Friday, 15 August 2014

Variety Cooking Tips!!!

தேங்காய் அல்வா

        ஒரு முற்றியத் தேங்காயைத் துருவி 50 கிராம் பச்சரிசி சேர்த்து நைசாக அரைக்கவும். 1/2 கிலோ வெல்லத்தில் 1/2 டம்பளர் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சயும். கம்பி பதம் வந்ததும் அரைத்தத் தேங்காயைச் சேர்த்து அல்வா பதம் வரும்வரை நன்கு கிளறவும். சிறிது ஏலக்காய்த் தூள், 4 ஸ்பூன் நெய் விட்டு இறக்கி வைக்கவும்.

                                                                                    பந்தி 2
தேங்காய் பர்பி

      ஒரு நெற்றுத் தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். 1/2 கிலோ சீனியைக் கம்பி பாகு வைத்து அதி வறுத்தத் தேங்காயைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். மைசூர்பாகு பதம் போல் பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியபின் வில்லை போடவும். மேலே முந்திரி, திராக்ஷை தூவி, கலர் பவுடர் சேர்த்தால் கூடுதல் சுவை.

                                                                                  பந்தி 3
பால் பர்பி

      ஒரு முற்றியத் தேங்காயை கறுப்பு விழாமல் துருவவும். 1/2 லிட்டர் பால், 1/2 கிலோ சீனி, ஏலக்காய்தூள், தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். பால்கோவா பதத்தில் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் ஊற்றி வில்லை போடவும். முந்திரி, திராக்ஷை மேலே தூவவும். "எல்லோ" பவுடர் சிறிது சேர்க்கலாம்.

  
இல்லத்தரசிகள் கவனத்திற்கு

        மேற்படி இனிப்புகள் எளிமையாகச் செய்யக்கூடியவை. பதம் தவறி வரும் என்ற பயம் இல்லா இனிப்புகள். வளரும் குழந்தைகளுக்குக் குறைந்த செலவில் நிறைந்த ஊட்டம் தரும் இனிப்புகள்.




                                                                          சமையல் குறிப்பு: 5

அறுசுவை ஜீகல் பந்தி

        லீவு நாட்களில் புதுவிதமான டிபன் செய்தால் ஆராஅமர ருசித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். விதம் விதமாக இடியாப்பம் செய்வோமா? இடியாப்ப மாவு கடையிலேயே கிடைக்கிறது. இதில் 1/4 கிலோ மாவைப் பிழிந்து வேக வைக்கவும். (இடியாப்பமே ரெடிமேடாகவும் கிடைக்கிறது)

  
                                                                                        பந்தி 1
பாகு இடியாப்பம்

        200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவலுடன் 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும். வேகவைத்தக் கடலைப்பருப்பு 20 கிராம் சேர்த்து இளம்பாகு பதத்தில் இடியாப்பம் சேர்த்துக் கிளவும்.

                                                                                       பந்தி 2
ஜீனி இடியாப்பம்

        100 கி. ஜீனி, 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், சிறிது கேசரி பவுடர், நாலு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி, திராக்ஷையைத் தூவவும்.

                                                                                      பந்தி 3
பருப்பு இடியாப்பம்

      100 கி. பயத்தம் பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நான்கு பச்சை மிளகாய் தாளித்து, வெந்த பருப்பு, ஒரு மூடி தேங்காய்த்துருவல், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து இடியாப்பத்தில் சேர்க்கவும்.

                                                                                பந்தி 4
உப்புமா இடியாப்பம்

      கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், பெருங்காயம், 100 கிராம் நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் தாளித்து 1/2 ஸ்பூன் உப்பு கறிவேப்பிலை சேர்த்து இடியாப்பத்துடன் கிளறவும்.

            இது தவிர புளிசாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்வது போல் சாதத்திற்குப் பதிலாக இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்

இல்லத்தரசிகள் கவனத்திற்கு


      இதுபோன்ற இடியாப்பம் செய்து அசத்தினால் உறவுகளில் இடியாப்ப சிக்கலாய் ஏற்படும் சிக்கல்கள் மறையும்; குதூகலம் பெருகும்.



 
                                                    சமையல் குறிப்பு: 6

அறுசுவை ஜீகல் பந்தி

        சுவையான பஜ்ஜி வகைகள் செய்வோமா?

                                                                        பந்தி 1
\
 கடலை மாவு பஜ்ஜி

        100 கிராம் கடலை மாவு 50 கிராம் பச்சரிசி மாவு, ஒரு ஸ்பூன் மைதா மாவு, இரண்டு சிட்கை சோடா உப்பு ஒன்றாகக் கலக்கவும். 5 மிளகாய் வற்றல் பெருங்காயம் - உப்பு சேர்த்து அரைத்து மாவில் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாழைக்காய் - உருளைக்கிழங்கு - கத்தரிக்காய் - வெங்காயம் சிலைசுகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.

                                                                                               பந்தி 2
கோதுமை மாவு பஜ்ஜி

        கடலை மாவு அலர்ஜி உள்ளவர்கள் அதற்கு பதிலாக கோதுமை மாவில் மேற்படி முறையில் பஜ்ஜி செய்யவும்.

                                                                                          பந்தி 3
கதம்ப பஜ்ஜி

      வாழைக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய்கீற்று, முட்டைக்கோஸ், கேரட், கத்தரிக்காய் அனைத்தையும் நீளவாட்டில் நைசாக நறுக்கி மேற்படி மாவில் பிசிறி எண்ணெயில் தூவி சிவக்கப் பொரித்து எடுக்கவும். ஒவ்வொரு ஈடு பொரிக்கும் போதும் தனித்தனியே காய்கறி கலக்கவும். மொத்தமாகக் கலந்தால் மாவு நீர்த்துப் போய் விடும்.

சட்னி
      அரை மூடித் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். (புளி, மிளகாய் வேண்டாம்). கடுகு, வெங்காயம், உ.பருப்பு, கறிவேப்பிலைத் தாளிக்கவும். இது ஈசியாகச் செய்யும் எளிமையான டிபன். மைதா கலப்பதால் எண்ணெய் அதிகம் குடிக்காது. எனவே பயமின்றி 'கொலஸ்ட்ரால்' உள்ளவர்களும் அடிக்கடி சாப்பிடலாம்.


                                                சமையல் குறிப்பு: 7

அறுசுவை ஜீகல் பந்தி

       வாழைத்தண்டு! இது மிகவும் மருத்துவ குணம் கொண்டது. இதை அதிகம் சமைப்பது இல்லை. இதில் விதவிதமாக ஐட்டங்கள் செய்வோமா?

                                                                                          பந்தி 1
வாழைத்தண்டு பச்சடி

        நைசாக நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், 2 பச்சை மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கொட்டைப் பாக்கு அளவு புளி கரைத்துவிட்டு 50 கிராம் வெல்லம் சேர்க்கவும். பின்னர் அரை மூடி தேங்காய் அரைத்து அத்துடன் சிறிது பச்சரிசி மாவு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் கடுகு உ.பருப்பு தாளிக்கவும்.

                                                                                        பந்தி 2

வாழைத்தண்டு மோர்க் கூட்டு

      நறுக்கிய வாழைத்தண்டு ஒரு கப், சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் அரைமூடி தேங்காய் அரைத்து சிறிது பச்சரிசி மாவு சேர்த்து இரண்டு பச்சை மிளகாய் 1/2 ஸ்பூன் மிளகு, சீரகம், தனியா தட்டிப் போட்டு நன்கு கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். ஆறியபின் 100 மில்லி தயிர் சேர்க்கவும்.

                                                                                       பந்தி 3
வாழைத்தண்டு துவட்டல்

        2 ஸ்பூன் பயத்தம் பருப்பை ஊறவைக்கவும். இரண்டு வற்றல், மிளகாய், கடுகு, உ.பருப்பு தாளித்து நறுக்கிய வாழைத் தண்டைப் பிசைந்து சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி, ஊறிய ப.பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். வெந்ததும் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி எடுக்கவும். முன்னதாகப் பிசைந்து வைத்தால் தண்ணீர் வடிந்து சத்து வெளியேறிவிடும். சாம்பாரிலும் வாழைத்தண்டைப் போடலாம்.


இல்லத்தரசிகள் கவனத்திற்கு

      நார்ச்சத்து மிகுந்த வாழைத்தண்டு மருத்துவ குணம் கொண்டது. இதன் சாறைத் தொடர்ந்து பருகிவர சிறுநீரகக்கல் கரையும். எனவே வாரம் ஒருமுறை சாப்பிட்டு வருவது நலம்.

  
                                                சமையல் குறிப்பு - 8

அறுசுவை ஜீகல் பந்தி

      குடும்பத்தினர் மனம் மகிழும் வண்ணம் மகிழம்பூ முறுக்கு செய்வோமா?

                                                                            பந்தி 1


முள்ளு முறுக்கு - மகிழம்பூ முறுக்கு

      ஒருபடி பச்சரிசியை கழுவி ஊற வைத்து உலர்த்தி மிக்ஸியில் இடித்து நைசாக சலித்து ஆவி வரும் வரை வறுக்கவும். அத்துடன் சிவக்க வறுத்து அரைத்த பயத்தம் மாவு 150 கி கலக்கவும். ஒரு முற்றிய தேங்காயைத் துருவி 1/2 லிட்டர் பால் எடுக்கவும். அதில் 1 ஸ்பூன் உப்பு, 4 ஸ்பூன் எள், சிறிது ஏலக்காய், 200 கி. சீனி சேர்த்து கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் மாவில் ஊற்றிப் பிசைந்து மகிழம்பூ அச்சில் பிழிந்து பிஸ்கட் நிறம் வந்ததும் எடுக்கவும். சூடு ஆறிய பின்னர்தான் மொரமொரப்பு வரும்.

                                                                                  பந்தி 2
சீப்பு முறுக்கு

      மேற்படி மாவை சீப்பு முறுக்குக் கட்டையில் எண்ணெய் தடவி மெல்லிய வட்டமாய்த் தட்டவும். 2 முனையையும் குழாய் போல் ஒட்டி 1/2 மணி நேரம் உலர விடவும். பின்னர் பொரிக்கவும். கொய்யா இலையின் பின்புறத்தில் எண்ணெய் தடவி மேற்படி முறையில் செய்யலாம்.

                                                                          பந்தி 3
இனிப்பு பிஸ்கட்
      மேற்படி, மாவில் முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா நறுக்கி சேர்த்துப் பிசைந்து சுத்தமான துணியில் வட்டமாகத் தட்டி உலர்ந்த பின் பொரித்து விடவும்.

  இல்லத்தரசிகள் கவனத்திற்கு

        மேற்படி ஐட்டங்களை அடிக்கடி செய்து அசத்தினால் குடும்பத்தினர் மனம் மகிழும். வீட்டில் அமைதி கொஞ்சும்.

 

                                            சமையல் குறிப்பு - 9

அறுசுவை ஜீகல் பந்தி

        செட்டி நாட்டுப் பலகாரமான மனோலம் செய்வோமா? மற்றும் அப்பம் செய்வோமா?

                                                                              பந்தி 1
மனோலம்

            1/2 கிலோ பச்சரிசி 50 கிராம் ப.பருப்பு சேர்த்து மிஷினில் நைசாக அரைக்கவும். அரைத்த மாவை இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்துக் கரைத்து. பூந்தியாக தீத்தவும். நன்கு மொறு மொறு என்று காராபூந்தி பதத்தில் அரித்து எடுத்து பேப்பரில் கொட்டவும்... அதிக எண்ணெயை பேப்பர் உறிஞ்சிவிடும்.

            பின்னர் ஒரு தேங்காயை பல் பல்லாக அரிந்து சிவக்க வறுக்கவும். 100 கிராம் எள்ளை வறுத்துத் தேய்த்துப் புடைக்கவும். 1/2 கிலோ வெல்லத்துடன் வறுத்த தேங்காய் 2 ஏலக்காய் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கம்பிப் பாகு வைக்கவும். பாகில் வறுத்த எள், 1/4 கிலோ பொட்டுக்கடலை இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்த காராபூந்தியைக் கொட்டிக் கிளறவும். கார்த்திகைக்கு அவல் கிளறுவது போல கரகர மொர மொர சுவையும் இனிப்பும் கலந்த வித்தியாசமான இனிப்பு இது. இரண்டு வாரம் வரை கெட்டுப் போகாது.

                                                                                   பந்தி 2
அப்பளம்
      பச்சரிசி 100 கிராம், புழுங்கல் அரிசி 100 கிராம், து. பருப்பு 20 கிராம், ஒரு மூடி தேங்காய், 2 ஏலக்காய் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் காய்ந்த எண்ணெயில் ஒரு கரண்டி எடுத்து விடவும். மேலே முறுகலாக வந்ததும் எடுத்து விடவும். ஒன்று ஒன்றாகத் தான் ஊற்ற வேண்டும். சற்றே எண்ணை குடிக்கும். எண்ணெய் வேண்டாதவர்கள் குழிப்பணியார சட்டியில் செய்து சாப்பிடலாம்.

  குறிப்பு

        இவை இரண்டும் நகரத்தார் வீடுகளில் சிறப்பு மிக்க ஐட்டங்கள்.

 

                                                    சமையல் குறிப்பு - 10

அறுசுவை ஜீகல் பந்தி
      சத்து நிறைந்த சூப் தயாரிப்போமா? இதை சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். வயதானவர்கள் இதை காலை நேர உணவாகவே சாப்பிடலாம். இளையவர்கள் சப்பாத்தியும் சூப்பும் சாப்பிடலாம். சப்பாத்தி என்றாலே சிலருக்கு அலர்ஜி. மிருதுவான சப்பாத்தி செய்து அசத்துவோமா? கூடவே எளிமையான சைட்டிஷ்ஷாக டால் (பருப்பு).

                                                                                  பந்தி 1
வெஜிடபிள் சூப்

      தக்காளி, கோஸ், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தலை 4 ஸ்பூன் துருவல். இரண்டு கொத்து முருங்கைக் கீரை. 50 கிராம் நறுக்கிய வெங்காயம். கீறிய ப. மிளகாய் ஒன்று, 4 ஸ்பூன் ஓட்ஸ், அல்லது சம்பா கோதுமை குருணை, அல்லது அவல் இவை எல்லாவற்றையும் 4 டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைய வேகவிடவும். வெந்ததும் 1/2 ஸ்பூன் மிளகு தட்டிப் போட்டு ஒரு துண்டு இஞ்சி, பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சாப்பிடவும்.

                                                                                          பந்தி 2
சப்பாத்தி

        100 கிராம் கோதுமை மாவு இரண்டு சிட்டிகை உப்பு, 1/2 ஸ்பூன் ஜீனி, 2 ஸ்பூன் தயிர் அனைத்தையும் சேர்த்து ஒரே முறையில் தண்ணீர் விட்டுத் திரட்டி ஈரத்துணியில் மூடி நான்கு மணிநேரம் கழித்து சப்பாத்தி இட்டு இருப்புச் சட்டியில் போட்டு எடுக்க தோசையை விட மிருதுவான சப்பாத்தி ரெடி.

                                                                                          பந்தி 2
டால்

      50 கிராம் பயத்தம் பருப்புபை குழைய வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் மஞ்சள் பொடி, உப்பு, 2 ப. மிளகாய், 50 கிராம் சிறிய வெங்காயம் நறுக்கி கடுகு தாளித்து வதக்கிச் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்த்து சிறிது ப.அரிசி மாவு கரைத்து விடவும். தேவைப்பட்டால் காரட் துறுவல் சேர்க்கவும்.


                                        சமையல் குறிப்பு - 11
அறுசுவை ஜீகல் பந்தி 

வாழைக்காயில் சிப்ஸ், ரோஸ்ட் அல்லாமல் வேறு ஐட்டங்கள் செய்வோமா?

  பந்தி 1: வாழைக்காய் பொரியல்

        1 முற்றிய வாழைக் காயைத் தோல் சீவி இரண்டாக வகிர்ந்து பிஸ்கட் கனத்தில் நறுக்கிக் கழுவவும். 1/4 லிட்டர் கழுநீரில் 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு நீரை வடிக்கவும். கடுகு, உ. பருப்பு, நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் 4 ஸ்பூன், 1 பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளித்து வாழைக்காயைச் சேர்த்துப் புரட்டவும். பொலபொலவென்று வேக வைத்தப் பருப்பு ஒரு கப், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

  பந்தி 2: வாழைக்காய்ப் பொடிமாஸ்


       1 வாழைக்காயை முழுசாகக் குக்கரில் வேக வைக்கவும். தோல் உரித்து சற்றே மசித்து உப்பு சேர்த்துப் பிசிறவும். 50 கிராம் சின்ன வெங்காயம், 4 பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் நறுக்கி கடுகு, உ. பருப்புடன் தாளித்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், வாழைக்காய் பொடியைச் சேர்த்துப் புரட்டவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

  பந்தி 3: வாழைக்காய் கதம்ப அவியல்

        வாழைக்காய் ஒன்று, சர்க்கரை வள்ளிக்கிழங்கு 100 கிராம், பறங்கிப்பழக் கீற்று நூறு கிராம் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கி 1/2 லிட்டர் கழுநீரில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து. நன்கு வேகவைக்கவும். வெந்ததும் 4 ஸ்பூன் வெல்லத் தூள் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் ஒரு மூடி தேங்காயை அரைத்து கடைசியாக 4 சின்ன வெங்காயம், சிறிது சீரகம் சேர்த்து லேசாகத்தட்டி 1 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வெந்தகாயில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கடுகு, உ, பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

                                                சமையல் குறிப்பு - 12

அறுசுவை ஜீகல் பந்தி

        புதுவிதமாக காரக் கறிகள் செய்வோமா?

பந்தி 1: முள்ளங்கி உசிலி

        100 கிராம் முள்ளங்கியைக் கழுவி கட்டையில் துருவிக் கொள்ளவும். ஊறவைத்த து.பருப்பு 4 ஸ்பூன், மிளகாய் வற்றல் 4, உப்பு சேர்த்து அரைத்து முள்ளங்கியில் பிசிறவும். சிறிது மஞ்சள் பொடி சேர்க்கவும். 100 கிராம் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, கடுகு, உ, பருப்பு தாளித்து அனைத்தையும் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும். பச்சைக் கொத்து மல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.

  பந்தி 2: உருளைக்கிழங்கு உசிலி

      100 கிராம் உ. கிழங்கைத் தோல் சீவிக் கட்டையில் துருவி கழுவவும். 100 கிராம் பெரிய வெங்காயம் சேர்த்து மேற்படி முறையில் செய்யவும்.

  பந்தி 3: வாழைக்காய் உசிலி

       1 முற்றிய வாழைக்காயைத் தோல் சீவி கட்டையில் துருவிக் கொள்ளவும். அத்துடன் 100 கிராம் பெரிய வெங்காயம் நறுக்கிச் சேர்த்து மேற்படி முறையில் செய்யவும்.

  பந்தி 4: வாழைப்பூ உசிலி

        வாழைப்பூவை நறுக்கி அரை வேக்காடு வேக வைக்கவும். வெங்காயம் சேர்க்காது மேற்படி முறையில் செய்யவும்.

       பந்தி 5: கொத்தவரங்காய் உசிலி

        100 கிராம் கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி அரை வேக்காட்டில் வேகவைத்து வெங்காயம் சேர்காது செய்யவும்.

        பீன்ஸையும் இதேபோல் செய்யலாம்.

  பின் குறிப்பு

        மேற்படி உசிலிகளை சாதத்தில் எண்ணெய் விட்டுச் சாப்பிலாம். ரசம் சாதம், மோர்க்குழம்பு சாதத்திற்கு சைடிஷ்ஷாகாவும் உபயோகிக்கலாம்.
                              சமையல் குறிப்பு - 13

அறுசுவை ஜீகல் பந்தி

      பாரம்பரிய விருந்தில் பச்சடிக்கு முக்கியப் பங்கு உண்டு. பச்சடி வகைகள் பார்ப்போமா?

பந்தி 1: மாங்காய் பச்சடி

        1/4 கிலோ மாங்காயை தோல் சீவி சிலைஸ்களாக செதுக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் பொடி, 4 ப.மிளகாய், செதுக்கிய மாங்காய் அனைத்தையும் 1 டம்ளர் தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். வெந்ததும் 100 கி. வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் 1/2 மூடி தேங்காயை அரைத்து 1 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். 2 நிமிடம் கொதித்தபின் கடுகு, உ.பருப்பு தாளிக்கவும்.

  பந்தி 2: தக்காளிப் பச்சடி

        1/4 தக்காளிப் பழத்தை மேற்கூறிய வகையில் செய்யவும்.

  பந்தி 3: வாழைத்தண்டு பச்சடி


      1/4 கிலோ இளம் வாழைத்தண்டை நைசாக நறுக்கி 2 ப.மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். வெந்ததும் எலுமிச்சம் பழ அளவு புளி கரைத்து விட்டு 100 கிராம் வெல்லம் சேர்க்கவும். கரைந்ததும் 1/2 மூடி தேங்காய் அரைத்து, 1 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். கடுகு, உ.பருப்பு தாளித்து இறக்கவும்.

  பந்தி 4: பூசணிக்காய் பச்சடி

        1/4 கிலோ பிஞ்சு பூசணிக்காயை பொடியாக நறுக்கி மேற்படி முறையில் செய்யவும்.

  பந்தி 5: வெண்டைக்காய் பச்சடி

       1/4 கிலோ பிஞ்சு வெண்டைக்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி நன்கு வதக்கவும். 4 ப.மிளகாய், சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். வெந்ததும் எ.பழ அளவு புளி கரைத்து விட்டு 100 கி. வெல்லம் சேர்க்கவும். கரைந்ததும் தேங்காய் அரைத்து ப.மாவு சேர்த்து கரைத்து விட்டுத் தாளிக்கவும்.

                                               சமையல் குறிப்பு - 14

அறுசுவை ஜீகல் பந்தி

        உருண்டைக் குழம்பு செய்வது சற்றே 'ரிஸ்க்' ஆன விஷயம். எனவே இதனை இளைய தலைமுறையினர் செய்யத் தயங்குகின்றனர். எளிமையாகச் செய்து பார்ப்போம். இதன் சுவை அதிகம். எனவே அனைவரும் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.

  பந்தி 1: உருண்டைக் குழம்பு

        து. பருப்பு 100 கிராம், க.பருப்பு 100 கிராம் ஊற வைத்து சிறிது உப்பு, 2 வற்றல் சேர்த்துக் கெட்டியாகவும், நைசாகவும் அரைக்கவும். 200 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் பூண்டு நைசாக நறுக்கிச் சேர்த்து, ஒரு மூடி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி, உருண்டையை உருட்டி வேக விடவும். 50 கிராம் புளியை 3/4 லிட்டர் கழிநீரில் கரைத்து 4 ஸ்பூன் மிளகாய்த் தூள் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு வாசனை வரும் வரை மிதமானத் தீயில் கொதிக்க விடவும். நைசாக அரிந்த சின்ன வெங்காயம் ஒரு கை கறிவேப்பிலை, வெந்தயம் 1 ஸ்பூன், கடுகு 1 ஸ்பூன், து.பருப்பு 1 ஸ்பூன் தாளித்து, எலுமிச்சம்பழ அளவு தேங்காய் அரைத்து விட்டு நன்கு கொதித்தபின் இறக்கி வைக்கவும். வடகம் தாளித்தால் கூடுதல் சுவை.

  பந்தி 2: புளிக்குழம்பு

        பிஞ்சு கத்திரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய். இதில் ஏதோ ஒரு காயுடன் 50 கிராம் பூண்டு வதக்கிச் சேர்த்து மேலே கூறியபடி உருண்டைக்குப் பதிலாக சேர்த்து மேற்படி முறையில் தாளிக்கவும். சுட்ட அப்பளம் அல்லது வத்தல், வடகம், அப்பளம்ப்பூ பொரித்தால் செம கூட்டணி. மேற்படிக் குழம்பு வகைகள் செய்யும்போது சாதம் கொஞ்சம் அதிகமாக வைக்க வேண்டும்.

                                     சமையல் குறிப்பு - 15

அறுசுவை ஜீகல் பந்தி

        இது மாங்காய் சீசன். எனவே புளிக்காமல் புதுவிதமான ஐட்டங்கள் செய்வோமா?

  பந்தி 1: மாங்காய் பொரித்த குழம்பு

        புளிப்பு, நார் இல்லாத மாங்காய் 1/4 கிலோ. இதனை கொட்டையுடன் சிறுசிறு துண்டுகளாக 1/2 லிட்டர் கழுநீரில் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்க விடவும். வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு 100 கிராம், ஒரு மூடி தேங்காய் அரைத்த விழுது, 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துக் கரைத்து விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் தாளிக்கவும். இதை நெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடு டிஷ்ஷாகவும் உபயோகிக்கலாம்.

  பந்தி 2: மாங்காய் காரக்குழம்பு

       நார், புளிப்பு இல்லாத ஒரு மாங்காயைத் தோல் சீவி சிலைசாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கவும். நன்கு வதங்கியபின் எலுமிச்சை அளவு புளியை கடுகு, வெந்தயம், க.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 1 ஸ்பூன் வெந்தயம், சிறிது மஞ்சள், 4 மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் குழம்பில் சேர்த்து வாசனை வந்ததும் இறக்கி வைக்கவும். சுட்ட அப்பளம் சிறந்த கூட்டணி.

  பந்தி 3: மாம்பழ ஜாம்

        1/4 கிலோ மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் ஓட்டவும். 1/4 கிலோ சீனியில் 2 ஏலக்காய் சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் விட்டுப் பாகு காய்ச்சவும். கம்பி பாகு வந்ததும் அரைத்த மாம்பழத்தைக் கொட்டி நன்கு கிளறி இறக்கவும். இதை அப்படியே சாப்பிடலாம். காய்ச்சி ஆறிய பாலில் கலந்து குளிர வைத்துச் சாப்பிடலாம். பிரட் டோஸ்ட் செய்து நடுவில் இந்த ஜாமை வைத்து சாண்ட்விச்சாகச் சாப்பிடலாம்.

                                        சமையல் குறிப்பு - 16

அறுசுவை ஜீகல் பந்தி

தற்போது 'கூல்டிரிங்ஸ்' கடைகளில் கேப்பைக் கூழை 'கூழ்டிரிங்ஸ்' என்ற பெயரில் பானமாக விற்கிறார்கள். நாம் கூழையே டிபனாகக் கொடுத்த அசத்துவோமா?

