Wednesday, 16 March 2016

For Pregnant Ladies!!!

கருத்தரித்த பெண் வைத்திய முறைகள் - மரியாதையை சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.!!!
கருத்தரித்த பெண்ணுக்கென நம் பாரம்பரியம் தேடித்தேடிச் சொன்ன வைத்திய முறைகளை மெள்ள மெள்ள மறந்துவிட்டோம். 'கன்சீவ் ஆயிட்டீங்களா? வாழ்த்துகள், நல்ல டாக்டரா உடனே போய்ப் பாருங்க' என மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டும் நம்பி இருக்கும் கர்ப்பக்கால வாழ்வியல் வந்துவிட்டது.
மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான மருத்துவத் துறை. ஆனால் கருத்தரித்த காலம் முழுமையும், மருந்தையும் டானிக்கையும் தாண்டி மற்ற எந்தப் பாரம்பரிய மருத்துவ விஷயங்களையும் புறக்கணிப்பது வேதனையான விஷயம். தம் குடும்ப மருத்துவரை அணுகி தேவையான பாதுகாப்பு விஷயங்களை அறிந்துகொள்வதும், தன் உடல் நோய் எதிர்ப்பாற்றல், சர்க்கரை, ரத்தக்கொதிப்பின் அளவு, தொற்று நோய்கள் இருப்பு ஆகியவற்றை, கருத்தரித்த பெண் அறிந்துகொள்வது மிக அவசியம். இந்த நவீன மருத்துவ அறிவியல்தான், மகப்பேறுகால உயிரிழப்பையும், பேறுகாலத்தின்போது குழந்தை மரணம் அடைவதையும் பெருவாரியாகக் குறைத்திருக்கிறது.
அதேசமயம், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுகப்பிரசவங்கள் அதிகமாக நடக்க, நம் ஊரில் மட்டும் சிசேரியன் பிரசவம் அதிகமாவது ஏன்? நம் ஊர் பெண்களின் இடுப்பு (Pelvic) நலம் குறைந்தது காரணமா? அல்லது சிசேரியன் பிரசவம், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் மருத்துவருக்கு கொஞ்சம் ரிஸ்க் குறைவு என்ற நிலை காரணமா? அல்லது 'சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில், இத்தனையாவது நாழிகையில் பாப்பாவை எடுத்து தர எவ்வளவு ஃபீஸ் ஆகும் டாக்டர்?' எனக் கேட்கும் கூட்டம் பெருகியது காரணமா? 'அய்யோ! இப்பல்லாம் பயலாஜிக்கல் பேபி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுது. இதுல பிரசவ வலி வேறயா? மூணாம் நாள் ஆபீஸ் போற மாதிரி சிம்பிளா சிசேரியன் பண்ணிருங்க' என்ற அவசரங்கள் காரணமா?
பாப்பா கனவோடு நிற்கும் கணவனிடம், 'குழந்தை மெக்கோனியம் சாப்பிட்டிரும் சார். அப்புறம் குழந்தை சஃபகேட் ஆயிரக் கூடாது பாருங்க... ஆபரேஷன் பண்ணிடலாமா? நீங்க சொல்லுங்க' என மருத்துவர் பாதி ஆங்கிலத்தில் பரபரப்பாகக் கேட்க, அந்தக் கணத்தில் கடவுளாக மட்டுமே அவரைப் பார்த்து, 'நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க; எனக்கு பாப்பாவும் அம்மாவும் பத்திரமா வேணும்' எனும் பயம் கலந்த பதில் காரணமா?' - இவற்றை நான் கேட்கவில்லை; உலக சுகாதார நிறுவனம் கேட்கிறது!
கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை. கர்ப்பக்கால வாந்தி, ரத்தசோகை, முதல் டிரைமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். காரணமற்ற வெள்ளைபோக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுத்தங்கஞ்சி போதுமானது. கர்ப்பக்காலத் தொடக்கத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கருப்பையின் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நலம் அளிக்கும். தாமரைப் பூவும், தக்கோலமும், நெய்தல் கிழங்கும், செங்கழிநீர் கிழங்கும், கர்ப்பக்கால சங்கடங்களிலிருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். ஃபோலிக் அமிலம் நிறைந்த, வலி நிவாரணி தன்மையுடைய, வைரஸ்களுக்கு எதிரான ஆற்றலுடைய, ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடைய, இரும்பு மற்றும் கனிம சத்துகள் நிறைந்த இந்த மூலிகைகள், இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், தாய்-சேய் நலத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவக்கூடிய மிகச் சிறப்பான உணவுகள் பல கிடைக்கக்கூடும்.
வண்ணமுள்ள பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி கொண்ட உணவு, கர்ப்பிணிகளின் நலத்துக்கு மிக அவசியம். முருங்கைக் கீரையும் பாசிப் பருப்பு கலந்த பொரியலும் கேழ்வரகு அடையும் தரும் பயனை, விலை உயர்ந்த எந்த டானிக்குகளாலும் தர முடியாது. முன்பக்கம் சிறுநீர்ப்பையும் பின்பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால் முறையே நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் சர்வசாதாரணம். அதற்கு தினசரி நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இன்று கர்ப்பக்காலத்தில் மட்டும் பெருகிவரும் சர்க்கரை நோயைக் (Gestational diabetes) கண்டு பதறத் தேவை இல்லை. தேவைப்பட்டால் உரிய மருத்துவமும், வெள்ளைச் சர்க்கரை இல்லாத உணவும் இவர்களுக்குக் கொடுப்பது அவசியம். தினசரி உணவில் வெந்தயம், கறிவேப்பிலை பொடி எடுத்துக்கொள்வது, கூடுதல் கட்டுப்பாட்டைத் தரும்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்தில், 'செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்' என 23 மி.மீ. அளவிலான கர்ப்பப்பையையும் 'பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், புகழ் சிரசு முறுப்பாகும்' என்று, ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், பரராச சேகரத்திலும், யூகி சிந்தாமணியிலும் சொன்னவர்கள் நம் சித்தர்கள்.
1700-களில் வெறும் கால்நடையாகவும் குதிரையிலும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஏராளமான தாவரங்களைப் பதிவுசெய்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'நவீனத் தாவரவியலின் தந்தை' கார்ல் லின்னேயஸுக்கு வரலாறு கொடுத்த மரியாதையை, நம் தமிழ் சித்தர்களுக்குக் கொடுக்கத் தவறிவிட்டோம்.

1 comment:

தமிழி said...

டாக்டர் கு.சிவராமன் அவர்களின் அருமையான பதப்பிற்கு எனது நன்றிகள்