Saturday, 12 April 2014

குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை!!!

வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவின் வழியே உங்களை சந்திக்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்...

குழந்தையின் வளர்ச்சி :


பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.பிறந்த குழந்தையானது...

முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்
2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்
3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
8-வது மாதத்தில் : தவழும்.
9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.
10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.
36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.
  • கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றைபாலூட்டும் தாய்மார்கள்உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
  • பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
  • ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.

பிறந்த குழந்தைக்கான உணவு


  • பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிரசவித்தவுடன் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்புடன் இருக்கும். இதைச் சீம்பால் என்பார்கள். இதில் பல ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் இருப்பதால் இதைத் தவறாமல் குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
  • பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.
  • குழந்தை பிறந்ததும், சர்க்கரை, தேன் ஆகியவை கலந்த நீர், வெண்ணெய் போன்றஎதுவும் வேண்டாம். வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைசுமார் 15 மி.லி கொடுக்கலாம். வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மருந்துகளை, தேவைப்பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனையுடன் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் பசும்பாலில் இரண்டு பங்கும் தண்ணீரில் ஒரு பங்கும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு சிறிதளவு சர்க்கரையை சுவைக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.
பாலுடன் சேர்ந்த பிறஉணவுகள் :


தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.
  • ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
  • ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேகவைத்த முட்டையின் மஞ்சள்கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
  • பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்ûயும் ஊட்டலாம்.
  • பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம்.
  • பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
  • அரிசி, கோதுமை, கேழ்வரகு, பொட்டுக் கடலை போன்ற உணவுகளை சர்க்கரையைக் கலந்து கொதிக்க வைத்துக் கஞ்சியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
  • புதுவகை உணவைக் கொடுக்கும் போது பழக்கமான உணவைக் கொடுப்பது போல ஒட்டு மொத்தமாக அதிகம் கொடுக்கக் கூடாது. எந்தப் புதுவகை உணவையும் தினமும் ஒருமுறைசிறிதளவு கொடுத்துப் பழக்கிய பிறகே, அந்த உணவின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.

குழந்தையும் கை மருத்துவமும் :


  • பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
  • பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடையகல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது “மஞ்சள் காமாலை” நோயாக இருக்கலாம்.
  • பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும்.இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
  • சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
  • குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
  • கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லிஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
  • இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான்என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
  • பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான சுகாதாரம் :


  • கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
  • புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
  • குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
  • குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
  • குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
  • குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
  • குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி : மருத்துவர் திரு .ஸ்டீபன் அவர்கள்..