  பந்தி 1: புளிக்கூழ்

        1/4 கி. புழுங்கல் அரிசியை ஊற வைத்து நைசாகக் கிரைண்டரில் அரைக்கவும். 50 கிராம் புளியை 3/4 லிட்டர் தண்ணீர் விட்டுக் கரைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும். 6 மிளகாய் வற்றல் 1 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் க. பருப்பு, 4 ஸ்பூன் நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்த்து உப்பு போடவும். 1 ஸ்பூன் வெந்தயம் 1 துண்டு மஞ்சள் எண்ணெய் விடாது வறுத்துப் பொடித்து போட்டு மாவைக் கைவிடாமல் வதக்கி கூழ் மாதிரி அடுப்பில் ஏற்றிக் கிண்டவும். கெட்டியாக வந்ததும் 4 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டுக் கிளறி 10 நிமிடம் குறைந்த தீயில் மூடி வைக்கவும். பின் தட்டில் ந. எண்ணெய் தடவி அல்வா போல் ஊற்றி மேலேயும் சிறிது நல்லெண்ணெய் விட்டு ஆறியதும் வில்லை போட்டும் சாப்பிடலாம். சூடாக அப்படியேவும் சாப்பிடலாம்.

  பந்தி 2: எலுமிச்சைக் கூழ்

       மேலே குறிப்பிட்ட வகையில் கூழ் கிளறி புளிக்கு பதிலாக 2 எலுமிச்சம்பழம் பிழிந்து 3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.

  பந்தி 3: மோர்க்கூழ்
        மேலே குறிப்பிட்ட வகையில் தண்ணீருக்குப் பதிலாக 3/4 லிட்டர் மோர் சேர்த்துக் கிளறவும். பெருங்காயம் வேண்டாம். ஒரு துண்டு இஞ்சி தட்டிச் சேர்க்கவும்.

  இல்லத்தரசிகள் கவனத்திற்கு

      மீசையில் ஒட்டாத இது போன்ற கூழ் வகைகளைச் செய்து கொடுத்து அசத்தினால் வீட்டில் மீசை முறுக்கி புரட்சி செய்வது குறையும். பதிலாக கூழ் வாழ்க என்று மீசை முறுக்கிக் கோஷம் போடுவர் கூலாக!

                                          சமையல் குறிப்பு - 17

அறுசுவை ஜீகல் பந்தி

        லீவு நாட்களில் புதுவிதமான டிபன் செய்தால் ஆர அமர ருசித்துச் சாப்பிட வசதியாக இருக்கும். விதம் விதமாக இடியாப்பம் செய்வோமா? இடியாப்பம் செய்வோமா? இடியாப்ப மாவு கடையிலேயே கிடைக்கிறது. இதில் 1/4 கிலோ மாவைப் பிழிந்து வேக வைக்கவும். (இடியாப்பமே ரெடிமேடாகவும் கிடைக்கிறது)

  பந்தி 1: பாகு இடியாப்பம்

       200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவலுடன் 1/2 டம்பளர் தண்ணீர் சேர்த்துப் பாகு வைக்கவும். வேகவைத்தக் கடலைப்பருப்பு 20 கிராம் சேர்த்து இளம்பாகு பதத்தில் இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.

  பந்தி 2: ஜீனி இடியாப்பம்

        100 கி. ஜீனி, 2 ஏலக்காய், ஒரு மூடி தேங்காய்த் துருவல், சிறிது கேசரி பவுடர், நாலு ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும். வறுத்த முந்திரி, திராக்ஷையைத் தூவவும்.

  பந்தி 3: பருப்பு இடியாப்பம்

        100 கி. பயத்தம் பருப்பைக் குழையாமல் வேக வைக்கவும். கடுகு. உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, நான்கு பச்சை, மிளகாய் தாளித்து, வெந்த பருப்பு, ஒரு மூடி தேங்காய்த்துருவல், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து இடியாப்பத்தில் சேர்க்கவும்.

பந்தி 4: உப்புமா இடியாப்பம்

      கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், பெருங்காயம், 100 கிராம் நைசாக நறுக்கிய சின்ன வெங்காயம் அனைத்தையும் தாளித்து 1/2 ஸ்பூன் உப்பு கறிவேப்பிலை சேர்த்து இடியாப்பத்துடன் கிளறவும்.

      இது தவிர புளிசாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்வது போல் சாதத்திற்குப் பதிலாக இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.

  இல்லத்தரசிகள் கவனத்திற்கு

     இதுபோன்ற இடியாப்பம் செய்து அசத்தினால் உறவுகளில் இடியாப்ப சிக்கலாய் ஏற்படும் சிக்கல்கள் மறையும்; குதூகலம் பெருகும்.

                                          சமையல் குறிப்பு - 18

அறுசுவை ஜீகல் பந்தி


        விதம் விதமாகக் கேக் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடிக்கும். கடையில் பாக்கெட்டைக் கிடைக்கும். எனவே வீட்டிலேயே விதம் விதமாகக் கேக் செய்வோமா?

  பந்தி 1: ரவா கேக்

      200 கிராம் ரவாவை சிவக்க வறுத்து 50 கிராம் மைதா மீது கொட்டவும். 1 மூடி முற்றிய தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். 1/2 கிலோ சீனியில் 2 ஏலக்காய் தட்டிப் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு தேங்காயைச் சேர்த்துப் பாகு காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும், ரவா, மைதா சேர்த்து நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வந்ததும், நெய் தடவிய தட்டில் ஊற்றி மேலே வறுத்த முந்திரி பதிக்கவும். பின்னர் விரும்பும் வடிவில் நறுக்கவும்.

பந்தி 2: மைதா கேக்

      3/4 கப் மைதா, 1/4 கப் கடலை மாவு இரண்டையும் நன்கு கலக்கவும். 100 மில்லி பாலில் 2 கப் சீனி சேர்த்துப் பாகு வைக்கவும். சீனி கரைந்ததும் மாவு ஒரு கப் நெய் சேர்த்து கிளறவும், நன்கு பொங்கி பாத்திரத்தில் ஒட்டாது வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே முந்திரி, திராக்ஷையை வறுக்காது சீவி மேலே தூவவும். பின் நறுக்கவும்.

பந்தி 3: சாக்லேட் கேக்

      100 கிராம் பால் பவுடர், 20 கிராம் மைதா கலந்து வைக்கவும். 1/4 கிலோ சீனியை ஒரு கப் தண்ணீர் விட்டுக் காய்ச்சி சீனி கரைந்ததும் பால் பவுடர், மைதா, ஒரு கப் நெய்விட்டு நன்கு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாது சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மறுநாள் வில்லை போடவும்.

  இல்லத்தரசிகள் கவனத்திற்கு

      மேற்படி கேக் வகைகளை அடிக்கடி செய்து வழங்கினால் சந்தோஷம் கேட்காமலே வீட்டில் நிறையும்.

                                      சமையல் குறிப்பு - 19

அறுசுவை ஜீகல் பந்தி

  மழை நாட்களிலும் உடல் நலம் சரியில்லாத போதிலும் இட்லிக்குத் காரசாரமான துவையல், பொடி, சட்னிக்கு நாக்கு ஏங்கும். காரசாரமாக இட்லிக்குக் கூட்டணி அமைப்போமா?

பந்தி 1: 3 இன் 1 இட்லிப் பொடி

      10 மிளகாய் வற்றல், பெருங்காயம், 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 4 ஸ்பூன் கடலைப் பருப்பை சிவக்க வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும். சிவக்க வறுத்த தேங்காய்த் துருவம் 4 ஸ்பூன், அல்லது பொட்டுக் கடலை 4 ஸ்பூன் அல்லது வறுத்த எள், 2 ஸ்பூன் சேர்த்துப் பொடித்தால் கூடுதல் தேவை.
  
பந்தி 2: எலுமிச்சம்பழச் சட்னி

        10 மிளகாய் வற்றல், உப்பு, சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்து ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும்.

  பந்தி 3: தயிர் சட்னி

        5 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து 100 மில்லி கெட்டித் தயிரில் கலக்கவும். கடுகு, பெருங்காயம் நைசாக அரிந்த சின்ன வெங்காயம், 20 கிராம் அனைத்தையும் தாளித்து ஆறியபின் தயிரில் சேர்க்கவும்.

  பந்தி 4: தேங்காய் பூண்டு துவையல்

        5 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். ஒரு சில்லு தேங்காய் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கடைசியாக 4 பூண்டு பல் சேர்த்து மசிக்கவும்.

பந்தி 5: பூண்டு பொடி

      10 மிளகாய் வற்றலைச் சிவக்க வறுத்து, உப்பு, 10 பூண்டு பல் சேர்த்துப் பொடிக்கவும். பூண்டுக்குப் பதிலாக ஒரு துண்டு பெருங்காயம் பொறித்துச் சேர்க்கலாம்.

முக்கிய குறிப்பு

        அம்மியில் மேற்படி ஐட்டங்களைச் செய்ய வேண்டும். மிக்ஸி கூடாது.

                                      
                                            சமையல் குறிப்பு - 20

அறுசுவை ஜீகல் பந்தி

        வருவது திருமணக் காலம். மணமக்களுக்கு அடிக்கடி விருந்து வைபவம் வரும் காலம். எனவே வழக்கமான சேமியா, ஜவ்வரிசி பாயசம் தவிர்த்துப் புதுவிதமான பாயசங்கள் செய்வோமா?

  பந்தி 1: தேங்காய் பாயசம்


      ஒரு மூடி முற்றிய தேங்காயைத் துருவி (கருப்பு இல்லாமல்) 2 ஸ்பூன் பச்சரிசி சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கை விடாமல் காய்ச்சவும். வாசனை வந்ததும் 2 ஏலக்காய், சிறிது குங்குமப்பூ போட்டு 200 கிராம் சீனியைச் சேர்க்கவும். 5 நிமிடம் கொதித்ததும் முந்திரி திராக்ஷா வறுத்துப் போட்டு இறக்கி வைக்கவும். இதைக் கெட்டியாகச் செய்யாமல் கீர் பதத்தில் செய்து கப்பில் வழங்கவும். சீனிக்குப் பதிலாக வெல்லமும் சேர்க்கலாம். 2 ஸ்பூன் வேக வைத்தக் கடலைப் பருப்பு சேர்த்தால் கூடுதல் சுவை.

  பந்தி 2: பால் பாயசம்


        100 கிராம் (பொன்னி) பச்சரிசியை ரவா பதத்தில் உடைத்து நெய் விட்டு வறுக்கவும். 1 லிட்டர் பாலில் அதை வேக விடவும். நன்கு குழைந்து வெந்ததும் ஏலக்காய், குங்குமப்பூ 1/4 கிலோ சீனி சேர்க்கவும். முந்திரியையும், திராக்ஷையையும் வறுக்காமல் சீவல் மாதிரி சீவி மேலே தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு கப்பில் வழங்கவும். மேற்படி முறையில் வறுத்த மாவில் தண்ணீர் விட்டு வேக வைத்து 200 கிராம் வெல்லம், 2 ஏலக்காய் வேக வைத்துக் கடலைப்பருப்பு ஒரு பிடி சேர்த்து ஒரு மூடி தேங்காயைப் பால் பிழிந்து சேர்க்கவும்.

பந்தி 3: அவல் பாயசம்


        100 கிராம் அவலை ஊற வைத்து நன்கு பிசையவும். 1/2 லிட்டர் தண்ணீரில் வேகவிடவும். 200 கிராம் கல்கண்டு, 2 ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும். முந்திரி, திராக்ஷை வறுத்துப் போட்டு 1/2 லிட்டர் பாலைக் காய்ச்சி சாப்பிடும் போது சேர்க்கவும்.
  
இல்லத்தரசிகள் கவனத்திற்கு

         மேற்படி பாயசங்களை பாசத்துடன் வழங்கும் போது புது மனத் தம்பதிகளின் வாழ்வும் பாயசமாக இனிக்கும்


                                        சமையல் குறிப்பு - 21

       மழை நேரத்தில் எளிய உணவுகளை இரவு நேரத்தில் உண்பது ஆரோக்கியமன வழியாகும். எனவே உணவே மருந்து என்பதற்கு இணங்க ஆரோக்கியமான பொடி வகைகள் செய்வோமா?

   பந்தி 1: எள்ளுப் பொடி

      100 கிராம் எள்ளை வறுத்துத் தேய்த்துப் புடைக்கவும். 10 மிளகாய் வற்றலை வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும். 

   பந்தி 2: பருப்புப் பொடி

      100 கிராம் து.பருப்பு (அ) பருப்பு 10 மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து, உப்பு சேர்த்து கடைசியாக ஒரு பூண்டு சேர்த்துப் பொடிக்கவும்.

 பந்தி 3: தேங்காய்ப் பொடி

      ஒரு தேங்காய் முடியைத் (முற்றல்) துருவி சிவக்க வறுக்கவும். 10 மிளகாய் வற்றல், ஒரு பிடி உ.பருப்பு, பெருங்காய், 2 கொத்து கறிவேப்பிலை வறுத்து, உப்பு போட்டு பொடிக்கவும், கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்துப் பொடிக்கவும்.

 பந்தி 4: கறிவேப்பிலைப் பொடி
      கைப்பிடி அளவு கறிவேப்பிலை, 10 மிளகாய் வற்றல் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

 
பந்தி 5: கதம்பப் பொடி
      து.பருப்பு, கருப்பு உ.பருப்பு, மல்லி தலா 50 கிராம், 10 கிராம் மிளகாய் வற்றல் அனைத்தையும் சிவக்க வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

  பந்தி 6: சுண்டைக்காய் வற்றல் பொடி
      100 கிராம் சு.வற்றல், 10 மிளகாய் வற்றல், சிறிது சுக்கு, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

 
இல்லத்தரசிகள் கவனத்திற்கு

      இந்தப் பொடி வகைகளைச் சாப்பிடும் பெரிசுகள் எங்கள் சமையல் போல வருமா? என்று பொடி வைத்துப் பேசுவது நின்று விடும்.

