Tuesday, 12 August 2014
க்ரிட்ஸ்(Grits) இட்லி!!!
நன்றாக காய்ந்த சோளத்தினை ரவை போல உடைத்தால் கிடைப்பது தான் க்ரிட்ஸ்(Grits). இதனை அமெரிக்காவில் பெரிதும் காலை நேர உணவாக பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக சோளத்தில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber) இருப்பதால், க்ரிட்ஸ் உடலிற்கு மிகவும் நல்லது….
ஒரு மனிதன் தினமும் குறைந்தது 20 கிராம் நார்சத்து அடங்கிய உணவினை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் எடை ஏறாமலும், கொலஸ்டிரால் அளவு, சக்கரை அளவு எல்லாம் கட்டுபாட்டில் இருக்கின்றது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக அதிக அளவு நார்சத்து உள்ள உணவினை சாப்பிட வேண்டும். குறைந்தது 35 – 40 கிராம் நார்சத்தினை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
Dietary Fiberயில் இரண்டு வகை இருக்கின்றது… Soluble Fiber மற்றும் Insoluble Fiber. இந்த இரண்டுமே உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.
நார்சத்து அடங்கிய உணவினை சாப்பிடுவதால் கலோரிஸ் எப்படி கணக்கிடபடுகின்றது???...இதற்கும் உடல் எடை குறைவதற்கும் என்ன சம்மந்தம்????? என்பதினை பற்றி என்னுடய பின்வரும் பகுதிகளில் தெளிவாக நாம் பார்க்கலாம்….
சரி…சரி..இப்பொழுது இட்லிக்கு வருவோம்….
க்ரிட்ஸ்(Grits) இட்லி
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· க்ரிட்ஸ் – 2 கப்
· உளுத்தம் பருப்பு – 1/4 கப்
· வெந்தயம் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· உளுத்தம் பருப்பு + வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அதனை மைய அரைத்து கொள்ளவும்.
· அரைத்த உளுத்தமாவு + க்ரிட்ஸ் + உப்பு + சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக இட்லிமாவு பதத்திற்கு கலக்கவும்.
· கலந்தமாவினை இட்லிக்கு புளிக்கவைப்பது போல, குறைந்தது 5 மணி நேரம் புளிக்கவைத்து இட்லி சுடவும்.
· சுவையான சத்தான க்ரிட்ஸ் இட்லி ரெடி.
ஹோட்டல் தேங்காய் சட்னி
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· தேங்காய் – 1/4 மூடி
· பொட்டுகடலை – 1/4 கப்
· புளி – சிறிதளவு
· கொத்தமல்லி – சிறிதளவு
· பச்சைமிளகாய் – 4
· உப்பு – தேவைக்கு
கடைசியில் தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 2 தே.கரண்டி
· கடுகு – தாளிக்க
· உடைத்த உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
· தேங்காயின் மேல் உள்ள தோல்பகுதியினை நீக்கிவிடவும் . முதலில் மிக்ஸியில் பொட்டுகடலை + பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
· பிறகு புளி + கொத்தமல்லி + உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான ஹோட்டல் சட்னி ரெடி.