Monday, 7 July 2014

பருப்பு தண்ணி மசாலா!!!

பருப்பு தண்ணி மசாலா
தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி, பச்சை மிளகாய் – தலா 2,  சோம்பு, சீரகம் -  ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறி பவுடர் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து…. பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.



கீரை கூட்டு
தேவையானவை: சிறுகீரை – ஒரு கட்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன்,  பச்சை மிளகாய் – 2, வறுத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை  டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் – சீரக விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு – கீரையை சேர்த்து, உப்பு போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

காளான் வதக்கல்
தேவையானவை: காளான் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, மிளகு – 2 டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்),  மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காளானை கழுவி நறுக்கி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.

கொத்தமல்லி துவையல்
தேவையானவை: கொத்தமல்லி – ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் -  இரண்டு டேபிள்ஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
இது… இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.