Wednesday 26 March 2014

தோரண வாயில்

விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.

விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?
காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது 'மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?
விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். 'கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.
நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
மாவிலைத் தோரணத்துக்கும் சுற்றுப்புறத்தூய்மைக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது! இல்லாமலா தோரணம் கட்டுவார்கள்?

மாவிலைகள் 'புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் 'புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.
மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

இப்போது, மாவிலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் தோரணம் கட்டுகின்றார்கள். அவர்கள் பின்னோர்கள். பிளாஸ்டிக் தோரணத்தினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. தினந்தோறும் இல்லங்களில் மாவிலைத் தோரணம் கட்டினால் இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம்.
வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும்.

வண்ணக்கோலம்
அழகு செய்வது, அழகுக்கு அழகு செய்வது நாகரிகத்தின் இயல்பு. செய்யும் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். காரணம் தெரியாமல் காரியம் செய்வது அறியாமை. காரணத்துக்காகக் காரியம் செய்வது அறிவுடைமை.
தூய்மைக்காக வீட்டைச் சுத்தம் செய்கிறோம். காற்றின் மூலம் வருகின்ற தூசுகளை, மாசுகளைத் தடுக்க ஜன்னல் கதவுகள் இடுகிறோம். ஜன்னலுக்குத் திரைச் சீலையிடுகிறோம். சுவரில் சுண்ணாம்பு பூசுகிறோம். சுவரில் பூசப்படுகின்ற சுண்ணாம்பு வீட்டுக்கு புகுந்துள்ள நுண்ணிய நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது.
சிங்காசனம், மயிலாசனம், மெத்தை இருக்கை, சூழல் இருக்கை, ஆடும் இருக்கை போன்று பல வகையான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஆனந்தமடைகிறோம்.

இவை, கண்ணுக்கு அழகாகத் தோன்றுவதுடன் மனதுக்குள் சில மாற்றங்கள் தருகின்றன.
மனத்துக்குள் ஏற்படும் மாற்றங்களால் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன.
அலங்காரங்களினால், வீட்டுக்குள் இருப்பவர்களின் நலன்கள் பாதிக்காமல், பாதுகாக்கப்பட வேண்டும்.
பழந்தமிழர் நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள் இல்லத்திலுள்ளவர்களின் நலனைப் பாதுகாக்கும் முறைகள் பல. அவற்றில் ஒன்று, வண்ணக் கோலம்.
பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் வாசலைப் பெருக்கிப் பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிப்பர். இது, சுகாதாரத்துக்காக மட்டும் செய்யப்படுவதல்ல! வீட்டின் முன்னும் பக்கங்களிலும் புற வாசலிலும் தெளிக்கப்படுகின்ற பசுஞ்சாண நீர், அந்த வீட்டுக்குள்ளே காற்றினாலும், தூசியினாலும், வீட்டுக்குள் வருவோர்காளாலும் படையெடுக்கிற நோய்க்கிருமிகளைத் தடுக்கின்றது.
பசுஞ்சாண நீர் ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டது. அம்மை நோய், காலரா, வைசூரி போன்ற நோய் பரவுவதைப் பசுஞ்சாண நீர் தடுக்கும்.
வீட்டினுள் முன் வாசலில் கோலமிடுவர். இந்தக் கோலம் கண்டபடி கண்டவாறு போடப்படுவதில்லை. வார நாள்களுக்குப் பொருத்தமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமிடுவர். அக்கோலம், முக்கோண வடிவில், நாற்கோண வடிவில், வட்ட வடிவில், பதினாறு கோண வடிவில் இருக்கும்.

பெண்கள் இடுவது கோலமாக இருந்தாலும் அவை வீட்டிலுள்ள மக்களைக் காக்கும் யந்திர சக்ரமாகும்.
வீட்டின் முன்னே இடப்படுகின்ற கோல யந்திர சக்கரங்கள் அந்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும், வீட்டுக்குள் நுழையும் போதும் அவர்களுக்கு எந்த தீதும் நடந்து விடாதவாறு பாதுகாக்கும்.
வீட்டிலிருக்கும் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ சில இடங்களுக்குச் செல்வர். சில பொருள்களைத் தொடுவர். அந்த இடங்களிலிருக்கும் தீய சக்திகள் குழந்தைகள் நலனைக் கெடுத்துவிடாமல் பாதுகாக்கும்.
கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூவை வைப்பதுண்டு. இப்பூசணிப்பூ மற்றவர்களால் திருஷ்டி கண்ணேறு படாமல் பாதுகாக்கும். பூசணிப்பூவின் மஞசள் வண்ணத்துக்கு அத்தகைய சக்தி உண்டு.

இப்பழக்கம் காலங்காலமாக நடந்து கொண்டு வருகின்ற பண்பாட்டு முறையாம்.
ஆனால், இன்றைய நாகரிக வளர்ச்சியில் எல்லாமும் போலித் தனங்கள். கோலமிடும் பெண்கள் குறைந்து போனார்கள். கோலங்கள் போடாமல், ஏதோ ஒரு கோலத்தை வண்ணத்தில் எழுதி வாசல் முன்னே ஒட்டிக் கொள்கின்றார்கள்.

வார நாள்கள் ஏழும் ஏழு கோள்களின் ஆதிக்கத்தைக் குறிப்பதாகும். ஒரு நாளில் இருக்கும் ஆதிக்கம் மறுநாள் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு கோலங்களை மாற்றி மாற்றிப் போடுவதனால், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிட்டு, பிளாஸ்டிக் கோலங்களை ஒட்டி வைத்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

விருப்பமூட்டி
எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமானாலும், அந்தக் காரியத்தில் எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தக்காரியம் வெற்றி பெறும். விருப்பமில்லாமல் செய்யும் காரியம் விருத்தியடையாது. அதைப்போல, வாழ்க்கையில் எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ அந்த அளவுக்கே வாழக்கையும் இருக்கும். அதாவது 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்கிறது, வள்ளுவம்.
வாழ்க்கையில் விருப்பத்தை ஊட்டக்கூடிய பல செயல்கள் நிகழ்ந்திருக்கும். நிகழ்ந்து கொண்டிருக்கும். அந்த விருப்ப மூட்டும் செயல்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், பலர்.
காதலும் ஒருவகையான விருப்பமூட்டி தான். காதலுக்காக வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் இருக்கக் காணலாம். விருப்பமூட்டக்கூடிய காதலைப்போல, ஒரு பழம் இருக்கிறது. அதற்கு விருப்பமூட்டி என்றே பெயரும் உண்டு. அப்பழத்தை எல்லாவிதமான காரியத்துக்கும் பய்னபடுத்துவர்.

களைப்பாகவோ உடம்பு வெப்பமாகவே இருந்தால் அப்பழத்தைப் பிழிந்து சாறு அருந்துவர். உடல் சூட்டைத் தணிக்க தலைக்குத் தேய்த்து குளிப்பர். தோஷமோ திருஷ்டியோ இருந்தால் அதற்குப் பயன்படுத்துவர். மந்திர தந்திரங்களுக்குப் பயன்படுத்துவர். எந்தப்பழம் என்று இன்னும் தெரியவில்லையா?
எழும் இச்சைப் பழம் தான் அது! எலுமிச்சை பழம் என்று ஆகிவிட்டது. எலுமிச்சையினால் என்ன நன்மையென்று பட்டியலிட்டால் மயக்கமே வந்துவிடும். அந்தஅளவுக்கு அப்பழத்தினால் அடையக்கூடிய நன்மைகள் இருக்கின்றன.

எலுமிச்சைப் பழத்தில் 12 விதமான சத்துகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் செயப்£ட்டை நன்கு இயக்குவதுடன் அந்த உறுப்புகளில் குறைபாடுகள் ஏதாவது இருந்தாலும் அவற்றையும் சரிசெய்கிறது.
எலுமிச்சை சாற்றினால் இதயம் சக்தி பெறுகிறது. கிட்னியை நன்றாகச் செயல்பட வைக்கிறது. உடலுக்கு வலுவைத் தருகிறது. உடல் உறுப்புகளின் இயங்கும் தினை அதிகரிக்கும். உணர்வு நரம்புகளைப் பலப்படுத்துகிறது. மூளையின் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. நுரையீரலை வலுவாக்குகிறது. திசுக்களை இயக்குகிறது. ரத்தத்தைச் சுத்திப்படுத்தி வீறுபெறச் செய்கிறது. சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. சோகையைப் போக்குகிறது. சுவாசத்தைச் சீராக்குகிறது.
இத்தகைய சக்திகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் எலுமிச்சை, அஜீரணத்தைப் போக்கி சீரணத்தை அதிகரித்து அதிக உணவை உண்ண விருப்பத்தை ஏற்படுத்துகிறது. பசிக்கும்போது உண்ண உணவில்லாவிட்டாலும் ஒரு பழம் ஒருவேளை உணவுக்குச் சமம் என்கிற வகையில் உணவாகவும் ஆகிறது. எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து அருந்தி வந்தால் அதுவே காயகற்பமாகவும் ஆகிறது. உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கி, நோயகற்றும் மருந்தாகவும் ஆகிறது.

உடம்பில் நோய் வந்தால், எலுமிச்சைச் சாறு மட்டுமே அருந்தி குணமாக்கலாம். வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் 10&15 தடவை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கிவிடும்.
உடம்பிலுள்ள கொழுப்பை அகற்ற எலுமிச்சைச் சாற்றை உணவாக உட்கொள்ளலாம். உடம்பின் எடை, ஊளைச் சதை, தொந்தை, தொப்பை, இடைபெருந்து இருப்பவர்கள் எலுமிச்சையை உணவாக உட்கொண்டால் விரைவாகப் பயன்பெறலாம்.

எலுமிச்சைச் சாறு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு ஒரு மண்டலம் வரை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, உடம்பிலுள்ள குற்றங்கள் அனைத்தும் நீங்குவதுடன், உடம்பில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தெம்பும் புத்துணர்வும் தோன்றுவதைக் காணலாம்.அதன்பின், வாழவேண்டும் என்னும் விருப்பத்துக்கு அளவேது! அதனால்தான், எலுமிச்சம் பழத்துக்கு விருப்பமூட்டி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இயற்கையே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு வைத்திருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் குருடர்களாக இருக்கிறோம்.