Thursday, 17 October 2013

“கொசுவை,ஈசியாவிரட்டலாம்!’ !!!

“கொசுவை,ஈசியாவிரட்டலாம்!’ சித்த மருத்துவர் செல்வ சண்முகம்:
“டெங்கு’ வைரசை பரப்புவது, “ஏடிஸ்’ வகை கொசுக்கள் தான். இந்த கொசுக்களை ஒழித்தாலே, டெங்குவை ஒழித்து விடலாம். இந்த வகை கொசுக்கள், சாக்கடையில் வளராது; அதற்கு தேவை, சுத்தமான நீர் தான். நல்ல நீரில் மட்டுமே வளரும் என்பதால், பிளாஸ்டிக் கன்டெய்னர், ட்ரெம், பயன்படுத்தப்பட்ட டயர்கள், செல்லப் பிராணிகளுக்கு உணவு வைக்க பயன்படுத்தப்படும் கிண்ணங்கள், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் தேங்கும் நீர், வீட்டைச் சுற்றி பாலித்தீன் பைகளில் தேங்கும் நீர் இவையெல்லாம், ஏடிஸ் கொசுக்களுக்கு கொண்டாட்டம். எனவே, இங்கெல்லாம் தண்ணீர் தேங்க விடக்கூடாது.
கொசுவை ஒழிப்பதற்கு, இயற்கையான முறையிலேயே தீர்வு உள்ளது. நொச்சி இலை, துளசி, தும்பை செடி மற்றும் பூ இவற்றை மிக்சியில் அரைத்து, 50 மி.லி., தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, வடிகட்டி அதனுடன், வேப்ப எண்ணெயை கலந்து கை, கால்களில் தடவினால், கொசு கடிக்காது.ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அல்லது இலை சருகு போட்டு, அதன் மேல், மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறை சரி செய்யும். சூழல் கேடு ஏற்படுத்தவே செய்யாது.
கொசு ஒழிப்பிற்கு, இது ஒரு நல்ல வழி. அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்தால், இதுகுறித்து, அனைவரும் கூடிப் பேசி, பொது இடத்தில், இந்த புகை மூட்டம் வைத்தால் நல்ல பலன் கொடுக்கும். தோட்டம் இருந்தால், துளசி, திருநீற்று பச்சிலை செடியை நட்டு வைக்க, கொசுக்கள் வருவது குறையும். தவிர்க்க முடியாமல், வீட்டைச் சுற்றி நீர் தேங்கினால், அதில், ஒரு தேற்றான் கொட்டையை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு விதை வீதம் அரைத்து கலந்து விடலாம். மஞ்சள் கிழங்கையும் அரைத்து அதில் கலக்கி விட்டால், இயற்கையான கிருமி நாசினி இது தான்.