Monday, 18 March 2013

Kirix Strata for 64-bit Windows: Kirix Strata for Windows


கட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை உண்டு.
புள்ளி விவரங்கள் மற்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ள தகவல்களை இப்படி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. அப்படியே சேமித்து வைத்துக் கொண்டாலும், அட்டவணை பாணியில் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாது.
பெரும்பாலானோர் அட்டவணை தகவல்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுவார்கள். ஆனால் புள்ளி விவரங்களில் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு இது மிகவும் சிக்கலாகி போய் விடுவதுண்டு.
அப்போதெல்லாம் அவர்களுக்கு அட்டவணைகளை உள்ளது உள்ளபடியே சேமித்து வைக்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அது மட்டுமல்ல, அட்டவணை விவரங்களை தங்களது கோப்பில் தேவையான இடத்தில் இடம் பெற வைத்து அதன் விவரங்களை அலசி ஆராய முயன்றால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.
இத்தகைய புள்ளி விவர பிரியர்களுக்காக என்றே புதியதோர் பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. எண்ணிக்கைகளில் கையாள்வதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசரின் மூலம் புள்ளிவிவரங்கள் மற்றும் அட்டவணை தகவல்களை பயன்படுத்துவதும், கையாள்வதும் சுலபமாக்கப்பட்டுள்ளது.
கிரிக்ஸ் ஸ்டிராட்டா எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை கையாள்வது மிகவும் எளிதாகி விடுகிறது. இந்த பிரவுசரை பல விதங்களில் பயன்படுத்தலாம்.
உதாரணத்திற்கு ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் தொடர்பான வசூல் விவரங்களை சேகரித்து அதற்கு முன்னர் வந்த 5 படங்களின் வசூல் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.
இதே போல, அந்த நடிகரின் குறிப்பிட்ட எந்த படம் பிரபலமாக இருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அட்டவணையாக மாற்றியும் பார்த்துக் கொள்ளலாம். இந்த புள்ளி விவரங்களை எந்த குறிப்பிட்ட தளத்திலிருந்து வேண்டுமானாலும் எடுத்து நம் இஷ்டம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.எத்தனை இணையதளங்களிலிருந்து வேண்டுமானாலும் புள்ளி விவரங்களை எடுத்து பயன்படுத்தலாம். அவற்றை கொண்டு புதிய அட்டவணையை உருவாக்குவதும் மிகவும் சுலபமானது.
தகவல்களை டைப் செய்யும்போது, அட்டவணையை தயார் செய்வதுதான் உள்ளபடியே மிகவும் கடினமானது. அந்த செயலை இந்த பிரவுசர் மிகவும் சுலபமாக்கி விடுகிறது.
புள்ளி விவரங்கள் மட்டுமல்லாமல் செய்தியோடை (ஆர்எஸ்எஸ்) வசதி மூலம் பெறப்படும் செய்திகளையும் இப்படி அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட எந்த செய்தி அதிகம் படிக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நேட் வில்லியம்ஸ் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த பிரவுசரை உருவாக்கியுள்ளார். புள்ளி விவரங்கள் தொடர்பான சிக்கலை நன்கு அறிந்திருந்த அவர், முதலில் வர்த்தக நிறுவனங்களில் தகவல் தொகுப்புகளில் உள்ள சிக்கல்களை சரி செய்வதற்கான சாப்ட்வேரை உருவாக்கினார். அதன் பிறகே அவருக்கு இந்த சாப்ட்வேர் இன்டெர்நெட் முழுவதற்கும் பயன்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.
அதன் அடிப்படையில் அந்த சாப்ட்வேரின் மேம்பட்ட வடிவை உருவாக்கி அதனையொரு முழு வீச்சிலான பிரவுசராக மாற்றினார். தற்போது அந்த பிரவுசர் இணையவாசிகளின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எந்த பிரவுசரை போலவே இதனை பயன்படுத்தலாம்.
அது மட்டுமல்லாமல் இந்த பிரவுசரை நமது கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை கையாள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரவுசர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.