Saturday, 25 April 2015

கிராமத்து சமையல்!!!

கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
சுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்…
“கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங்கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…”
– காலவெள்ளத்தில் நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவிட்ட பலரும், இப்படி பெருமூச்சுவிடத் தவறுவதில்லை.
‘விலை மலிவு’, ‘சுலபமாகக் கிடைக்கும்’ என்ற காரணங்களோடு, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்கிற உன்னதத் தத்துவமும் அம்மாவின் கிராமத்துச் சமையலில் சேர்ந்தே இருக்கும் என்பது மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் அம்சமாகும்.
‘அதெல்லாம் ஒரு காலம்’ என்றாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்… அந்த ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் ரசித்து, ருசித்த கிராமத்துச் சமையலை இங்கே விருந்தாக்கி, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கடிக்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.
“பீட்ஸா, பர்கர், சோளாபட்டூரானு ஊர், பேர் தெரியாத விதவிதமான சமையல் ரெசிபிங்க நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாலும், காலகாலமா நம்ம கிராமத்து அடுப்புகள்ல கொதிச்சுக்கிட்டிருக்கற எளிமையான சமையலுக்கு இருக்கற ருசி… அது கொடுக்கற திருப்தி… வேற எங்கயுமே கிடைக்காது. நீங்களும் இதையெல்லாம் செஞ்சு பாருங்க… வீடே வயிறார உங்களைப் பாராட்டும்” என்று உத்தரவாதம் கொடுக்கிறார் பத்மா.
அப்புறமென்ன… உங்க வீட்டையும் கிறங்கடிங்க!
கம்புதோசை
தேவையானவை: கம்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 1, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, பின்பு இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்க்கவும்.
சோள ரவை உப்புமா
தேவையானவை: சோளம் – 1 கப், அரிசி ரவை – 1 கப், கோதுமை ரவை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சோளத்தை ரவையாக உடைக்கவும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடா யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும்… கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: காய்கறிகள் சேர்த்தும் தயாரிக்கலாம். இதற்கு சட்னி, சாம்பார் சிறந்த காம்பினேஷன்.
அவரைக்காய் பருப்பு உசிலி
தேவையானவை: அவரைக்காய் – கால் கிலோ, துவரம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைத்து, சிறிது உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி, வேக வைத்த அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
பாசிப்பருப்பு பெசரட்
தேவையானவை: பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த தோசைக்கு எந்த சைட் டிஷ்ஷூம் வேண்டாம். அப்படியே சூடாக சாப்பிடலாம். பாசிப்பருப்பு, வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.
கருப்பட்டி அப்பம்
தேவையானவை: கருப்பட்டி – 100 கிராம், தினை மாவு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.
செய்முறை: கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.
குறிப்பு: மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம். பண்டிகைகளுக்கு மிகவும் ஏற்றது இந்த அப்பம்.
ராகி மோர்க்கூழ்
தேவையானவை: ராகி மாவு 100 கிராம், மோர் மிளகாய் – 2, சிறிது புளித்த மோர் – 200 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். மோருடன் ராகி மாவைக் கலந்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே குடிக்க… பசி அடங்கும்.
உளுந்து அடை
தேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், கறுப்பு உளுந்து – 100 கிராம், துவரம்பருப்பு – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, இஞ்சி – சிறு துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: கறுப்பு உளுந்து, புரதச் சத்து மிக்க தானியம் ஆகும். பருவமடையும் பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கறுப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.
கொள்ளு உருண்டை காரக்குழம்பு
தேவையானவை: கொள்ளு – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, துவரம்பருப்பு – 4 டீஸ்பூன், கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.
குறிப்பு: கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும். குழம்பை சாதத்தில் போட்டு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்து கொண்டு, குழம்பு தொட்டும் சாப்பிடலாம். இது ஒரு டூ-இன்-ஒன் குழம்பு.
வெள்ளரிக்காய் கூட்டு
தேவையானவை: வெள்ளரிக்காய் – 3, பாசிப்பருப்பு – 1 கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
குறிப்பு: வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி. வெள்ளரிக்காயில் சாலட், தயிர்ப்பச்சடியும் தயாரிக்கலாம்.
புளிப் பொங்கல்
தேவையானவை: அரிசி – 250 கிராம், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மில்லி, கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: 1 பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்து, புளியை கரைத்துக் கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில் வந்ததும் இறக்கவும். சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும்.
குறிப்பு: புளிப்பு, காரம் எல்லாம் சேர்ந்த இந்த புளிப் பொங்கலை, கருவுற்ற பெண்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
எண்ணெய் கத்திரிக்காய் மசாலா
தேவையானவை: சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு எல்லாம் கலந்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பாகத்தை அரைப்பாகம் கத்தியால் கீறி, கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதனுள்ளே வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். கத்திரிக்காய் பொன்னிறமாக, இருபுறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
குறிப்பு: எண்ணெய் கத்திரி மசாலாவை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
பாசிப்பருப்பு கோசுமல்லி
தேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி (பிழிந்து கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, துருவிய கேரட், வெள்ளரித்துண்டுகள், கொத்தமல்லி, உப்பு போட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… கோசுமல்லி ரெடி!
குறிப்பு: இதை வெங்காயம், தக்காளி சேர்த்தும் தயாரித்துச் சாப்பிடலாம்.
பிடிகருணை மசியல்
தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் – ஒன்று, வெல்லம் (பொடித்தது) – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பிடிகருணையை குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, மசித்த கிழங்குடன் சேர்த்து, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலக்கவும். கடைசியாக வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
பரங்கிப் பச்சடி
தேவையானவை: சிவப்பு பரங்கிக் கீற்று – கால் கிலோ, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடித்த வெல்லம் – 4 டீஸ்பூன், புளித்தண்ணீர் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பரங்கிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி… உப்பு, புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து வேகவிடவும். தேங்காய் துரு வல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்.
குறிப்பு: இந்தப் பச்சடி, பொரித்த குழம்புக்கு சிறந்த காம்பினேஷன். இதை எளிதாக தயாரிக்கலாம். பரங்கிக்காயுடன் வெல்லம், இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்து ஜாம் தயாரிக்கலாம்.
கேப்பை கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு மாவு – 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 100 மில்லி.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து குழைவாக வேகவிடவும். கேழ்வரகு மாவுடன் பாலை சேர்த்துக் காய்ச்சி ஆற வைக்கவும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடவும்.
குறிப்பு: இதே முறையில் உப்பு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு, மோர் விட்டு… பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதைக் குழந்தைகளும் குடிக்கலாம்.
கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)
தேவையானவை: கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு. சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம். மற்றவர்களும் சாப்பிடலாம்.
பீர்க்கங்காய் கூட்டு
தேவையானவை: பீர்க்கங்காய் – 2, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழைவாக வேக விடவும். பீர்க்கங்காயை வேக விட்டு, வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து, உப்பு கலந்து சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: இது, தோசை – இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
மரவள்ளி பொரியல் (ஆல்வள்ளிக்கிழங்கு)
தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து பொடியாக நறுக்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… நறுக்கியதைப் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: மரவள்ளிக்கிழங்கில் அடை செய்யலாம். வெல்லம் சேர்த்து வேக வைத்தும் சாப்பிடலாம். சிப்ஸ்கூட தயாரிக்கலாம்.
தக்காளி அடை
தேவையானவை: பழுத்த தக்காளி – 4, புழுங்கல் அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து… இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து அடைகளாக வார்த்து, இருபுறமும் எண் ணெய்விட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
முருங்கைக்கீரை பொரியல்
தேவையானவை: முருங்கைக்கீரை (உருவியது) – இரண்டு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, உப்பு போட்டு வேக விட்டு தண்ணீரை நன்கு வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முருங்கைக்கீரையை போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக்கீரையில் இணையற்ற இரும்புச் சத்து உள்ளது.
புடலங்காய் பொரித்த குழம்பு
தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு கப், மிளகு-சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். மிளகு-சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் காய்-பருப்பு கலவையில் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.
குறிப்பு: புடலங்காய், பத்தியச் சமையலுக்கு ஏற்றது.
கீரை வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு – 200 கிராம், முளைக்கீரை (ஆய்ந்து, நறுக்கியது) – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஊற வைத்து… பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.
எள்ளுப்பொடி
தேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.
குறிப்பு: இதை, சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
பரங்கி அசோகா
தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பரங்கிக்காய் நறுக்கியது – ஒரு கப், நெய் – 100 மிலி, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10.
செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து வேக விடவும். பரங்கிக்காயை நெய் விட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த பருப்பு, அரைத்த பரங்கி விழுது இரண்டையும் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.
சத்துமாவு உருண்டை
தேவையானவை: சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.
செய்முறை: சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.
சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் – 200 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: சுண்டைக்காய், பித்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உடையது. பிஞ்சு சுண்டைக்காயில் விதை அதிகம் இருக்காது. எனவே, கசப்பு அதிகம் தெரியாது. முற்றிய சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து, உப்பு சேர்த்துக் காய வைத்து, எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம்.
ராகி மசாலா தோசை
தேவையானவை: அரிசி மாவு, ராகி மாவு – தலா 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.
குறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவை யான அளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்தபருப்புடன், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை கேசரி பவுடருடன் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் இந்த உருண்டைகளை தோய்த்து, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: பண்டிகை நாட்களில் செய்யக்கூடிய வித்தியாசமான ஸ்வீட் இது.
கொத்தவரங்காய் மோர்க் கூட்டு
தேவையானவை: கொத்தவரங்காய் – 100 கிராம், தயிர் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொத்தவரங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும். இதை வேக வைத்த கொத்தவரங்காயில் விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொத்தவரங்காய் கலவையில் கொட்டி, அடுப்பில் வைத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
முருங்கை மசாலா பொரியல்
தேவையானவை: முருங்கைக்காய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கத்திரிக்காய் – 4, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக்காயும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் போட்டு கரம் மசாலாத்தூள், வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கி, வேக வைத்த முருங்கைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் கிளறி இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்த பொரியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.