Friday, 16 January 2015

சுற்றுலா கையேடு!!!

ஜில்லுன்னு ஒரு டூர்...!- சுற்றுலா குறித்த பரவசத் தகவல் கையேடு!

 சுற்றுலா குறித்த பரவசத் தகவல் கையேடு!



இந்தியா - என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? உடலையும் மனதையும் குளிர்விக்க நாடு எங்கும் பரவிக் கிடக்கின்றன மலைவாசஸ்தலங்கள். சொல்லப்போனால் அத்தனை ஜில் பகுதிகளையும் குறிப்பிடவோ விவரிக்கவோ இந்தப் பக்கங்கள் போதாதுதான். என்றாலும் நீங்கள் குளுகுளு டூர் செல்ல முடிவெடுத்தால் அதற்கு இவை கட்டாயம் உதவும்.


லே (LEH)

ஐம்மு காஷ்மீரில் உள்ள லடாக் மாவட்டத்தின் தலை நகரம். 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ‘லே அரண்மனை’ மிகப் பிரபலம். உலக அமைதிக்காக எழுப்பப்பட்ட உயரமான சாந்திஸ்தூபம் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது. ட்ரெக்கிங் பாதைகள் நிறைய உண்டு. யுத்த அருங் காட்சியகம் ஒன்றும் காணத்தக்கது. சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம், முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. வெற்றி நினைவாலயம், ஜோராலா கோட்டை என்று பார்ப்பதற்கு உகந்த இடங்களும் உள்ளன.


அரக்கு பள்ளத்தாக்கு (Araku valley)

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அழகான, மாசடையாத பள்ளத்தாக்கு. விசாகப்பட்டினத்திலிருந்து 114 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு 5000 அடி உயரத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதியில் அமைந்துள்ளன அனந்தகிரி மற்றும் சுங்கரி மெடா-ரிசர்வ் காடுகள். காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. போகும்போது அங்குள்ள பழங்குடியினர் தயாரிக்கும் காஃபி பொடி, சீயக்காய்த்தூள், மற்றும் புளியை மறக்காமல் வாங்குங்கள்.
ராஜ்கிர் (Rajgir)

பீகாரில் உள்ளது. நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்திருக்கிறது. இங்குள்ள பருந்து சிகர மலை (Vulture's Peak Mountain) புகழ் பெற்றது. பாட்னாவிலிருந்து ரயில் மற்றும் சாலை வழியாக சென்றடையலாம். சுமார் 100 கி.மீ. தூரம் குன்றுகளுக்கு நடுவே அமைந்த பசுமையான பள்ளத்தாக்கு. பிரம்ம குண்டம் எனப்படும் வெந்நீர் ஊற்றுக்கள் புகழ் பெற்றவை. 1969ல் எழுப்பப்பட்ட விஸ்வ சாந்தி நினைவுத் தூணும் பிரசித்திப் பெற்றது. உலக அமைதிக்கானது இது. கேபிள் காரில் பயணிப்பது தனி ஆனந்தம். ‘வேணு வனம்’ எனும் செயற்கையான காட்டுப் பகுதியில் நிர்மலமான அமைதியை அனுபவிக்கலாம். ஜப்பானிய ஆலயம் ஒன்றையும் காணலாம்.
மோர்னீ குன்றுகள் (Morni hills)
சண்டிகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மோர்னீ ஒரு கிராமம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இமய மலையின் சிவாலிக் தொடரின் ஒரு பகுதி இது. நாலாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து, இமய மலையின் பல அற்புதமான இயற்கைக் காட்சிகளைக் காணலாம். ட்ரக் கிங்கிற்கும் ஏற்ற இடம். சின்னச் சின்ன ஏரிகள் அமைந்துள்ள பகுதி. சுற்றுலாப் பயணிகளுக்காக ஹரியானா அரசு ஒரு பெரிய பயணியர் விடுதியை அமைத்திருக்கிறது.
டல்ஹவுசி (Dalhousie)
ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைவாழ் இடம். அற்புதமான புல்வெளிகள், மலைச்சரிவுகள். பிரிட்டிஷ் அதிகாரிகள் கோடையில் இங்கு வந்து தங்குவது வழக்கம். சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரவீந்திரநாத் தாகூர் இந்தச் சூழலில் மனதைப் பறிகொடுத்துதான் கீதாஞ்சலியை எழுதத் தொடங்கினாராம்!
குஃப்ரீ (Kufri)
ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவிலிருந்து வெறும் 13 கி.மீ. தூரத்தில் அமைந்த பகுதி. ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதியாக இருந்தது. மலைமீது குதிரைச் சவாரி செய்து உச்சியை அடைவது உற்சாகமான (கொஞ்சம் திக்திக்) அனுபவம். உச்சிப் பகுதியை அடைந்தால் பனி சூழப்பட்ட இமயமலையின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.
குலூ (Kullu)

லார்கி மற்றும் மணாலி ஆகியவற்றுக்கு நடுவே அமைந்த ஹிமாசலப் பிரதேசப் பகுதி. அழகிய ஊசியிலைக் காடுகளும், பியாஸ் நதியும் கண்டுகளிக்கத்தக்கவை. மிகப்பெரிய பள்ளத்தாக்கான குலூ பள்ளத்தாக்கை, கடவுள்களின் பள்ளத்தாக்கு என்பர். மிக அழகானது இந்தப் பள்ளத்தாக்கு. குலூவில் ‘லுக்’ என்ற மற்றுமொரு பள்ளத்தாக்கும் இருக்கிறது. மிகச் சிறந்த கோடை வாசஸ்தலம் இது. சுதந்திர இந்தியாவில்தான் இங்கு சாலையே போடப்பட்டது என்பதால், இன்னமும் மாசடையாத பகுதிகள் இங்கு உண்டு.
மணாலி (Manali)
6700 அடி உயரத்தில், ஹிமாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிம்லாவிலிருந்து 270 கி.மீ. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் நம்பியிருக்கும் சிறு நகரம். கொஞ்சம் உள்ளடங்கிச் சென்றால்தான், இயற்கையை ரசிக்க முடியும். இந்து மதத்தின் புராண சட்ட மேதையான மனு என்பதிலிருந்து தான், மணாலி என்ற பெயர் பிறந்துள்ளது. இங்கிருந்து ரோதாங் பாஸ் என்ற பகுதியை அடையலாம். அங்கு சென்றால் பனி படர்ந்த இமய மலையைக் காணலாம். குளிர் காலத்தில் மணாலியின் சாலைகளில் உருவான பனிக்கட்டிகள் மீது சிறுவர்களும், சுற்றுலாப் பயணிகளும் பனிச் சறுக்கு விளையாடுவது வெகு சகஜம்.

நந்தி ஹில்ஸ் (Nandi Hills)
கர்நாடகாவிலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மரங்கள் சூழ்ந்த, சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். பார்ப்பதற்கு எருது போல் இருக்கும் இந்தக் குன்றில் தான் பென்னாறு, பாலாறு, பொன்னையாறுகள் உற்பத்தியாகின்றன. மலைப்பாதைகள் அதிக வளைவுகள் இல்லாதது. மேகங்கள் நம்மைத் தொட்டு விட்டுச் செல்லும் அழகை ரசிக்கலாம். குன்றுக்குக் கீழே உள்ள போதி நந்தீஸ்வரா ஆலயங்கள் பார்த்து ரசிக்கத் தக்கவை.
பாவாகத் (PAVAGADH)

