Wednesday, 5 November 2014

அமுத மொழிகள்!!!

அமுத மொழிகள்!!

சமீபத்தில் சுவாமி சிவானந்தர் சொன்ன சில அறிவுரைகளைப்படிக்க நேர்ந்தது. அவை எல்லாமே பொன்வரிகள் தான். மொத்தத்தில் எல்லா துன்பங்களுக்கும் மனம் தான் காரணம் என்கிறார். யோசனை செய்து பார்க்கையில் அது உண்மை தான் என்று நமக்கும் புரிகிறது. ஆனால் பல சமயங்களில் அறிவை பாசம், அன்பு, அக்கறை போன்ற உணர்வலைக‌ள் ஜெயித்து விடுகின்றன. அப்புறம் அல்லல்களுக்குக் கேட்பானேன்! இதோ அவர் சொன்ன சில அறிவுரைகள்! படித்து ரசியுங்கள்!

மன அமைதி பெற ஸ்ரீ சுவாமி சிவானந்தர் சொன்ன அறிவுரைகள்:

நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் செய்வது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் ஏன் அல்லலுற வேண்டும்?
 
யாரையும் எதையும் குறை கூறாதீர்கள். பிறருக்குத்தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கில்லை. உங்கள் மன அமைதியைப்பாதுகாக்க உங்கள் சொந்த வேலையில் கவ‌னம் செலுத்தினால் மட்டும் போதும். 

பயனுள்ள‌ நன்மை பயக்கும் விஷயத்தை செய்ய நாட்கணக்கில் யோசிக்காதீர்கள். அதிக யோசனை இறுதியில் நல்ல காரியங்களை செய்ய விடாமலேயே தடுத்துவிடும். 

ஆக்கப்பூர்வமான காரியங்களில் இடைவெளி ஏற்படுவது கூட, சில கவனக்குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களைக் கீழே தள்ளி விடும். நேரத்தைப் பொன்போல பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவழியுங்கள்.

நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்க வேன்டாம். மானசீக பிரார்த்தனைகள், நல்ல நூல்களைப்படிப்பதில் செலவழியுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில் தான் ஆரம்பிக்கிறது. கடுஞ்சொற்களும் தீய செயல்களும் மனதில் தான் உதிக்கின்றன. எனவே மனதை சுத்தமாக வைத்திருங்கள். வாழ்க்கையென்னும் நதி ஸ்படிகம் போல தூய்மையாகப் பாயும்.
 
உங்கள் தேவைகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள். பிறகு பிச்சைக்காரனைப்போல திரியாதீர்கள். உங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல வாழுங்கள். 

காரணத்துடன் மட்டுமே பேசுங்கள். எல்லாவிதமான தேவையற்ற‌ பேச்சையும் தவிருங்கள். அளந்தே பேசுங்கள். களங்கமற்ற‌ நல்ல நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ள‌ப்பட்டு பிரிவை உண்டாக்குகின்றன. 
 
உங்களிடம் கேட்கப்பட்டாலன்றி எவருக்கும் புத்திமதி சொல்லப்போகாதீர்கள். 

எப்போதும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அது எப்போதுமே உருப்படியான விளைவுகளைத்தராது. மற்ற‌வர்களைப் புண்படுத்துவதுடன் சில சமயங்களில் உறவுகளிடையே தேவையற்ற‌ விவாதம் பிரிவையே உண்டாக்கி விடுகிறது.