Tuesday 12 August 2014
தக்காளி குருமா!!!
எங்க வீட்டில் செய்யும் இந்த குருமா எனக்கு மிகவும் பிடிக்கும்... இது இட்லி, தோசைக்கு சூப்பரான Combination...
இதில், வெங்காயம் + தக்காளியினை கண்டிப்பாக நீளமாக வெட்டி கொள்ள வேண்டும். அதே மாதிரி வெரும் சோம்பு மட்டுமே சேர்க்க வேண்டும். காரத்திற்கு பச்சைமிளகாய் + சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
. தக்காளி - 4
. வெங்காயம் - 2 பெரியது
. பச்சைமிளகாய் - 4
. கருவேப்பிலை - 5 இலை
. கொத்தமல்லி - சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
. மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
. மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
. உப்பு - தேவையான அளவு
அரைத்து கொள்ள :
. தேங்காய் - 2 துண்டுகள்
. சோம்பு - 1/4 தே.கரண்டி
. கசகசா - 1/2 தே.கரண்டி (விரும்பினால்)
முதலில் தாளிக்க :
. எண்ணெய் - 1 மேஜை கரண்டி
. சோம்பு - 1/4 தே.கரண்டி
. இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி
செய்முறை :
. வெங்காயம் + தக்காளி நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். (கவனிக்க : கண்டிப்பாக வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைகக்வும். பொடியாக நறுக்க வேண்டாம்.)
. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
. இஞ்சி பூண்டு சிறிது வதங்கியதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
. பிறகு இதில் நீளமாக அரிந்த தக்காளியினை சேர்த்து வதக்கவும்.
. தக்காளி வதங்கியதும் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
. தேங்காய் + சோம்பு + கசகசா + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
. இத்துடன் 2 - 3 கப் தண்ணீர் + அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
. சுமார் 6 - 8 நிமிடங்கள் கழித்து குருமா நன்றாக கொதித்த பிறகு கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கொள்ளவும்.
. சுவையான தக்காளி குருமா ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.