குஜராத்தின் பாஞ்ச்மஹால் மாவட்டத்திலிருந்து சுமார் 46 கி.மீட்டரில் உள்ளது. இங்குள்ள மகாகாளி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். யுனெஸ்கோவால் ‘பாதுகாக்கப்பட்ட சரித்திரச் சின்னமாக’ இனம் காணப்பட்ட பகுதி. நிறைய இயற்கைக் காட்சிகள் கொண்டது. 822 மீட்டர் உயரத்தில் உள்ளது. அரண்மனையையும் கண்டுகளிக்கலாம். காளி கோயிலுக்கு கேபிள் காரில் செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்வூட்டக்கூடிய ஒன்று. ஆனால் கேபிள் காரிலிருந்து இறங்கிய பிறகும், சுமார் 250 படிகள் ஏறித்தான் கோவிலை அடைய முடியும்.
தவாங் (TAWANG)

அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது. சீனா இதை தன் எல்லைக்குட்பட்டது என்று கூறி வருவது வேறு விஷயம். 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தவாங் புத்த மடாலயம் மிகப் பிரபலம். திபெத்தில் உள்ளதை விட்டுவிட்டால், உலகின் மிகப்பெரிய புத்த மடாலயம் இதுதான். ஆறாம் தலாலாமா இங்கு ஜனித்ததால், புத்த மதத்தினருக்கு இது ஒரு புனிதத் தலமும்கூட. தேஜ்பூரிலிருந்து பதினாறு மணி நேர சாலைப் பயணத்தில் அடையலாம். மாநில அரசு கௌஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் செய்து தருகிறது.
லோனாவாலா (Lonavala)
மகாராஷ்ட்ராவின் பூனே மாவட்டத்தில் இருக்கிறது. மும்பாயிலிருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ள இந்தப் பகுதி ‘சிக்கி’க்காக (வேர்க்கடலை பர்பி) மிகவும் புகழ் பெற்றது. 2000 அடி உயரத்தில் அமைந்துள்ள இங்கு, பலவித குகைச் சிற்பங்கள் உண்டு. துங்கிக் கோட்டையைக் காணலாம். மும்பையிலிருந்து வார இறுதிகளில் இங்கு வந்து செல்பவர்கள் பலர் உண்டு. லோனாவாலாவிலிருந்து ஆறரை கி.மீ. தூரத்தில் சிவாஜியின் பிரபல கோட்டையான ராஜ்மசி உள்ளது. பள்ளத்தாக்குகளின் அழகு சிறப்பானது. வால்வான் அணை, டைகர்ஸ் பாயின்ட் போன்றவையும் கண்டு ரசிக்கத் தக்கவை.

ஷில்லாங் (Shillong)
ஷில்லாங் மேகாலயாவின் தலைநகரம். 5,000 அடி உயரத்தில் அமைந்த நகரம். மிக அடர்த்தியான மக்கள் தொகை. நிறைய ஐரோப்பியர்கள் காணப்படுவதால், ‘கிழக்கு ஸ்காட்லான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது. யானை அருவி, லார்ட்ஸ் ஏரி, லேடி ஹைடரீ பூங்கா, ஷில்லாங் கால்ஃப் மைதானம் (ஆசியாவின் மிகப்பெரிய கால்ஃப் மைதானங்களில் ஒன்று), ஷில்லாங் சிகரம், பட்டாம் பூச்சி மியூசியம் போன்றவை இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சில.
தரிங்படி (DARINGBADI)

‘ஒடிசாவின் காஷ்மீர்’ என அழைக்கப்படும் இது, 915 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. காபி மற்றும் மிளகுத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. டோலுரி நதி அழகு சேர்ப்பதுடன், ஒரு அருவிக்கும் காரணமாகிறது. பெல்கார் (BELGHAR) சரணாலயத்தில் பல மிருகங்களைக் காணலாம் - முக்கியமாக நீண்ட தந்தம் கொண்ட காட்டு யானைகள்.
குல்மார்க் (GULMARG)

காஷ்மீரிலுள்ள இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்றது. சுமார் 8,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் மிகக் குறைவு. அப்படி வசிப்பவர்களில் 99 சதவிகிதம் ஆண்கள் தான் என்பது வேடிக்கையான புள்ளி விவரம். பலரும் இங்கு பகலில் வந்துவிட்டு, இரவில் அவரவர் ஊருக்குத் திரும்பிவிடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தங்குவது உண்டு.
மிகவும் அருகிலேயே அமைந்துள்ள இமயமலைக் குன்றுகள் வசீகரித்தாலும், பாகிஸ்தானுக்கும், நமக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு குல்மார்க்கு அருகில் இருப்பதும், அதிகம் பேர் தங்காததற்கு ஒரு காரணம். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் தென்படுவார்கள். ஸ்ரீநகரிலிருந்து காரில் இரண்டு மணி நேரப் பயணத்தில் குல்மார்க்கை அடையலாம். கேபிள் காரும், குளிரான சூழலும், அற்புதமான பனிச் சறுக்குத் தளமுமாக குல்மார்க் நன்றாகவே வசியம் செய்கிறது.
வால்பாறை (VALPARAI)

கோவையில் உள்ள இது, 3500 அடி உயரத்தில் உள்ளது. மேற்கு மலைத் தொடரில், கோவையிலிருந்து 100 கி.மீ. (அல்லது பொள்ளாச்சியிலிருந்து 65 கி.மீ.) தொலைவில் உள்ளது. ஆழியாறிலிருந்து வால்பாறையை அடைய சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடக்க வேண்டும். தனியார் தேயிலைத் தோட்டங்கள் நிறைய உண்டு. சோலையாறு அணைக்கட்டு, பஞ்சமுக விநாயகர் ஆலயம், குரங்கு அருவி, பாலாஜி ஆலயம், ஆழியாறு அணைக்கட்டு, அதிரம்பட்டி அருவி ஆகியவை முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்.
ஊட்டி (OOTY)
2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலை வாசஸ்தலம். ஊசியிலைக் காடுகள், அழகிய மரங்கள் வனப்பைக் கூட்டுகின்றன. நீலகிரி மலையிலுள்ள இதன் அழகை முழுமையாக உணர்ந்து கொள்ள, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரயிலில் பயணிக்கலாம். பெரும் பரப்பில் தாவரப் பூங்காங்கள், ஒரு நாளில் சென்றுவரக் கூடிய பக்காரா அணை, தோடர்களின் குடியிருப்பு, தொட்டபெட்டா, ட்ரெக்கிங் செல்லுதல் போன்ற பல சுவாரசியங்கள் ஊட்டியில் உள்ளன.
டார்ஜீலிங் (DARJEELING)

கன்ஜன்ஜங்கா சிகரத்தின் அழகைத் தரிசித்து மெய் மறக்கலாம். அற்புதமான புத்த மடாலயங்கள், பூந்தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவற்றிற்கும் பெயர் போனது. 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள இதனை அடைய ஒரு மினி ரயிலைப் பயன்படுத்தலாம். வெறும் 83 கி.மீ. தூரத்தை அடைய ஆறு மணி நேரம் என்றாலும், இயற்கை ரசிகர்களுக்கு நேரம் போவது தெரியாது.

காங்டோக் (GANGTOK)
கயிற்றுக் காரில் கட்டாயமாகச் செல்லுங்கள். காங்டோக் பள்ளத்தாக்கின் அழகை அருமையாக உணரலாம். சிக்கிம் மாநிலத் தலைநகரமான காங்டோக்கில் உள்ள மடாலயங்கள் மிக அழகானவை. 500க்கும் அதிகமான பூக்கள் இங்கே மலர்கின்றன. சாகச விளையாட்டு விரும்பிகளுக்கு அற்புதமான தலம்.
மசூரி (MUSSOORIE)

