Tuesday, 22 March 2016

Household Tips!!!

உங்கள் வேலையை சுலபமாக்க சில டிப்ஸ் !!!
கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப் படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பாதிக்கு மேல் தண்ணீர் விட்டுக் குலுக்கினால் சுத்தமாகிவிடும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? அரைத்த மாவில்இருந்து கொஞ்சம் கிள்ளி தண்ணீரில் போடுங்கள். சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும்; கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும்; மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.
தக்காளி சட்னி செய்யும்போது. எள்ளை வறுத்துப் பொடித்துப் போட்டு அரைத்தால், மணம் தூக்கலாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
வயிற்றுப் புண் உள்ள வர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியை குடித்தால், நிவாரணம் கிடைக்கும்
காரக்குழம்பு செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால், சிறிது தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால்.. காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.
பொங்கல் செய்யும்போது முழு மிளகை போடுவதால் பலரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க, மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து பொங்கலில் போட்டுக் கிளறிவிடலாம்!
கை நகங்களுக்குக் கீழே கருமை நிறம் ஏறியிருப்பவர்கள், தேங்காய் எண்ணெயுடன் சந்தனப் பொடியைச் சேர்த்து கைகளில் தினமும் பூசி வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
காலிஃப்ளவரை பயன்படுத்தியதும், இலையைத் தூக்கி எறியாமல், எண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து... இதனுடன் உப்பு, வதக்கிய இலை சேர்த்து துவையல் அரைக்கலாம். இது சுவையும், சத்தும் மிக்கது.
போண்டா அல்லது வடைக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டால், மாவை வழித்து பாத்திரத்தில் வைத்து, அதில் ஒரு கைப்பிடி ரவையைத் தூவிக் கலந்து, சற்று நேரம் ஊறவைத்து எடுத்தால், மாவு கெட்டியாகி இருக்கும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடையோ, போண்டாவோ செய்யும்போது மொறுமொறு என்று இருப்பதுடன், எண்ணெயும் அதிகம் குடிக்காது.

No comments: