Wednesday, 9 October 2013

மிகுந்த பயனுள்ள சமையல் குறிப்புகள்!!!



*வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

*அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

*கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

*தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

*வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

*பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

*இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

*பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

*தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

*எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

*ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

*இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.

*பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

*இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வார்க்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக இருக்கும். இரண்டு தினங்களுக்குக் கெடாமல் இருக்கும். பிரயாணங்களுக்கு உகந்தது.
காய்கறிகளில் சில காய்கள் கசப்பு சுவையுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

*காபி, தேனீர் போன்ற பானங்கள் சுவையும் மணமும் கொண்டதாக இருக்க, அவ்வப்போது புதிதாக இறக்கிய டிகாஷனையே பயன்படுத்த வேண்டும்.

*கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

*மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

*பால் வைக்கும் பாத்திரம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பால் கெடாமல் இருக்கும். பாலுடன் இரண்டொரு நெல் மணிகளைப் போட்டு வைத்தால், காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

*சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.

*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.

* காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.

*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

* தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.

* சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

*குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

*கட்லெட் செய்ய ‘பிரெட் கிரம்ப்ஸ்’ கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.

*கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.

*வீட்டில் டீ தயாரிக்க நீரைக் கொதிக்க விடும் போது ஒரே ஒரு புதினா இலையையும் போட்டுக் கொதிக்க விட்டுப் பாருங்கள். டீயின் மணமும், ருசியும் அபாரமாயிருக்கும்.

@ ரசம் தயாரிக்கும் போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேருங்கள். சூப்பராக இருக்கும் ரசம்.

@ இட்லிக்கு மாவாட்டும்போது ஒரே ஒரு ஆமணக்கு விதையைத் தோல் நீக்கிப் போட்டுப் பாருங்கள். இட்லி விள்ளாமல் விரியாமல் மெத்மெத்தென்று இருக்கும்.

@ காட்டு நெல்லிக் காயைக் கழுவி, கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள். வைட்டமின் குறையாத ஊறுகாய் ரெடி.தேவைப்பட்டால் மிளகாய்ப் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.

@ அடைக்கு அரைக்கும் போது மர வள்ளிக் கிழங்கை உரித்து சில துண்டுகள் நேர்த்து அரைக்கலாம். உருளைக் கிழங்கையும் துண்டுகளாக்கிப் போட்டு அரைக்கலாம். மொறுமொறுவென்று இருக்கும் அடை.

@ மிஞ்சி விட்ட பழைய சோற்றை உப்பு போட்டுப் பிசைந்து நாலைந்து மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடி செய்து போட்டுக் கலந்து சிறிய உருண்டைகளாய் உருட்டி வெயிலில் வைத்து விடுங்கள். சோற்று வடாம் ரெடி.

@ பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பச்சையாகவே துவையல் அரைக்கும் போது புளி போடுவதற்குப் பதிலாக ஒரு துண்டு மாங்காயைப் போட்டு அரைத்தால் சுவையும் மணமும் அதிகமாகும்.

@ மோர்க் குழம்பு வைக்கும் போது அரிநெல்லிக்காய் களை அரைத்துப் போட்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

நன்றி:

பெட்டகம்


உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி