Wednesday 18 September 2013

வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்!!!

வெற்றிக்கு வழிவகுக்கும் சுவாசம்:

விதியை மாற்றும் அறிவை அடைந்தவர்கள் சித்தர்கள் என்றோம். நாளும் நடைபெறும் நடப்புகளை தங்கள் சுவாசம் மூலமாகவே தங்கள் விருப்பப்படி நிறைவேற்றிக்கொள்ள எளிய முறைகளைக் கண்டு கூறியிருக்கிறார்கள் நம் சித்தர்கள். இதற்குச் ‘சரம் பார்த்தல்’ என்று பெயர்.

‘ஞானசர நூல்’ எனச் சரம் பார்த்தல் பற்றியும் நமது வாழ்வில் நாம் விரும்பும் வெற்றியை விரும்பிய விதமே பெறும் ஆற்றலைப் பெறும் வழிகளையும் நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் நாமோ, “தொடத் தொட தங்கமாகும் வித்தையை” கையில் வைத்துக்கொண்டே வறுமையில் நம் வாழ்வை ஒட்டி வருகிறோம்.

கேட்கில் இடம்: தூது ஆடை, அணி பொன்பூணல்
கிளர்மனம், அடிமைகொளல், கீழ்நீர் கிண்டல்
வாழ்க்கை மனை எடுத்தல், குடிபுகுதல், விற்றல்
மன்னவரைக் காணல், உண்மை வறுவல், சாந்தி
வேட்கை, தெய்வப் பதிட்டை, சுரம் வெறுப்புத் தீர்த்தல்,
விந்தைப் பெறுதல், தனம் புதைத்தல் மிகவும் ஈதல்,
நாடகமல மலர் முகத்தாய் நரகம் தீர்த்தல்
நன்றேயாம் இவ்வை எல்லாம் நயந்து பாரே!

சந்திர கலை அதாவது இடது நாசியில் மூச்சு ஓடும் போது செய்யத்தக்க காரியங்களின் பட்டியல் இது. செய்தால் இவற்றில் வெற்றி நிச்சயம் என ஞான சர நூல் 8 கூறுகிறது.

பார்க்கில் வலம்: உபதேசம், வித்தை, சேனை,
படையோட்டல், பயிர்செட்டுக் களவு, சூது,
பேர்க்கவொணா வழக்குக் கரிபரி, தேரூர்தல்
பிறங்கும் எழுந்திடுதல், சங்கீதம், பாடல்
வார்த்தை, பகைப் பக்கம் கோள், பசாசு தீர்த்தல்,
மந்திரஞ் சாதித்தல், மருந்துண்ணல், உறங்கல்,
கோத்த புன்னாடல், கொல்விடங்கள் தீர்த்தல்
கொடும்பிணி, தம்மென்பன யோகங் குறிக்கும் தானே
- ஞான சர நூல் 9

இவை சூரிய கலை எனப்படும் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது செய்யத்தக்கவையாகும். இந்தச் சர ஞானமும் சரிவர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, முறைபடுத்தப்படுமானால் தமிழர் சமுதாயம் உலகின் வளமான சமுதாயமாக ஆகிவிடும். நமது பாரம்பரிய அறிவு நமக்கு பயன்படாமல் இன்னும் இருக்கலாமா?
-----------------------------------------------------