மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள் :
பால் கெடாமல் இருக்க...
பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.
- அரிசி குருணையில் உப்புமா செய்தால் ...
அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.
- மோர் மிளகாய் தயாரிக்கும்போது...
மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
- காய்கறிகள் நறுக்கத் தொடங்குமுன்...
காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
- கிரேவி வகையறாக்கள் செய்யும்போது ...
கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
- காய்கறிகளில கசப்பு சுவை நீங்க...
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.
- இட்லி மிருதுவாக இருக்க...
இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
- இட்லி மணமாக இருக்க...
காய்ந்து போன கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகளை இட்லிச் சட்டி நீரில் போட்டு இட்லிவேக வைத்தால் இட்லி மணமாக இருக்கும்.
- ஜவ்வரிசி கிளரும்போது...
ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
- எண்ணெய்க் காறலை போக்க...
எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
- தயிர் புளிக்காமல் இருக்க...
தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
- வெண்டைக்காய் சமைக்கும்போது...
வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
- அரிசி உப்புமா செய்யும்போது...
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
- கீரையை வேகவிடும்போது ...
கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
- குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது..
தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
- வெங்காய அடை செய்யும் போது...
வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
- பூரிக்கு மாவு பிசையும்போது ...
பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
- அடை செய்யும்போது ...
அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.