Tuesday, 1 May 2018

குழந்தை வளர்ப்பு!!!

வெயிலுக்கு பவுடர் போடலாமா? பிறந்த குழந்தைகளை, பராமரிக்கும் முறையை கூறும் குழந்தைகள் நல மருத்துவர், ரமா சந்திரமோகன்: நான், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றுகிறேன். குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு, பால் சுரக்கும் தன்மை, முதல் வாரத்தில் குறைவாக இருக்கும். பிறந்த குழந்தையின் உடலில் உள்ள நீர் வற்றினால் தான், சத்தான தாய்ப்பால் உடலில் சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.ஆனால், எடை அதிகமாக பிறந்த குழந்தைக்கு, அதன் தாயிடமிருந்து தேவையான தாய்ப்பால் கிடைப்பது மிக கடினம். இதனால் அக்குழந்தைக்கு, "டீஹைட்ரேஷன்' ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, வலிப்பு வருவதற்கான வாய்ப்பும் உண்டு. கோடைக் காலம் என்பதால் பலரது வீடுகளிலும், குழந்தையை தண்ணீரால் குளிக்க வைத்த பின், பவுடராலும் குளிப்பாட்டும் பழக்கம் உள்ளது. குறிப்பாக குழந்தையின் அக்குள் பகுதி, கழுத்துப் பகுதி, தொடையின் இடுக்குகள் என, பவுடரை அதிக அளவில் கொட்டி தேய்த்து விடுவர். உண்மையில், குழந்தைகளுக்கு பவுடர் தேவையில்லை. பவுடரால், தீமையை தவிர, வேறு எதுவும் கிடைக்க போவதில்லை. குறிப்பாக, அடர் தன்மை கொண்ட பேபி பவுடர்கள், குழந்தைகளின் உடலில் இருக்கும் நுண்ணிய துவாரங்களை அடைத்து, கொப்புளம் மற்றும் இன்பெக்ஷன் எனும் தொற்றுகளை ஏற்படுத்தி விடும். எனவே, குழந்தைகளை குளிப்பாட்டிய பின், துண்டால் நன்றாக துடைத்து, சுத்தமான மற்றும் காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவித்தாலே போதும். குழந்தைக்கு கோடை வெயிலின் காரணமாக அதிகம் வியர்த்தால், விசிறியைக் கொண்டே விசிறி விடலாம். பொதுவாக, பிறந்த குழந்தைகளுக்கு தலை முதல் கால் வரை, வெப்பநிலை சீராக இருக்க வேண்டும். உடல் சூடாகவும், கால் பகுதி குளிர்ச்சியாகவும் இருந்தால், குழந்தைக்கு தொற்று அல்லது நோய் பாதித்துள்ளது என, அர்த்தம். எனவே, குழந்தையின் உடலைத் தொட்டு பார்த்து பழகிக் கொள்ள, அம்மாக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

No comments: