Sunday, 1 October 2017

அரைத்துவிட்ட சாம்பார்!!!

அரைத்து விட்ட சாம்பார் !!!

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
முருங்கைக்காய் - 1 (அல்லது விருப்பமான காய் சிறிதளவு)
சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை
தக்காளி - 1
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

காய்ந்த மிளகாய் - 6 முதல் 8 வரை
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

முருங்கைக்காய் அல்லது விருப்பமான காயை 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோலுரித்து விட்டு நீள வாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து, கரைத்துப் பிழிந்துக் கொள்ளவும். புளித்தண்ணீர் 2 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைப் போட்டு சற்று சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்தப்பின் மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும், அரைத்த விழுதில் சேர்த்துக் கொள்ளவும்.

வாணலி அல்லது அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் 1 டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் அத்துடன் முருங்கைக்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள வேறு காயைப் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும். காய் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது, வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

No comments: