Thursday, 16 April 2015

Export Info.!!!

''விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். அதற்கான வழிமுறைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?''
எம்.கார்த்திகேயன், வேலூர்.
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனத்தின் (FIEO) தென்மண்டல இயக்குநர், உன்னிகிருஷ்ணன் பதில் சொல்கிறார்.
''மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், நம்மில் பலர் ஏற்றுமதிக்குத் தகுதியான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில்தான் கவனக்குறைவாகச் செயல்பட்டு வருகிறோம். இதனால் இங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் மீது வெளிநாட்டவர்கள் வைத்துள்ள மதிப்பு குறைகிறது. உதாரணத்துக்கு, இந்தியாவில் முக்கியமாகத் தமிழகத்தில் விளைவிக்கப்படும் வாழைப்பழங்களுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளைவிக்கிறோமா என்றால், இல்லை. இன்றைக்கு பல விவசாயிகள் செய்யும் தவறு, ரசாயனங்களைப் பயன்படுத்தி விளைவிப்பதுதான். தவிர, அதை பேக்கிங் செய்யும்போது ஏற்படும் சேதத்தினால் லாபத்தை இழக்கின்றனர். இந்தப் பிரச்னையைத் தீர்க்க எங்கள் அமைப்பு மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
அடுத்து, முதன்முதலாக ஏற்றுமதித் தொழிலில் இறங்குபவர்கள், இந்தியாவுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து, அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்டபின் பெரிய ஆர்டராக எடுத்தால், இந்தத் தொழிலில் நீண்டகாலத்துக்கு நிலைக்க முடியும். ஏற்றுமதியை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்தில் அதற்கான உரிமம் பெறுவது பற்றி யோசிக்க வேண்டாம்.
முதலில், ஐ.இ.சி எண்ணை (Import - Export Code (IEC) Number) வாங்க வேண்டும். இதற்கு http://zjdgft.tn.nic.inஎன்கிற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தான்.
இறக்குமதி ஏற்றுமதிக்கான எண்ணைப் பெற்ற பிறகே, ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்ய தேர்வு செய்திருக்கும் பொருட்கள் அடிப்படையில் அந்தந்த புரமோஷனல் கவுன்சிலிடம் உரிமம் பெற வேண்டும். பல பொருட்களை ஏற்றுமதிக்காகத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், எஃப்.ஐ.இ.ஓவிடம் உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய நிலையில், நம்பிக்கையான இறக்குமதியாளர்களின் பட்டியலை எங்கு சென்றும் பெற முடியாது. காரணம், பெரும்பாலான இறக்குமதியாளர்கள் அவர்களாகவே தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி அதை பெற்றுக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் விவரங்கள், அவர்களின் தொடர்புகளை இன்று பல வலைதளங்கள் வழங்கி வருகின்றன. இருப்பினும் இதிலுள்ள தகவல்களை முழுமையாக நம்பாமல், தீர விசாரித்துத் தெரிந்து கொள்வது நல்லது.
www.fieo.org என்கிற எங்களின் இணைய தளத்திலும் நாடுகள் வாரியாக, பொருட்கள் வாரியாக இறக்குமதியாளர்களின் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம்.'
தொடர்புக்கு, இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம் (FIEO), எண்: 706, 7-வது மாடி, ஸ்பென்ஸர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை - 600002.
தொலைபேசி: 044-28497744/ 55/ 66.