Tuesday, 11 March 2014

ஸ்கைப்பின் மூலம் இசை வகுப்புகள்!!!



















சொந்த பந்தங்களை விட்டு வேலை காரணமாக வெளிநாடு செல்லும் பல இந்தியர்கள், அங்கு சென்றவுடன் தம் உறவுகள் மற்றும் தம்முடைய கலாச்சாரத்தையும் மிகவும் இழந்து தவிப்பது எல்லாரும் அறிந்ததுதான்.
குறிப்பாக, தமிழர்கள் பலர் தங்களுடைய பிள்ளைகள் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மறந்துவிடாமல் இருந்திட பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். நம் நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும், நம்முடைய இசை, நடனம் மற்றும் பல கலை சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் வெளிநாடு வாழ் தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேற்கத்திய வாழ்வுமுறையை வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது இந்தியா வரும்போது இங்குள்ள மற்ற பிள்ளைகளை போல தம் குழந்தைகளும் கர்நாடக இசை, பரதம் மற்றும் இசைக் கருவிகளை வாசிக்கும் திறமை படைத்வர்களாக இருக்கவே ஆசைப்படுகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பா, லண்டன், சிங்கப்பூர், துபாய் என பல நாடுகளில் குடியேறியுள்ள நம்மவர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு பாட்டு கற்றுக்கொடுக்க விரும்பினாலும் அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகிலே இசை ஆசிரியர் கிடைப்பது அரிது. இதற்காக பல மைல்கள் தாண்டி சென்று கற்க வேண்டியுள்ளதால் பலரால் இதைத் தொடர முடியாமல் போய்விடுகிறது என்ற ஏக்கம் இருந்து வந்தது. இந்தக் குறையை தீர்க்கும் விதத்தில் வந்துள்ள ஏற்பாடுதான் ஸ்கைப்பின் மூலம் இசை வகுப்புகள். இந்த தொழில்நுட்ப யுகத்தில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டுதான்.
ஸ்கைப் என்பது இணையத்தில் இலவசமாக டவுன்லோடு செய்யக்கூடிய ஒரு மென்பொருள். இதனை கம்யூட்டர் அல்லது போனில் டவுன்லோடு செய்து கொண்டு, மைக் மற்றும் வெப் கேமரா பொருத்திவிட்டால் போதும். அமெரிக்காவில் அமர்ந்து கொண்டு, சென்னையில் உள்ள ஓர் இசை ஆசிரியரிடம் சரிகம... முதல் ஆலாபனை வரை கற்றுக்கொண்டு விடலாம்
ஸ்கைப், உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் இணைக்கும் சிறப்பு படைத்ததால், இதன் பயன்பாடு மிக அற்புதமானதாகி விடுகிறது.
சில வருடங்களாக பிரபலமாகி வரும் இந்த ஸ்கைப் இசை வகுப்புகள் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். கர்நாடக இசைக்கு பெயர் போன சென்னையில் நல்ல திறமையுடன் கூடிய பிரபல இசை கலைஞர்கள் இருப்பதால், வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ஸ்கைப் மூலம் சிறப்பான பயிற்சி கிடைத்துவிடுகிறது. இங்குள்ளவர்களுக்கு கிடைக்கும் அதே அளவு புலமையும் கிடைப்பதால் இந்த வகை வகுப்புகளுக்கு இப்போது ஏக வரவேற்பு.
போக்குவரத்து நெரிசலில் பயணித்து செல்லும் அவசியம் இல்லாமல், உட்கார்ந்த இடத்தில், கிடைத்த நேரத்தில், தாம் விரும்பிய வல்லுநரிடம் இசையைப் பயில இந்த முறையை சிறியவர்கள் மட்டுமின்றி, பணிக்கு செல்வோரும் உபயோகப்படுத்துகிறார்கள்.
கடந்த சில வருடங்களாக ஸ்கைப் மூலம் கர்நாடக இசையை அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளில் உள்ள இசை பிரியர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார், கர்நாடக இசை மேதை லால்குடி ஜெயராமனின் மாணவியும், பல கச்சேரிகளை செய்தவருமான வித்யா சுப்ரமணியன்.
5 வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் தன்னிடம் ஸ்கைப் மூலம் கர்நாடக இசையை பயின்று வருவதாக கூறும் அவர், "தற்போது சீனா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, கொரியா போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர் மற்றும் வேற்றுமொழி இந்தியர்களும் கூட கர்நாடக இசை பயில ஆர்வம் அதிகம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களிலிருந்தும் கூட ஸ்கைப் மூலம் என்னிடம் மாணவர்கள் இசை கற்றுக்கொள்கிறார்கள்" என்றார்.
"இந்த தொழில்நுட்ப வசதி, இசை ஆர்வலர்களை உலகமெங்கும் ஊக்குவிப்பதோடு, நம் பாரம்பரிய இசையை வெளிநாட்டவர் மத்தியில் வளர்ப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது" என்று கூறி மகிழ்கிறார் வித்யா.
ஒரு மணி நேர ஸ்கைப் வகுப்புக்கு, சுமார் 5 டாலர் கட்டணமாக வாங்குகின்றனர் இசை ஆசிரியர்கள். அதாவது வெளிநாட்டிலிருந்து இசை பயில, ஒரு வகுப்புக்கு 250 ரூபாய் செலவிடுவதில் எவரும் தயங்குவதில் ஏனென்றால் தம்மூரில் ஒரு ஆரம்பநிலை இசை வாத்தியாரிடம் இசை கற்க பல தூரம் பயணித்து அதற்கு செலவழித்து, கிட்டத்தட்ட 8 முதல் 10 டாலர் அதாவது 500 ரூபாய் வரை வகுப்பு கட்டணமாக செலவிடவேண்டி உள்ளதால், அதை விட குறைந்த செலவில் இசை வல்லுநர்களிடமே கற்க உதவும் இந்த ஸ்கைப் முறையை பலரும் விரும்புகின்றனர். இசையில் மாணவர்கள் அடைந்த நிலை பொருத்தும், ஆசிரியரின் தகுதிக்கு ஏற்றவாறும் கட்டணம் வேறுபடுகிறது.
ஸ்கைப் மூலம் இசை பயின்ற மாணவர்கள் இந்தியா வரும்போது தமக்கு இசை கற்றுக்கொடுத்த ஆசிரியரிடம் நேரிலும் சென்று தேவையான திருத்தங்களை செய்து கொள்வதால் மேடை கச்சேரி வரை தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். இது இந்த முறையின் கூடுதல் வெற்றி ஆகும்.
இசையை தவிர இசைக்கருவி, நடன வகுப்புகளும் ஸ்கைப்பில் நடைப்பெற்று வருவதால் அவரவர் விரும்பும் கலையைக் கற்றுக் கொள்ளலாம். நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை இழக்கும் கவலை இல்லாமல் இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இன்பமாக வசிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.