“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்)
ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.கணவனும், மனைவியும் கூடும் முறையால், எப்படிப்பட்ட குழந்தை பிறக்கிறது என்பதற்கு திருமூலர் தரும் விளக்கம்
மனைவியுடன் கணவன் உறவு கொள்ளும்போது அவனது சுவாசமானது சீரான அளவோடு பாய வேண்டும். அவ்வாறு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு உடல் குறை எதுவும் இருக்காது.
உறவின் போது ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் சென்றால் ஆண் குழந்தை உருவாகும். சுவாசம் இடது பக்கம் சென்றால் அது பெண் குழந்தை உருவாக காரணமாகும். இரு நாசியின் வழியாகவும் மூச்சு ஒரே மாதிரி வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல் திருநங்கையாக இருக்கும்.
ஆணின் சுவாசமானது அளவில் குறைந்து போனால் பிறக்கும் குழந்தை குள்ள வடிவமாக இருக்கும்.
சுவாசம் இயல்பான நிலையில் இல்லாமல் இளைத்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும்.
சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.
இப்படி, தனது திருமந்திரத்தில் விளக்கம் தரும் திருமூலர், ‘அந்த‘ உறவின்போது பெண்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறார்.
கூடலின்போது பெண்ணின் வயிற்றில் மலம் சரிவர கழியாமல் தங்கி மிச்சம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த குணம் கொண்டதாக இருக்கும்.
இதுபோல், பெண்ணின் உடலில் சிறுநீர் தங்கியிருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகவும், மலம், சிறுநீர் இரண்டும் சரியான அளவில் தேங்கி இருக்குமானால் பிறக்கும் குழந்தை குருடாகும் என்கிறார்.
சரி... எந்த நிலையில் தான் நல்ல, ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்று கேட்கிறீர்களா? அதற்கு திருமூலரின் பதில்.
தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.
இப்படி அறிவுரை வழங்கும் திருமூலர், அந்த நேரத்திற்கு எப்படி தயாராவது என்பது பற்றியும் கூறியுள்ளார்.
உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.
ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.