தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த சித்த மருத்துவ முறையில் "கபசுரக் குடிநீர் தூள்" மிகவும் பலன் தரும் என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
நில வேம்பு, சிறு தேக்கு உள்பட 11 முக்கிய மூலிகைகளை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்" (சித்த மருந்துத் தூள்) பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் என்று சித்த மருத்துவர்கள் கூறினர்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்னவாக இருக்குமென தெரியுமா?..
சாதாரண காய்ச்சலுடன் தலைவலி, இருமல், ஜலதோஷம், உடல் சோர்வு, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறி குறிகளாகும். தொண்டை கரகரப்புடன் 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது இருமல் ஏற்படுவதும் பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாகும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியமாகும்.
11 மூலிகைகள் சேர்ந்த சித்த மருந்து: தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு சிக்குன்குன்யா, டெங்கு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவியபோது சித்த மருந்தான "நிலவேம்பு' (தூள்) கஷாயத்தின் காய்ச்சலைப் போக்கும் ஆற்றல் பிரபலமடையத் தொடங்கியது.
இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்றும்கூட நிலவேம்புக் (தூள்) நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க, குணப்படுத்த உதவும் "கபசுரக் கஷாயம்' குறித்து சித்த மருத்துவ நிபுணர்தெ.வேலாயுதம் கூறியதாவது:
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (கஷாய தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடா தொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக் கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து "கபசுரக் குடிநீர்" தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர் தூள்" அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
தொண்டை கரகரப்பு ஏற்படும் ஆரம்ப நிலையில் சித்த மருத்துவரிடம் சென்று "தாளிசாதி வடகம்" (மாத்திரை) சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்படும் நிலையில் "கபசுரக் குடிநீரை' கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் பலன் கிடைக்கும்.
அதாவது, நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும். என்றார் சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் தெ.வேலாயுதம்.
Source: http://www.dinamani.com/
http://www.nakkheeran.in
பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு "கபசுரக் குடிநீர்' (தூள்), பிரம்மானந்த பைரவம் மாத்திரை, அமுக்கரா மாத்திரை ஆகிய சித்த மருந்துகள் உள்ளன.