்.
பசியைத்தூன்டும்.
வாயுக்கோளாறை நீக்கும்.
அடிக்கடி ஏப்பம் வருவதுடன் இது சீரணமாக நெடு நேரமாகும். ஆனால் நார்த்தங்காயின் மருத்துவப்பலன்கள் அதிகம்.