Thursday, 16 May 2013

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?

ஆங்கில மொழியினை பேசுவோர் அதிகம் எங்கிருக்கிறார்கள்? பிரிட்டனில் உள்ளவர்களைக் காட்டிலும் மற்ற நாடுகளில் உள்ளவர்களே அதிக எண்ணிக்கை யில் உள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில், ஆங்கில மொழியின் பயன்பாடும், அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் எப்போதும் அதிகம் தான். ஆனால், ஆங்கிலச் சொற்களில் பல அவற்றைப் பயன்படுத்தும் போது, அவை காட்டும் பொருளில் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/Effect, new/anew, practice/ practise, sour/ sore, side/aside,warranty/guarantee,affluent/effluent /suit,suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாட்டினையும், எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இந்த குழப்பத்தினை ஓர் அகராதி போக்கிவிடும் என்றாலும், இணையத்தில் உடனடியாக சொற்களுக்கிடையே காணப்படும் வேறுபாட்டினைக் காட்டும் தளங்களும் உள்ளன. அவ்வகையில் அண்மையில் நான் பார்த்த ஓர் இணைய தளம் உள்ளது. இந்த தளத்தின் முகவரி http://www.confusingwords.com/index.php. இந்த தளத்தில் நுழைந்தவுடன் நமக்குச் சந்தேகம் எழும் சொல்லை டைப் செய்து அருகே உள்ள “Find” பட்டன் அழுத்தினால், அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சொல்லுடன் தொடர்புடைய, இந்த சொல் சார்ந்து குழப்பக்கூடிய சொல்லின் பொருளும் தரப்படுகிறது. இதில் 3,210 சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன. நமக்கு சந்தேகம் உள்ள சொல்லை, கொடுக்கப்படும் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், கீழாக, விரிவாகப் பொருள் தரப்படுகிறது. சொல்லை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்தலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. அந்த சொல்லை எத்தனை பேர் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தனர் என்ற எண்ணிக்கை தரப்படுகிறது.
சொற்களுக்கான எழுத்துக்கள் முழுமை யாகத் தெரியவில்லை என்றால், ? /* கொடுத்து சொல்லை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘man’ என்ற சொல்லின் எழுத்துக்கள் நினைவில் சரியாக இல்லை எனில், “m?n” or “??n” or “ma?” or “m*”. என அமைத்துத் தேடலாம். m என்ற எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும் பெற “m???” என டைப் செய்திடலாம். இந்த தளத்தில் உள்ள அனைத்து சொற்களின் பட்டியல் கிடைக்க * டைப் செய்து “Find” அழுத்தினால், அனைத்து சொற்களும் கிடைக்கின்றன. ஆங்கில மொழியினை எந்த தயக்கமும், சந்தேகமும் இன்றிப் பயன்படுத்த இந்த தளம் நமக்கு நன்கு உதவுகிறது.