Friday, 15 March 2013

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பழுதான சிறுநீரகமா? பயம் வேண்டாம்!

[19kadir7.jpg]சிறு நீரை வெளியேற்ற வேண்டிய சிறுநீரகங்கள் தம் செயல்திறனை இழந்துள்ள நிலையில், பின் முதுகின் மேற்புறத்திலிருந்து கீழ் இடுப்பு வரை, வாயுவைக் கண்டிக்கும் மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட தைலத்தால் வெதுவெதுப்பாக நீவிவிட்டு, அதன்பிறகு தொப்புளுக்குக் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீர்ப்பையின் மேற்புறத்திலும் தைலத்தைத் தடவி, ஒரு பெட்டியினுள் நோயாளியை தலை மட்டும் வெளியே தெரியும் வகையில் அமர்த்தி, பெட்டியினுள் மூலிகை இலைகளால் வரும் நீராவியை பரவச் செய்வதன்மூலம் உடலிலிருந்து வியர்வை பெருகும்.
  
தைலம் உட்புற நெய்ப்பையும், வியர்வை உட்புற மிருதுவையும் ஏற்படுத்துவதால், சிறுநீரகங்களின் உள்ளே பெரிய மற்றும் சிறிய கிளைகளாகப் படர்ந்து விரிந்துள்ள ரத்தக் குழாய்களில் ரப்பர் போன்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. விரிந்து சுருங்கும் தன்மையை இந்தக் குழாய்கள் அடைந்துவிட்டால் சிறுநீரகங்களின் மந்தமான செயல்பாடு நீங்கி, அவை மறுபடியும் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. ரத்த அழுத்தம் சிறுநீரகங்களின் உள்ளே சரியாகிவிட்டால், சிறுநீரைப் பிரித்து எடுக்கும் வேலை அவற்றிற்கு எளிதாகிவிடும்.
 
சிறுநீர்த்தடை உள்ளவர்கள், அதிலும் முக்கியமாக டயலிஸஸ் செய்து கொள்பவர்கள் தண்ணீரை அதிகம் அருந்தக் கூடாது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தண்ணீரையே ஒரு மூலிகைத் தண்ணீராக்கிப் பருகினால் சிறுநீரகங்களின் திசுக்கள் வலுப்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் தேவையற்ற நீர்த்தேக்கத்தையும் தவிர்க்கலாம். தர்ப்பை வேர், கரும்புவேர், வெள்ளரி விதை, நெருஞ்சில் விதை, நீர்முள்ளி ஆகியவற்றை வகைக்கு 3 கிராம் வீதம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரை லிட்டராகக் குறுக்கி, வடிகட்டி, மண்பானையில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த மூலிகைத் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தக்க இடைவெளிவிட்டு ஒரே நாளில் பருகிவர, சிறுநீரகங்களின் உள்ளே சென்று எளிதாக வடிகட்டிகளைத் தூண்டச் செய்யும்.

நோயாளிகளின் கிரியாட்டின் மற்றும் யூரியா ஆகியவற்றின் அளவு, ரத்தத்தில் இரும்புச் சத்து, பாஸ்பரஸ் அளவு போன்றவை அடிக்கடி கண்காணிக்கப்பட வேண்டியவை. சிறுநீரக செயல்பாடு மேம்பட்டுவிட்டால் இவை அனைத்தும் சாதாரணநிலைக்குத் திரும்பிவிடும். டயலிஸஸ் மூலம் வலுக்கட்டாயமாக ரத்தத்திலிருந்து நீரைப் பிரித்து எடுத்து வெளியேற்றுவதால், சிறுநீரகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. அதுவே அவற்றிற்கு மந்தமான நிலையைத் தந்துவிடுகின்றன.
 
சிறுநீர்த்தடை நீங்க உணவுக்கு முன்பாகவும், உணவு செரித்த பின்னரும் பருகப்படும் நெய் உதவுகிறது. சாதாரண நெய்யைக் காட்டிலும் வஸ்த்யாமயாந்தககிருதம் எனும் நெய் மருந்து சாப்பிட உகந்தது. 10 மி.லி. நெய்யை உருக்கி காலை உணவிற்கு முன்பாக ஒரு தரம் சாப்பிட்டு, உண்ட காலை உணவு செரித்த பிறகு, இதே நெய் மருந்தை மறுபடியும் உருக்கி, 20 மி.லி. அளவு சாப்பிட வேண்டும். இந்த நெய் மருந்து செரித்த பிறகே அடுத்த உணவைச் சாப்பிட வேண்டும். வஸ்தி என்றால் சிறுநீர்ப்பை. ஆமயம் என்றால் நோய். அந்தகம் என்றால் இல்லாமல் செய்துவிடுதல். அதாவது சிறுநீரகக் கோளாறுகளை இந்த நெய் நீக்குவதால் அதற்கு வஸ்த்யாமாயாந்தககிருதம் என்று பெயர். கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக் கடைகளில் இந்த மருந்து விற்கப்படுகிறது.