                                           
                                        சமையல் குறிப்பு - 22
  
     தினமும் ஒரே வித சமையல் தானா? என்று முனகும் குடும்பத்தினரும் 'பஃபே' டைப்பில் விருந்து வைத்து அசத்துவோமா?

   பந்தி 1: புளியோதரை

        50 கிராம் புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 10 மிளகாய் வற்றல், புளியங்கொட்டை அளவு பெருங்காயம், 2 ஸ்பூன் கடுகு, 4 கொத்துக் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துப் புளிக்கரைச்சலில் கொட்டவும். 5 மிளகாய் வற்றல், 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு துண்டு மஞ்சள் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். கெட்டியாக வந்தபின் 50 கிராம் தோல் நீக்கிய நிலக்கடலை, 50 கிராம் கடலைப் பருப்பு வறுத்துச் சேர்க்கவும். கொட்டைப் பாக்களவு வெல்லம் போட்டு 2 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். 1/2 கிலோ ஐ.ஆர்.20 பச்சரிசியைப் பொல பொல வென்று வடித்து ஆறியபின் நல்லெண்ணெய் விட்டு தேவையான அளவு புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறவும்.

   பந்தி 2: சர்க்கரைப் பொங்கல் 

        1/4 கிலோ பொன்னி பச்சரிசியை குழைய வேக விடவும் 1/4 கிலோ வெல்லத்தை பாகு வைத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும், ஏலக்காய், குங்குமபூ, வறுத்த முந்தரி, நெய் சேர்த்துக் கிளவும்.

   பந்தி 3: ப்ரூட் தயிர் சாதம்

       1/4 கிலோ பொன்னி பச்சரிசியைக் குழைய வேக வைக்கவும் காய்ச்சிய பால் 1/4 லிட்டர். 50 மில்லி தயிர். உப்புப் போட்டுக் கிளறவும். ஒரு ஸ்பூன் கடுகு, 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலைத் தாளிக்கவும். 50 கிராம் பச்சைத் திராக்ஷை, 50 கிராம் கருப்புப் திராக்ஷை, மாதுளை முத்துக்கள் கைப்பிடி அளவு மேலே தூவவும்.

   இல்லத்தரசிகள் கவனத்திற்கு

        மேற்படி சாத வகைகளுடன் சிப்ஸ், வடை, வடகம், துவையல், ஊறுகாய் சேர்த்துப் பாம்பே டைப்பில் வழங்கும் போது மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளில் விரிசல் நீங்கும். உற்சாகம் பெருகும்.


 

சமையல் குறிப்பு - 23

அறுசுவை ஜீகல் பந்தி

        தினமும் குழம்பும், ரசமும் தானா? என்று அலுத்துக் கொள்ளும் குடும்பத்தினரை விதம்விதமாக சமைத்து அசத்துவோமா?

பந்தி 1: பாகற்காய் பிட்ளை

           1/4 கிலோ பாகற்காயை நறுக்கி எண்ணெய் விட்டு நன்கு வதக்கி 1/2 லிட்டர் கழுநீரில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். சற்றே வெந்ததும் கொட்டைப் பாக்கு அளவு புளியைக் கரைத்து விடவும். ஒரு கப் முற்றியத் தேங்காய்த் துருவல், 2 ஸ்பூன் கொத்துமல்லி விதை, ஒரு துண்டு பெருங்காயம் அனைத்தையும் சிவக்க வறுத்து அரைக்கவும். அத்துடன் குழையாது மலர வேக வைத்துத் து.பருப்பு 100 கிராம் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு கல்நது வெந்த பாகற்காயில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்துக் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 50 கி. து.பருப்பு, 50 கி. க.பருப்பு இரண்டையும் ஊற வைத்து ஒரு வற்றல் மிளகாய் சிறிது உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும், சிறிய உருண்டைகயாக உருட்டி எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும் நெய் விட்டு சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சைடிஷ்டாகவும் உபயோகிக்கலாம். மிதிபாகற்காயாக இருந்தால் கூடுதல் சுவை பலாக்கொட்டையும் சேர்க்கலாம்.

பந்தி 2: கத்தரிக்காய் ரஸவாங்கி

        பிஞ்சு கத்தரிக்காயை நீளவாட்டில் நறுக்கி வதக்காமல் மேற்படி முறையில் செய்து மேற்படி முறையில் உபயோகிக்கவும்.

  பந்தி 3: மணல் தக்காளி பொரித்த குழம்பு

        50 கி. து.பருப்பை வேக வைக்கவும். 50 கி. பூண்டை உரித்து வதக்கி 1/2 லிட்டர் கழுநீரில் சேர்த்து உப்பு, மஞ்சள்பொடி, 2 ஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்த்து வேகவிடவும். பூண்டு வெந்ததும் பயத்தம் பருப்புடன் ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்து குழம்பில் கொட்டி 2 ஸ்பூன் மணல் தக்காளி வற்றலைப் பொரித்துக் கொட்டவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். நெய் விட்டு சுடுசோற்றில் கலந்து சாப்பிட சுவை ஆளை அசத்தும்.

  இல்லத்தரசிகள் கவனத்திற்கு

        இதை சாப்பிட்ட குடும்பத்தினர் குட்டிப் போட்டப் பூனை மாதிரி உங்களையே சுத்தி சுத்தி வருவார்கள்.

 

சமையல் குறிப்பு - 24

அறுசுவை ஜீகல் பந்தி

 

     கூட்டும் பொரியலும் தானா? உப்பு உறைப்பாக எதுவும் செய்யக் கூடாதா என்று புரட்சி செய்கிறார்களா? அந்தப் புரட்சியை ஒடுக்க விதம்விதமாகக் காரக்கறி செய்வோமா?

 

பந்தி:1 உருளைக்கிழங்கு காரக்கறி

 

     200 கிராம் உ.கிழங்கை வேக வைத்துத் தோல் உரிக்கவும். அத்துடன் 200 கிராம் பெரிய வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கலக்கவும். 6 மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி போட்டு பிசிறி வைக்கவும். கடுகு, உ.பருப்பு, 2 பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கவும். 2 ஸ்பூன் பச்சரிசி மாவைக் கெட்டியாகக் கரைத்து விட்டுக் கிளறி ப.கொத்து மல்லிப் போட்டு இறக்கி வைக்கவும். வேக வைத்தப் பச்சைப் பட்டாணி, அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலைச் சேர்த்தால் கூடுதல் சுவை.

 

பந்தி 2: காராக்கருணை ரோஸ்ட்

 

     காராக் கருணை 200 கிராம் தோல் சீவி கனமான வில்லை போட்டு வேக விடவும். 6 மிளகாய் வற்றல், கொட்டைப் பாக்கு அளவு புளி, உப்பு, 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்துப் பிசிறவும். தோசைக் கல்லில் என்ணெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்வது போல் சிவக்கப் புரட்டி எடுக்கவும்.

 

பந்தி 3: வாழைக்காய் ரோஸ்ட்

 

     ஒரு முற்றிய வாழைக்காயைத் தோல் சீவி நீளவாட்டில் நறுக்கவும். 4 மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி போட்டுப் பிசிறவும். தோசைக் கல்லில் சிறிது தண்ணீர் விட்டு காயை வேக விடவும். சற்றே வெந்ததும் எண்ணெய் விட்டு சிவக்க எடுக்கவும்.

 

இல்லத்தரசிகள் கவனத்திற்கு

 

     இந்தக் காரக் கறிகளை விடுமுறை நாட்களில் செய்தால் வீட்டில் சாப்பாடு பற்றிய கார சாரமான விவாதங்கள் குறையும். வீட்டில் இனிமை கூடும்.

 

சமையல் குறிப்பு - 25

அறுசுவை ஜீகல் பந்தி

 

 

     விடுமுறை தினங்களில் பெரியவரும், சிறியவரும் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிப்பார்கள். கடையில் வாங்கினால் கட்டுப்படியாகாது. எனவே எளிய முறையில் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் தயாரிப்போமா?

 

பந்தி:1 ஓலைபக்கோடா

 

     1 கிலோ பச்சரிசி, 1/4 கிலோ துவரம் பருப்பு இரண்டையும் மிஷினில் நைசாக அரைத்து சலிக்கவும், 25 கிராம் மிளகாய் வற்றல், தேவையான அளவு உப்பு, 25 கிராம் உரித்த பூண்டு அனைத்தையும் நைசாக அரைத்து மாவுடன் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் பிழியவும். பூண்டு பிடிக்காதவர்கள் பெருங்காயம் அல்லது இஞ்சி சேர்க்கலாம். கரகர மொறமொற ஓலை பக்கடா ரெடி! ஒரு சங்கடம்! எவ்வளவு செய்தாலும் மிச்சம் வைக்க மாட்டார்கள்!

 

பந்தி 2: வெங்காய பக்கோடா

 

     200 கிராம் சின்ன வெங்காயம், 5 பச்சை மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் நைசாக நறுக்கவும். தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் நெய், இரண்டு சிட்டிகை சோடா உப்பு, 2 ஸ்பூன் ரவா அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். அத்துடன் 100 கிராம் அரிசி மாவு, 100 கிராம் கடலைமாவு, அரிந்த சாமான்கள் அனைத்தையும் சேர்த்து அழுத்தி வெங்காயச்சாறு இறங்கும்படி பிசையவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். பிடித்தால் பிடிபட்டு உதிர்த்தால் புட்டு மாவு போல் உதிர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக இருக்கும். பிசைந்த மாவை சிறுசிறு விள்ளல்களாகத் தட்டில் கிள்ளிப் போட்டு பின்னர் எண்ணெயில் கொட்டிப் பொரிக்கவும். நேரடியாக எண்ணையில் கிள்ளிப் போட்டால் நிறைய உதிர்ந்து கருகும். சிறிது முந்திரி அல்லது நிலக்கடலை சேர்த்தால் கூடுதல் சுவை.

 

பந்தி 3: மிளகு வடை

 

     2 ஸ்பூன் பொரிகடலை, 5 மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் நைசாக அரைக்கவும். அத்துடன் 100 கிராம் அரிசி மாவு சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகைத் தட்டிப் போட்டுக் கெட்டியாகக் பிசையவும். ஒரு விரிப்பில் மாவை மெல்லிய வடைகளாகத் தட்டவும். சிறிது உலர்ந்ததும் எண்ணெயில் இட்டுப் பொரிக்கவும்.

 

இல்லத்தரசிகள் கவனத்திற்கு

 

     இவை அனைத்தும் எளிமையானவை. அதிக செலவு கிடையாது. நாமே தயாரிப்பதால் திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும்.

 

சமையல் குறிப்பு - 26

அறுசுவை ஜீகல் பந்தி

 

     ரவாவில் உப்புமா, தோசை தவிர வேறு சுவையான உணவுகள் செய்வோமா?

 

பந்தி 1: ரவாபுட்டு

 

     1/4 கிலோ ரவாவை சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசிறி இட்லித் தட்டில் வைத்து வேக விடவும். 1/4 மணிநேரம் வெந்தபின் சிறிது உப்பு கலந்த நீர் தெளித்து பிசிறி ரவாவை மீண்டும் புட்டுமாவு போல் வேகவிடவும். வெந்தபின் ஒரு கப் தேங்காய்த் துருவல். சிறிது கேசரி பவுடர். 200 கிராம் ஜீனி 4 ஸ்பூன் உருக்கிய நெய் சேர்த்துக் கிளறவும். இரண்டு ஏலக்காய் தட்டிப் போடவும். முந்திரி-திராக்ஷை வறுத்துச் சேர்த்தால் கூடுதல் சுவை.

 

பந்தி 2: லெமன் ரவா

 

     1. கடுகு பெருங்காயம் 5 பச்சைமிளகாய் 4 ஸ்பூன் கடலைப் பருப்பு ஒரு கொத்துக் கறிவேப்பிலைத் தாளிக்கவும். இரண்டு ஸ்பூன் தண்ணீர் விட்டு உப்பு. சிறிது மஞ்சள் பொடி சேர்த்து ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். மேற்படி முறையில் வேகவைத்த ரவாவுடன் ந. எண்ணெய் சிறிது விட்டுக் கிளறவும் தேங்காய்ச் சட்னி சிறந்த கூட்டணி.

 

     2. புளிக்காய்ச்சலை மேற்படி ரவாவில் கிளறலாம். தேங்காய்த் துவையல் கூடுதல் சுவை. இதன் பெயர் ரவாபுளியோதரை.

 

பந்தி 3: வெஜிடபிள் ரவா

 

     காரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ், உருளை தலா 100 கிராம் ஒரே சீராக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். 200 கிராம் பெல்லாரி 10 பச்சை மிளகாய் நைசாக நறுக்கி இஞ்சி, சிறிது பூண்டு தட்டிப் போட்டு அனைத்தையும் நெய்விட்டு வதக்கவும். பின்னர் வேகவைத்த காய்கறி - உப்பு - மஞ்சள்பொடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அனைத்தையும் மேற்படி முறையில் வேகவைத்த ரவாவுடன் நன்கு கலக்கவும். வேகவைத்தப் பச்சைப் பட்டாணி - 4 ரஸ்க் துண்டுகள் சேர்த்தால் கூடுதல் சுவை. வெங்காயத் தயிர்பச்சடி சிறந்த கூட்டணி.

 

இல்லத்தரசிகள் கவனத்திற்கு

 

     ரவா என்றால் ஓட்டம் பிடித்தவர்கள் ரவா மட்டுமே வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.