ஆசை ஆசையாய் சாப்பிட... வகை வகையாய் தோசை!
சன்னா தோசை
காலிஃப்ளவர் மசாலா தோசை
வரகு - ராகி தோசை
கம்பு - சோள தோசை
பச்சைப் பயறு தோசை
இனிப்பு தோசை
பசலைக்கீரை தோசை
வரகு - தினை - புதினா தோசை
குதிரைவாலி - சோள தோசை
மிக்ஸ்டு தோசை
கடலை மாவு தோசை
அரிசி - அவல் தோசை
பருப்பு அடை தோசை
பருப்பு - கீரை தோசை
ஜவ்வரிசி - வரகு தோசை
தோசைப் பிரியர்களை சுவையால் கட்டிப்போடுவது மட்டுமல்லாமல், தோசையே பிடிக்காதவர்களையும் விரும்பிச் சாப்பிட வைக்கும் விதத்தில் அசத்தலான 15 தோசை ரெசிப்பிக்கள் இங்கே..! இனி, தினம் தினம் `தோசைத் திருவிழா’தான் உங்கள் வீட்டில்!
சன்னா தோசை
தேவையானவை:
சன்னா மசாலாவுக்கு:
வெள்ளை/கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம் (ஊறவைத்து, வேகவைக்கவும்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்,
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தோசைக்கு:
இட்லி மாவு - 2 கப்
பச்சரிசி மாவு - 2 கப் (உதிரி மாவு)
நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
சன்னா மசாலா செய்யும் முறை:
கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சன்னா மசாலாவைத் தயார் செய்யவும்
தோசை செய்யும் முறை: இட்லி மாவு மற்றும் பச்சரிசி மாவை உப்பு சேர்த்து தோசை பதத்துக்கு ஒன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்ற... அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு... தோசை வேகும்போது தயார் செய்த சன்னா மசாலாவை அதன் மீது பரவலாக தேய்த்து மடித்து எடுத்து சுவையாகச் சாப்பிடவும்.
காலிஃப்ளவர் மசாலா தோசை
தேவையானவை:
தோசை மாவு - 200 கிராம்்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் -100 கிராம்
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 100 கிராம்
பெங்களூரு தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி, பின்னர் காலிஃப்ளவரையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் நன்கு வேகவைத்து இறக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு... தயார் செய்து வைத்த காலிஃப்வளர் மசாலாவை அதில் வைத்து பரவலாகத் தேய்த்து தோசையை மூடி வேகவிட்டு எடுத்தால்... சூடான காலிஃப்வளர் மசாலா தோசை ரெடி!
வரகு - ராகி தோசை
தேவையானவை:
வரகு அரிசி - 200 கிராம்
கோதுமை - 100 கிராம்
ராகி - 100 கிராம்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 2 டீஸ்பூன்
நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்க்கவும். 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இது மிகவும் சத்தான தோசை.
கம்பு - சோள தோசை
தேவையானவை:
கம்பு - 100 கிராம்
அரிசி - 200 கிராம்,
சோளம் - 50 கிராம்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
சிறிதாக நறுக்கிய காய்ந்த மிளகாய் - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, கம்பு, சோளத்தை தண்ணீரில் 8 மணி நேரமும், உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை வறுத்துக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். மாவை சிறிது நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
பச்சைப் பயறு தோசை
தேவையானவை:
பச்சைப் பயறு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப)
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைப் பயறைக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சீரகம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அதில் உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்கிக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி, நல்லெண்ணெய் (அ) நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இனிப்பு தோசை
தேவையானவை:
இட்லி அரிசி - 100 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
உளுந்து - 25 கிராம்
ஏலக்காய் - 2
பொடித்த வெல்லம் - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை 5 மணி நேரமும், உளுந்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை தோசையாக வார்த்து, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
இதே மாவை பணியாரக்கல்லில் ஊற்றி, நெய் சேர்த்து பணியாரமாகவும் சுட்டெடுக்கலாம்.
பசலைக்கீரை தோசை
தேவையானவை:
இட்லி மாவு - 200 கிராம்
பசலைக்கீரை - அரை கட்டு
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்துக்கொள்ளவும். அதே எண்ணெயில் பொடியாய் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இவை அனைத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும். மாவை சூடான தோசைக் கல்லில் ஊற்றி, தேங்காய் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
வரகு - தினை - புதினா தோசை
தேவையானவை:
வரகு அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம்
தினை, உளுந்து - தலா 50 கிராம்
சிவப்பு அவல் - அரை கிலோ
வெந்தயம் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
புதினா தொக்குக்கு:
புதினா - அரை கட்டு
சீரகம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - அரை கப்
காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வரகு அரிசி, இட்லி அரிசி, தினையை 8 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து, ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்க்கவும். சிவப்பு அவலை பத்து நிமிடம் ஊற வைத்து கையால் மசித்து மாவில் சேர்க்கவும். சிறிது நேரம் புளிக்க வைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு புதினா தொக்குக்கு கொடுத்தவற்றை (உப்பு நீங்கலாக) சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் மையாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இந்த தொக்கை தோசை மீது தேய்த்து, தோசையைச் சுருட்டி சூடாகப் பரிமாறவும்.
