ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களின் கல்விக் கனவை நிஜமாக்கி வருவது கல்விக் கடன் மட்டுமே. இன்றைக்கு இந்தியாவில் பலரும் பட்டப் படிப்புகளை கவலை இல்லாமல் படிக்க முடிகிறது எனில், அதற்கு முக்கிய காரணம் கல்விக் கடன்தான். இதனாலேயே இன்று பல மாணவர்கள் பொறியாளராக, மருத்துவராக, வழக்கறிஞராக ஆகியிருக்கிறார்கள்.
இந்தக் கல்விக் கடனை வாங்க யாரை அணுகுவது, எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது, எவ்வளவு வட்டி? சலுகைகள் ஏதும் உள்ளதா? என்பதுபோன்ற அனைத்து விவரங்களையும் சொன்னார் கோயம்புத்தூர் மாவட்ட லீடு வங்கியான கனரா வங்கியின் மேலாளர் வணங்காமுடி.
யாருக்கு கிடைக்கும்?
''ஒவ்வொரு வருடமும் அரசு மற்றும் மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கவும் கல்விக் கடன் தரப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து, அனைத்து வகையான டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கும் கல்விக் கடன் தரப்படும். தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் சர்ட்டிஃபைட் படிப்புகளுக்கு, உதாரணமாக பியூட்டிஷியன், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கடன் தரப்படுவதில்லை.
எதற்கெல்லாம் கிடைக்கும்?
டியூஷன் கட்டணம், புத்தகச் செலவு, தேர்வு கட்டணம், லேப் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களுக்கு நூறு சதவிகிதம் கடன் தரப்படும். கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு விடுதிக் கட்டணத்திற்கு கடன் உண்டு. விடுதி அல்லாமல் வெளியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த செலவினங்களுக்கான தொகையும் கடனில் தரப்படுகிறது. கல்லூரிக்கு தினம் வந்து போகும் (day scholars) மாணவர்களுக்கு பேருந்து செலவினங்களுக்கு கடன் கிடையாது.
எவ்வளவு கடன்..?
இந்தியாவிற்குள் படிக்கும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும், வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
என்ன செக்யூரிட்டி..?
ரூபாய் 4,00,000 வரையிலான கல்விக் கடன்களுக்கு எந்தவித செக்யூரிட்டியும் தரவேண்டியதில்லை. கடன் வாங்கும் பெற்றோர் மற்றும் மாணவர் கையெழுத்து போட்டால் போதும். ரூ.4,00,001 - 7,50,000 வரையிலான கல்விக் கடன்களுக்கு பெற்றோர், மாணவர் மற்றும் மூன்றாவது நபர் யாராவது கேரன்டி கையெழுத்து போடவேண்டும்.
ரூபாய் 7,50,000 மேல் வாங்கும் கடன்களுக்கு நிலம், வீடு, பாண்டுகள் அல்லது பங்குப் பத்திரங்கள் உள்ளிட்ட சொத்துகளில் ஏதாவது ஒன்றை கடன் தொகையின் முழு மதிப்பிற்கு செக்யூரிட்டியாக தர வேண்டும்.
திரும்பச் செலுத்துவது..!
படிப்பு முடிந்த பிறகு ஒரு வருட காலத்திற்கு பிறகோ அல்லது வேலை கிடைத்த ஆறு மாத காலத்திற்கு பிறகோ, இவற்றில் எது முன்னதாக நடைபெறுகிறதோ, அன்றிலிருந்து கடனைத் திரும்பச் செலுத்த தொடங்கவேண்டும். இதனை கடனுக்கான படிவத்திலேயே பூர்த்தி செய்து தர வேண்டும். கடன் தொகை 7,50,000 ரூபாய்க்குள் இருக்கும் கடன்களை படிப்பு முடிந்தபின்பு பத்து வருடங்களுக்குள் செலுத்தலாம். கடன் தொகை 7,50,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் கடன்களை பதினைந்து வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்தலாம். ஆக, வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டாயம் கல்விக் கடனை கட்டியே ஆகவேண்டும். அதனால், கல்விக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் கல்வியை முடித்ததும் அதற்கு தக்கபடி வேலையை தேடிக் கொள்வது அவசியம்.
வட்டி எவ்வளவு..?
பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்சம் 12.50 சதவிகித வட்டி விகிதத்தில் கல்விக் கடன் கிடைக்கிறது. இதைவிட தனியார் வங்கிகளில் வட்டி அதிகம் என்றாலும், அவை கல்விக் கடன் தருவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. எங்களிடம் வட்டி அதிகம் என்று சொல்லியே வாடிக்கையாளர்களைத் திருப்பி அனுப்பிவிடுகின்றன தனியார் வங்கிகள்.
என்ன ஆவணங்கள் தேவை?
வங்கியில் கடன் வாங்க மாணவரின் தந்தை அல்லது தாய் இருவரில் வருமானம் ஈட்டும் நபருடன், மாணவரையும் இணைத்த ஜாயின்ட் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். கல்லூரியில் வழங்கப்படும் நற்சான்றிதழ் (Bonafide certificate), கல்லூரிகள் வழங்கும் செலவினங்களுக்கான சான்றிதழ் (Expenditure certificate) கவுன்சிலிங் சமயத்தில் வழங்கப்படும் அலாட்மென்ட் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும்கொண்டு கல்விக் கடனுக்காக உங்கள் பகுதிக்கு என்று ஒதுக்கியிருக்கும் வங்கிக்கு சென்று கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கடன் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் கடனுக்கான வட்டியைக் கட்ட முடியுமா என்று அறிந்துகொள்ள பெற்றோர்களின் வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட்களைக் கேட்கிறார்கள். தற்போது பெற்றோர் மற்றும் மாணவரின் பான் கார்டு எண் வங்கிகளால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தையும் தந்தால், கல்விக் கடனுக்காக விண்ணப்பித்த முப்பது நாட்களுக்குள் வங்கி பதிலளிக்க வேண்டும்.
வங்கியானது ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கும் கல்வி மற்றும் கல்லூரியை வைத்துதான் கல்விக் கடனை தருகிறது. ஏனெனில், மாணவர் தேர்ந்தெடுத்திருக்கும் படிப்புக்கு எதிர்காலத்தில் மதிப்பு எப்படி இருக்கும், அவர் தேர்ந் தெடுத்திருக்கும் கல்லூரியில் பிளேஸ்மென்ட் 100% இருக்கிறதா என்பதை அடிப்படையாக வைத்து தான் அந்த விதிமுறைகளை வங்கி கையாள்கிறது. எதிர்காலத்தில் வேலையில்லாத கல்விக்கும், பிளேஸ்மென்ட் அதிகம் தராத கல்லூரியில் படிப்பதற்காகவும் ஒரு மாணவருக்கு கல்விக் கடனை எந்தவொரு வங்கியும் தர முன் வருவதில்லை.
என்ன சலுகைகள்..?
ரூபாய் 2,00,000 கீழ் வருமானம் ஈட்டும் எஸ்.சி., எஸ்.டி., தலித் கிறிஸ்தவ பெற்றோர் எனில், அவர்களின் பிள்ளைகள் படிக்கும் டெக்னிக்கல் மற்றும் புரொஃபஷனல் படிப்புகளுக்கு உண்டான டியூஷன் கட்டணம், புத்தகம் மற்றும் தேர்வு கட்டணம் என அனைத்துவிதமான கட்டணங் களும் மானியமாகத் தரப்படுகிறது. அதாவது இவர்களைப் பொறுத்தவரை, கல்விக் கடன் என்பதே இல்லாமல் போய்விடும்.
குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி எனில், அந்த மாணவர் டெக்னிக்கல் அல்லது புரொஃபஷனல் படிப்புகளுக்கு வழங்கப்படும் கடனில் 20,000 ரூபாய் ஆண்டு டியூஷன் கட்டணத்தில் மானியம் தரப்படுகிறது. கல்விக் கடன் வாங்கும் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் வட்டியில் சலுகை அளிக்கப்படுகிறது.
டெக்னிக்கல் (டிப்ளமோ, ஐ.டி.ஐ., மரைன் இன்ஜினீயரிங்) மற்றும் புரொஃபஷனல் (எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எல்.) படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4,50,000 ரூபாய்க்கு கீழ் இருந்தால், அந்த மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் பயின்றால் அவர்களுக்கு படிக்கும் காலம் மற்றும் அதன்பிறகு ஒரு வருடம் வரை கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இளங்கலைப் பட்டப் படிப்பு படித்தவர்கள் முதுகலைப் படிப்பிற்கும் கடன் பெறலாம். ஏற்கெனவே உள்ள கடன் நிலுவையில் இருந்தாலும் இந்தக் கடன் தரப்படும். ஆனால், வேறு எந்த சலுகையும் கிடைக்காது.
வரிச் சலுகை..!
திரும்பச் செலுத்தும் கல்விக் கடன் வட்டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக்காக கல்விக் கடன் தரப்பட்டுள்ளதோ, அவருக்குதான்
புகார்கள் தெரிவிக்க..?
கடனுக்காக வங்கியை அணுகி விண்ணப்பம் தந்த 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவேண்டும். அப்படி பதில் அளிக்கவில்லை எனில், அதுகுறித்து அந்த வங்கியின் வங்கிக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் புகார் செய்யலாம். அவரும் சரியான பதில் தரவில்லை எனில், சென்னையில் இருக்கும் வங்கி ஆம்புட்ஸ்மேனிடம் புகார் தெரிவிக்கலாம்'' என விளக்கமாக எடுத்துச் சொன்னார் வணங்காமுடி.
