Wednesday 1 October 2014

கொலு(Divine Presence)!!!



நவராத்திரி என்பது முப்பெருந்தேவியர்களான துர்கா(பார்வதி), லெக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடப்படும் விழா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்த “தசரா” பண்டிகையை வெவ்வேறு முறைகளில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில், படிகளில் பொம்மைகள் வைத்து, பூஜைகள் செய்து நவராத்திரியைக் கொண்டாடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று மறுநாள் நவராத்திரி விழா தொடங்கும். 

அமாவாசை அன்றே கொலு வைக்கத் தேவையான படிகளைத் தயார் செய்து, அதற்கு மேல் வெள்ளைத் துணி விரித்து பொம்மைகள் அடுக்கி பூஜைக்கு தயார் நிலையில் வைத்து விடுவார்கள். ஒன்பது படிகள் வைப்பது முறையாகும், ஆனால் அவரவர்கள் வசதிக்கேற்ப ஐந்து, ஏழு, ஒன்பது என்று படிகளை வைத்துக் கொள்ளலாம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.  
ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

கொலுவில் முக்கியமானது கலசம். தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்! நிஜத்தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளா‌ஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும்.. ப்ளா‌ஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்.

தங்க நிற சம்கிகள் சிறு இலை வடிவில் கிடைக்கும் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள்.குடத்தின் வாய்பகுதிக்கு வெள்ளி நிற லே‌ஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள்.


  • முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
  • இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
  •  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
  • நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
  •  ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
  • ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
  • ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
  •  எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
  •  ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.


கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ தொட்டியிலோ கேழ்வரகு கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய்மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அ‌ல்லது சதுர அ‌ல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புது‌ப் பொலிவினைத்தரும்!


பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பார்ம் போல தெரியும். உலர்த்திய காபிப்பொடியால் தார்சாலை நடுவில் அமைக்கலாம்.


சிறு ப்ளா‌‌ஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டி செடிகள் செய்யலாம் அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.



பு‌த்தக‌த்‌தி‌ன் அ‌ட்டை‌ப் ப‌க்க‌த்‌தி‌ல் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் கவனமாய் ஒட்டி கொலு முகப்பில் fவைக்கலாம்.

கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.