இங்குள்ள சிலர் முசௌரி என்று சொன்னாலும், வட இந்தியர்களுக்கு இது மசூரிதான். அழகிய டுன் பள்ளத்தாக்கு, சிவாலிக் மலைத் தொடர்கள் போன்றவை இதை மிக ரம்மியமாக்குகின்றன. அருகிலுள்ள அற்புதமான கேம்டி (KEMPTY) அருவி அழகுமிக்கது. டெப்போ ஹில் என்ற பகுதியில் நின்று பார்த்தால், கிட்டத்தட்ட எல்லா இமயமலைச் சிகரங்களையும் கண்டு ரசிக்கலாம் - பனி படராத நாட்களில். ஒட்டக முதுகுக் குன்று, துப்பாக்கிக் குன்று போன்றவையும் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்றவை.
மவுண்ட் அபு (MOUNT ABU)
பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் இது ஒரு விதிவிலக்கு. அந்த மாநிலத்திலுள்ள ஒரே சுற்றுலா மலைப் பிரதேசம். 1720 மீட்டர் உயரத்தில் உள்ளது. சமண மதத்தினர் இங்கு புனித யாத்திரையாகவும் வருகின்றனர். காரணம் இங்குள்ள பேரழகு வாய்ந்த தில்வாரா ஆலயம். பிரம்ம குமாரிகளின் பிரம்மாண்டமான அரங்கமும் உள்ளது.

கொடைக்கானல்
பழநிக் குன்றுகளின் நடுவே உள்ள பசுமைப் பிரதேசம். அழகிய மலைச் சரிவுகள், அருவிகள், மனம் மயக்கும் ஏரிகள் போன்றவை இங்கு உண்டு. பலவித பறவைகளும் பயமின்றி வந்து செல்கின்றன. 2,130 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில் வாழை, ப்ளம்ஸ், லிச்சி போன்ற பழங்கள் ஏராளமாக விளைகின்றன. அரிதாகப் பூக்கும் குறிஞ்சி மலரும் இங்கு உண்டு. குறிஞ்சிப் பூக்கள் கொத்தாக மலரும்போது, மலைச் சரிவுகள் நீல, பர்ப்பிள் வண்ணமாகக் காட்சியளிப்பது ரசிக்க வேண்டிய ஒன்று. பல்வேறு நீளம் கொண்ட பதினைந்திற்கும் மேற்பட்ட ட்ரெக்கிங் பாதைகள் உண்டு.
மடிகேரி (MADIKERI)

கர்நாடகாவிலுள்ள கூர்க் மாவட்டத்தின் தலைநகரம். மெர்க்காரா என்றும் குறிப்பிடப்படுகிறது. ராஜாவின் சிம்மாசனம் (உயரத்தில் அமைந்துள்ளது இங்கிருந்து பார்த்தால், அழகிய பள்ளத்தாக்குகளை ரசிக்கலாம்) மடிக்கோடி கோட்டை (இதற்குள் ஒரு அரண்மனையும் உண்டு) ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடியன. நகருக்குள் அமைந்த ஓம்காரேஸ்வரர் ஆலயமும் பிரசித்திப் பெற்றது.

மூணார் (MUNNAR)
முத்திரப்புழா, நல்ல தண்ணீ, குந்தளா ஆகிய மூன்று மலை ஓடைகளின் சந்திப்பில் உள்ள பிரபல வாசஸ்தலம். கொச்சியிலிருந்து 136 கி.மீ.தூரத்தில், 1524 மீட்டர் உயரத்தில் அமைந்த இடம். ஆனைமுடி இதன் உயர்ந்த சிகரம். மேகங்களை நம் மட்டத்துக்கும் கீழே காணலாம் என்பதும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளும் பயணிகளுக்கு ஆனந்தத்தை அளிக்கும். இங்கும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீலக் குறிஞ்சி மலர் பூக்கிறது. பாராகிளைடிங், பாறை ஏறுதல் போன்ற சாகச விளையாட்டுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தேயிலைத் தோட்டங்களுக்கும் குறைவில்லை. மாட்டுப் பெட்டி ஏரி மற்றும் சற்று தொலைவில் அமைந்த ராஜமாலா வனவிலங்கு சரணாலயம் போன்றவையும் பிரபலமானவை.
பஞ்சாக்னி (PANCHAGNI)

வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இது மகாராஷ்ட்ராவில் உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான மலை தீபகற்பமான டேபிள் லேண்ட் இங்குள்ளது. பாண்டவர்கள் தங்கியதாக நம்பப்படும் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்ற பெயர் கொண்ட பெரும் குகையும் உண்டு. பார்சி பாயின்ட், பீன் கௌலா, சிட்னி பாயின்ட், டும் அணைக்கட்டு, லின்டுமாலா அருவி என்று பல இடங்கள் பார்த்து ரசிக்க உள்ளன.
ஈடா நகர் (ITA NAGAR)
அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரம். கௌஹாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. இங்கேபோக, அஸ்ஸாமின் ஹர்முடி ரயில்வே நிலையத்தில் இறங்க வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈடா கோட்டை பிரபலமானது. தலாலாமாவால் அருளப்பட்ட புத்த விஹாரம் இங்குள்ளது. கங்கா ஏரி என்பது ஓர் அழகிய இயற்கை நீர்நிலை. படகுச் சவாரியும் உண்டு. இந்த இடத்திலிருந்து போம்டிலா, பீஷ்மக் நகர் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குப் போய்வர மினி பஸ் வசதி உண்டு.
பச்மாரி (PACHMARHI)
சாத்புராவின் ராணி என அழைக்கப்படும் இது மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. 1100 மீட்டர் உயரத்தில் உள்ள இதன் அருகில் தான் விந்திய, சாத்புரா மலைத் தொடர்கள் உள்ளன. 10000 வருடங்கள் தொன்மை கொண்ட குகை ஓவியங்களை இங்கு காண முடியும். தேக்கு மரம் உள்பட பலவித பயனுள்ள மரங்கள் இங்கு வளர்கின்றன. ரஜத் பராபட் எனப்படும் பெரிய அருவி, தேனி அருவி, அப்சரா அருவி போன்ற அருவிகளோடு ‘சௌராக்’ எனும் சிவாலயத்தையும் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மையப் புள்ளி இதன் அருகில்தான் உள்ளது. போபாலிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் பச்மாரியை அடையலாம்.
ஏற்காடு
‘கொஞ்சமா செலவாகணும்... ஆனா ஜில்லுன்னு ஜாலியா பொழுது போக்கணும்’னா அதுக்கு ஒரே சாய்ஸ் ஏற்காடு தான்! சேலம் மாவட்டத்திலுள்ள ஏழைகளின் ஊட்டி இது. வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளின் ஊடே பயணித்தால் ஆரஞ்ச், பேரிக்காய், காஃபி தோட்டங்களைக் காணலாம். ஏரியில் படகு சவாரி, கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி, காய்கனி சந்தை என எல்லாமே டூரிஸ்ட் அட்ராக்ஷன்தான். குறிஞ்சி பூக்கும் சீஸனில் சுற்றுலா பயணிகள் அலைமோதுவார்கள்.

ஆலப்புழா (ஆலெப்பி)
படகு சவாரின்னு சொன்னதுமே ஞாபகத்துக்கு வருவது ஆலப்புழாதான். தென்கேரளாவிலுள்ள ஆலப்புழாவில் அழகிய கடற்கரை, இயற்கை அழகு நிறைந்த உப்பங்கழிகள், மிக அமைதியான ஏரி, ரம்யமான படகு வீடு பயணம் போன்றவை மறக்க முடியாதவை. சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஆலப்புழா படகுப் போட்டி உலகப் பிரசித்திப் பெற்றது. இந்தியாவின் பல இடங்களில் இருந்து இரயில் மூலமாக ஆலப்புழாவைச் சென்றடையலாம்.