கல்விக் கடன் வாங்கிப் படிக்கும் காலத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயில் ஆனாலோ அடுத்தடுத்த வருடங்களுக்கு கடன் தராமல் நிறுத்தி வைக்கும் அதிகாரம் வங்கிகளுக்கில்லை. எனினும், கல்விக் கடனை திரும்பக் கட்டுவது ஒரு மாணவனின் கடமை. உரிய காலத்தில் கட்டாவிட்டால் அந்த மாணவனின் பெயர் சிபிலில் சேர்ந்து, எதிர்காலத்தில் எந்தக் கடனையும் பெறும் தகுதியை இழக்க நேரிடும்!
வங்கிகளில் கல்விக் கடன் வட்டி விகிதம்!*
கனரா பேங்க்:
(அடிப்படை வட்டி விகிதம் - 10.25%)
நான்கு லட்சம் ரூபாய் வரை - 11.75% (10.25%+1.50%).
4-7.50 லட்சம் ரூபாய் வரை - 12.75% (10.25%+2.50%).
7.50-20 லட்சம் ரூபாய் வரை - 11.75% (10.25%+1.50%).
எஸ்.பி.ஐ. பேங்க்:
(அடிப்படை வட்டி விகிதம் - 9.70%)
நான்கு லட்சம் ரூபாய் வரை - 13.20% (9.70%+3.50%).
4 -7.5 லட்சம் ரூபாய் வரை -13.45% (9.70+3.75%).
7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் - 11.45% (9.70%+1.75%).
லக்ஷ்மி விலாஸ் பேங்க்:
(அடிப்படை வட்டி விகிதம் - 11.00%)
நான்கு லட்சம் ரூபாய் வரை - 14.25% (11.00%+3.25%).
நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் - 15.25% (11.00%+4.25%).
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்:
நான்கு லட்சம் ரூபாய் வரை - 12.25%.
4-7.5 லட்சம் ரூபாய் வரை - 13.50%. 7.5 லட்சம் ரூபாக்கு மேல் - 13.25%.
இந்தியன் பேங்க்:
12.50% (மாணவர்களுக்கு), 12.00% (மாணவிகளுக்கு).
* மார்ஜின் தொகை: 4 லட்சம் ரூபாய் வரை கிடையாது. 4 லட்சம் ரூபாய்க்கு மேல் - 5%, வெளிநாட்டில் படிக்க கடன் எனில் - 15%. அனைத்து வங்கிகளிலும் மாணவிகளுக்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் வட்டி விகிதத்திலிருந்து 0.50% குறைவு.
ஒரே வீட்டில் இருவருக்கும் கிடைக்கும்!
கிருஷ்ணன், கடன் ஆலோசகர், ரிசர்வ் வங்கி:
''ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பிள்ளைகளும் ஒரே வங்கியில் கடன் வாங்கிக்கொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் எனில், அந்த மூன்று குழந்தைகளின் கல்விக் கடனையும் தனித்தனி கடனாகவே பார்க்கவேண்டும். சில வங்கிகளில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கல்விக் கடன் தரமுடியும் என கூறுவதும் அல்லது ஏற்கெனவே வாங்கிய கல்விக் கடனை திரும்பச் செலுத்தினால் தான் இரண்டாவது பிள்ளைக்கு கல்விக் கடன் தரமுடியும் என்று கூறுவதாகவும் புகார் வருகிறது. இது முற்றிலும் தவறான விஷயம். வங்கிகள் அவ்வாறு செய்து கல்விக் கடன் தரமறுத்தால் உடனடியாக புகார் செய்யலாம். ஆனால், கல்விக் கடன் எந்த காலத்திலும் ரத்தாக வாய்ப்பில்லை. எனவே, இந்தக் கடனை வாங்கியவர்கள் கட்டாயம் திரும்பக் கட்டுவது அவசியம்!''
இதையும் பாருங்க!!!

ஒரு மெயில் போதும். info@eltf.in . ஒரு மெயில் போதும். கல்விக் கடன் தேடி வரும்! படியுங்கள் படித்தபின் ஷேர் செய்யுங்கள்.... யாரவது ஒரு மாணவருக்கு / மாணவியருக்கோ இதன் மூலம் பயன் பெற்றால் கூட போதும் ! கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார். ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். அவர்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறார்கள்.(www.eltf.in ) இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவர்களே தேடிவந்து உதவிகள் செய்து தருகிறார்கள். கல்வி கற்க இனி என்ன கவலை !!