Thursday 20 February 2014

தேவையற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க!!!




நம் கம்ப்யூட்டரை வாங்கும் போதே, கம்ப்யூட்டரை வடிவமைத்துத் தரும் நிறுவனம், தான் விரும்பும் சில புரோகிராம்களைப் பதிந்து தருகிறது. காலப் போக்கில், நாமும் சில புரோகிராம்களைப் பதிகிறோம். 

அவை காலஞ் சென்ற பின்னரும், நாம் பயன்படுத்தாத போதும், அவற்றை நீக்காமல் வைத்திருக்கிறோம். சில புரோகிராம்கள், அப்போதைய சிஸ்டம் வடிவமைப்புடன் ஒத்துப் போகாதவையாக இருக்கலாம். இருப்பினும் அவற்றையும் தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்து வைத்து இயக்காமல் வைத்திருக்கிறோம். 

இவற்றுடன் பல அட்வேர் எனப்படும் விளம்பர புரோகிராம்களும் இணைந்து விடுகின்றன. அதே போல நமக்குத் தேவையான ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், தேவையில்லாத டூல்பார்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் சேர்ந்தே பதியப்படுகின்றன. இவற்றை நாம் அவ்வப்போது நீக்க வேண்டும்.


சரி, இவற்றைச் சுத்தம் செய்திடலாம் என்றால், எவற்றை நீக்குவது, எவற்றை வைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் அந்த வேலையைத் தொடங்காமலே வைத்திருக்கிறோம். 

இந்த குழப்பத்தில் இருந்து மீள, தீர்வுகளைத் தரும் புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பெயர் "Should I Remove It?”. இது, நம் கம்ப்யூட்டரில் எவற்றை எல்லாம் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம் என்று தெரிவிக்கிறது. இந்த புரோகிராமின் தன்மைக்கும் பயன்பாட்டிற்கும் பல விருதுகளை இது பெற்றுள்ளது என்பதே இதன் திறனுக்கு ஒரு சான்றாகும். 

இதனை இயக்கினால், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன புரோகிராம்கள் எல்லாம் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று காட்டுகிறது. அத்துடன் அவற்றை நீக்குவதில், எவை எல்லாம் அவசியம் நீக்கப்பட வேண்டும் என்ற வகையில் வரிசைப்படுத்துகிறது. இதன் மூலம், நாம் எந்த பயமும் இன்றி நீக்கப்படக் கூடிய புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். 

இதனைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன், நம் கம்ப்யூட்டர் எப்படி சுத்தமாக உள்ளது(?) என்று காட்டப்படுகிறது. கட்டாயமாக நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை சிகப்பு வண்ணத்தில், நீக்குவதற்கான அளவுகோலில் அதிக மதிப்பெண்களுடன் காட்டுகிறது. 

இந்த புரோகிராம் லைப்ரேரியில், இணையத்தில், சாப்ட்வேர் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான புரோகிராம்கள் இருக்கின்றன. மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் புரோகிராம்களுடன், பாபிலோன் டூல்பார், ஆஸ்க் டூல் பார் போன்றவைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் நீக்கப்பட வேண்டிய தன்மை மதிப்பெண்களுடன் காட்டப்படுகின்றன. 

இதில் காட்டப்படும் பார் சார்ட் வழியாக எத்தனை தேவையற்ற புரோகிராம்கள் நாம் அறியாமலேயே கம்ப்யூட்டரில் புகுந்துள்ளன என்று காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கியவர் பதித்த வர்த்தக ரீதியான சோதனை புரோகிராம்களின் பட்டியல் நம்மை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

இவற்றை எல்லாம் நாம் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்த்து, பின்னர் இவற்றை கட்டணம் செலுத்தி வாங்கிவிடுவோம் என்ற நப்பாசையில், சில வர்த்தக நிறுவனங்கள், கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களிடம் பணம் செலுத்தி, நாம் வாங்கும் கம்ப்யூட்டர்களில் பதிய வைக்கின்றன.

"Should I Remove It?” புரோகிராமின் கணிப்புப்படி, தோஷிபா நிறுவனம் வழங்கும் கம்ப்யூட்டர்களில் தான், அதிக எண்ணிக்கையில் தேவையற்ற புரோகிராம்கள் பதிந்து வழங்கப்படுகின்றன. அடுத்தபடியாக, சோனி மற்றும் டெல் நிறுவனக் கம்ப்யூட்டர்களில், இத்தகைய புரோகிராம்கள் அதிகம் காணப்படுகின்றன. 

"Should I Remove It?” புரோகிராம் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனுடன் கூடுதலாக, தேவையற்ற எந்த புரோகிராமும் தரப்படுவதில்லை. அனைத்து விண்டோஸ் சிஸ்டங்க ளிலும் எளிதாக இயங்குகிறது. இதனுடைய யூசர் இண்டர்பேஸ் மிகவும் பயனுள்ளதாக, அனைவரையும் வழி நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

தேவையற்ற புரோகிராம்களை நீக்க வழி காட்டும் இந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரில் தேவையான ஒன்றாகும். இதனைத் தரவிறக்கம் செய்திட, http://www. shouldiremoveit.com/download.aspx என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.