தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய
ஒரு டஜன் யோசனைகள் - ஸ்வீட்ஸ் செய்ய... ஸ்வீட் டிப்ஸ்!
1. பூந்திக்கு மாவு பிசையும்போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் சேர்த்துக் கலந்து பிசைந்தால் பூந்தி உப்பி வரும்.
2. சிறுதானியங்களில் பலகாரம் செய்யும்போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.
3. சர்க்கரைப்பாகு செய்யும் போது பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.
4. குலாப்ஜாமூன் பார்க்கும்போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை லேசாக சூடு செய்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் ஜாமூனை ஊறவைத்தால் மிருதுவாகிவிடும்.
5. மைசூர்பாகு செய்யும் போது கடலை மாவுடன், முந்திரியைப் பொடித்துச் சேர்த்துப் பிசைந்தால் புதிய சுவையுடன் இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
6. தட்டைக்கு மாவு பிசையும் போது வறுத்துத் திரித்த கறிவேப்பிலைப் பொடியை சேர்த்துப் பிசைந்தால் நல்ல மணமாக இருக்கும்.
7. சீடை உருட்டிய பிறகு அதன் மேற்புறத்தில் ஊசியால் ஆங்காங்கே சிறிய துளை யிட்டு பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.
8. அல்வா செய்யும்போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பதுபோல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப்படும்.
9. பயத்தம்லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன்பு, பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.
10. ரசகுல்லா செய்யும் போது முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரச குல்லாவின் சுவை ஒரே நாளில் மாறிவிடும்.
11. முறுக்கு செய்யும்போது நீங்கள் எடுக்கும் அளவில் கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால் மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.
12. எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது எண்ணெயில் கோலிக்குண்டு அளவுக்கு புளியைச் சேர்த்துவிடுங்கள். பிறகு பலகாரங்கள் பொரித் தெடுத்தால் அதிக எண்ணெய் குடிக்காது, எண்ணெயும் பொங்கி வழியாது.
No comments:
Post a Comment