Sunday, 8 October 2017

தீபாவளி லேகியம்!!!


சமைந்த பெண்ணை மனையில் அமர்த்த, நவராத்திரிக்கு புட்டு செய்வது போல அல்ல; தீபாவளி லேகியம் செய்வது. கொஞ்சம் சிரமம். தீவிரமானது. பொறுமையும் கை வலுவும் அவசியம்.

ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும். அந்நேரம் கல்யாணமாகி வந்த புதிதில் எதற்கும் குறுக்கில் வந்துநின்ற மாமியாரை மனதில் நிறுத்தவும்.

வறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு, தெய்வமகளை அல்லது கூட்டுச்சதியைச் சொல்லித்தரும் டப்பிங் சீரியலைப் பார்க்கவும். இரண்டாவது இடைவேளையின் போது எழுந்துவந்து வெல்லத்தை உடைத்து தண்ணீரில் தண்ணீரில் போட்டுவிட்டுப் போகவும். சீரியல் முடிந்தவுடன், ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும்.

முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும்
மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இரும்பு உலக்கைக் கொண்டு இடித்து சலிக்கவும் என்றால், எதுக்குடா தீபாவளி என்றோ, க்ருஷ்ணா ஸ்வீட்ஸிலோ, மாம்பலத்திலோ வாங்கிப்பேன் என்று சொல்வீர்கள்.

சற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும்.
கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும். கொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் தினம் அடுப்படி காரியங்கள் பார்த்தால் ஒழிய மணிக்கட்டை வலிக்கும். விரல்கள் சட்டுவத்தைப் போட்டுவிட்டுப் போய்விடு என்று சொல்லும். ஆனால், மனோ வைராக்கியத்தோடு அதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு, தொடர்ந்து எண்ணெய் குறையக் குறைய விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.

கிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது. பொருள் நஷ்டமாகும். உங்களால் முடியாது எனில் ஆத்து சமையல் மாமியை செய்து தரச் சொல்லவும்.

No comments: