Monday 3 February 2014

குழந்தைக்கு எது நல்லது!!!



குழந்தைக்கு எது நல்லது? காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும். தினமும் இரவில் விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்! நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும். சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும். குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும். பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும். குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும். தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.