Friday 15 August 2014

உருளைக்கிழங்கு கச்சோரி!!!


கிருஷ்ண ஜெயந்தி வரப் போகிறது. அனைவரும் இந்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன பலகாரம் செய்வதென்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
அத்தகையவர்களுக்கு ஒரு அருமையான ரெசிபி உள்ளது. அது என்னவென்றால், உருளைக்கிழங்கு கச்சோரி. இந்த கச்சோரி மிகவும் சிறியதாக இருப்பதால், இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் கூட.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
potatokachori
தேவையான பொருட்கள்:
கச்சோரி மாவிற்கு…
கோதுமை மாவு – 300 கிராம்
ரவை – 100 கிராம்
பேக்கிங் பவுடர் – 1/4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு கலவைக்கு…
உருளைக்கிழங்கு – 6 (வேக வைத்து மசித்தது)
சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி – 1 1/2 துண்டு
மாங்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பேக்கிங் பவுடர், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஓரளவு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி தூள், மாங்காய் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக்கி, ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்து, தட்டையாக தட்டி, அதன் நடுவே பெருவிரல் கொண்டு ஒருமுறை அழுத்தி, ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நன்கு மூடிக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு கச்சோரி ரெடி!!! இதனை புதினா அல்லது மல்லி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.