குதிரைவாலி - சோள தோசை
தேவையானவை:
குதிரைவாலி அரிசி - 100 கிராம்
இட்லி அரிசி - 100 கிராம்
சோளம் - 50 கிராம்
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
ரவை - 50 கிராம்
பச்சரிசி மாவு - 50 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி மற்றும் சோளத்தை 8 மணி நேரமும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு மணி நேரமும் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் ரவை, பச்சரிசி மாவை சேர்க்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கி, மாவுடன் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். பின்பு, மாவை சூடான தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து, எண்ணெய் (அ) நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
மிக்ஸ்டு தோசை
தேவையானவை:
கேரட், பீட்ரூட், முள்ளங்கி - தலா ஒன்று (முற்றாதது - துருவிக்கொள்ளவும்)
இட்லி மாவு - 200 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம் (உதிரி மாவு)
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் (அ) கடலை எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
இட்லி மாவுடன் பச்சரிசி மாவைச் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... துருவிய கேரட், பீட்ரூட், முள்ளங்கியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும்.
வதக்கி வைத்த கேரட், பீட்ரூட், முள்ளங்கியை மாவுடன் சேர்க்கவும். அதனுடன் உப்பு, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, நெய் (அ) கடலை எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கடலை மாவு தோசை
தேவையானவை:
கடலை மாவு, அரிசி மாவு - தலா 100 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சீரகம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவை ஒன்றாக சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்துக் கலக்கி... தேங்காய் துருவலைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தைச் சேர்க்கவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
அரிசி - அவல் தோசை
பச்சரிசி மாவு (உதிரி மாவு), அவல், அரிசி மாவு (புழுங்கல் அரிசி) - தலா 100 கிராம்
ரவை - 50 கிராம்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 3 (பொடித்துக்கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அவலை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து கையால் மசிக்கவும். பச்சரிசி மாவு, ரவை, மசித்த அவல், அரிசி மாவை ஒன்றாக சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை லேசாக எண்ணெயில் வதக்கி மாவுடன் சேர்க்கவும். இதில் உப்பு, மிளகு, சீரகம், பொடித்த முந்திரி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை மாவில் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் (அ) நெய் விட்டு சுட்டெடுத்து சுவைக்கவும்.
இதை வெல்லம் சேர்த்து இனிப்பு தோசையாகவும் செய்யலாம்.
பருப்பு அடை தோசை
துவரம்பருப்பு, பச்சைப் பயறு - தலா 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
கொள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா 100 கிராம்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிதளவு
தேங்காய் - அரை மூடி (துருவவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று
கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - சிறிதளவு
காய்ந்தமிளகாய், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
3 மணி நேரம் ஊறவைத்த துவரம்பருப்பு, பாசிப்பயறு, கடலைப்பருப்பு, கொள்ளு, பச்சரிசி, புழுங்கல் அரிசியுடன்... இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை, தக்காளி, உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையையும் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
பருப்பு - கீரை தோசை
பச்சைப் பயறு - 100 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
இட்லி மாவு - 100 கிராம்
முருங்கைக்கீரை - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அதனுடன் இட்லி மாவு, கோதுமை மாவு சேர்க்கவும். முருங்கைக்கீரையை தனியே வேகவைத்து அரைத்த மாவுடன் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயை மாவுடன் சேர்த்து... உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து, வேகவிட்டு எடுக்கவும்.
முருங்கைக்கீரைக்குப் பதில் சிறுகீரையும் பயன்படுத்தலாம்.
ஜவ்வரிசி - வரகு தோசை
ஜவ்வரிசி - 50 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
வரகு அரிசி - 100 கிராம்
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி மற்றும் வரகு அரிசியை தண்ணீர் ஊற்றி ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஊறவைக்கவும். ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறவைத்தவற்றை எல்லாம் ஒன்றாக கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். இதில் சீரகம், மிளகு சேர்த்து கலக்கிகொள்ளவும். இதனை மூன்று மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
No comments:
Post a Comment