Thursday 10 January 2019

தோசை,மல்லிகை இட்லி!!!

பட்டுபட்டா தோசை, மல்லிகைப்பூ இட்லி
ரவா தோசைக்கு அரிசி மாவை விட அரிசியை ஊறவைத்து மிக்ஸியில் நைஸôக அரைத்து அத்துடன் ரவா, மைதா கலந்து தோசை வார்த்தால் தோசை கல்லிலிருந்து தானாகவே எழும்புவது போல் நன்றாக வரும். அதிக நேரமும் வேகாது. சட்டென வார்த்துவிடலாம்.
தோசை மாவில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து வார்த்தால் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.
தேன்குழலுக்கு அரைத்தமாவு மீந்துவிட்டால் அதைக் கரைத்து உப்பு, சீரகம், கரிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால் பட்டு, பட்டாக தோசை வரும்.
மொறு மொறு தோசைக்கு, ஒரு பிடி பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து தோசைமாவுடன் கலந்து வார்த்தால் சூப்பர் பேப்பர் ரோஸ்ட் தயார். கல்லில் ஒட்டாது. எண்ணெய் குடிக்காது.
ஒவ்வொரு முறையும் தோசை ஊற்றுவதற்கு முன்பாக தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டு ஊற்றினால் தோசை கருகாது.
இட்லி கெட்டியாக இருக்கிறதா? நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து, மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து அதற்குபின் இட்லி வார்த்துப் பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.
இட்லிமாவில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு இட்லி அவித்தால் பூப்போல வரும்.
ஸ்பெஷல் இட்லி செய்ய விருப்பமா? கோதுமை ரவை ஓர் ஆழாக்கை ஊறவைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அத்துடன் அரை ஆழாக்கு உளுந்தையும் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, நாலு பட்டாணி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து இட்லி வார்த்தால் சூப்பர் சுவையாக இருக்கும்.
இட்லிக்கு ஊறவைக்கும் போது அரிசியை நன்கு களைந்துவிட்டு வெதுவெதுப்பான வெந்நீரில் ஊறவைத்தால் இட்லி மெத்தென்று இருக்கும்

No comments: