Tuesday, 16 December 2014

புளித்த ஏப்பம் acid reflux!!!

புளித்த ஏப்பம் acid reflux இதிலிருந்து விடுபட ஆலோசனைகள் :!!!
# வெந்தயப் பொடியை மோரில் கலந்து சாப்பிடலாம். வெந்தயக் கீரையுடன் பயத்தம் பருப்பு சேர்த்துக் கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
# சாம்பார் செய்யும்போது வெந்தயத்தையும், துவரம்பருப்பையும் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாப்பிடலாம்.
# அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாயுக்கள் சீற்றம் அடைந்து குடல் சுவரைப் புண்ணாக்கி விடுகின்றன. உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்துக் கஷாயம் செய்து குடிக்கலாம்.
# மஞ்சளைத் தணலில் இட்டு, சாம்பல் ஆகும்வரை எரிக்க வேண்டும். எரிந்த கரி மஞ்சள் சாம்பலை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிடலாம்.
# கேரட் ஜூஸைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
# சோம்பை வெயிலில் காயவைத்து, இடித்துச் சலித்து 5 கிராமும், வல்லாரைத் தூள் 10 கிராமும் சேர்த்துக் கலந்து, காலை மாலை தேக்கரண்டி அளவு தூளுடன் அதே அளவு பசு வெண்ணெயைச் சேர்த்து மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும்.
# எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய பால், முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
# காபி, டீ, குளிர்பானம், மது, புகை, போதை தரும் பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அதிகக் காரமான உணவு வகைகளையும், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் சாப்பிடக் கூடாது.
# அதிக நார்ச்சத்து உள்ள உணவு வகைகள், முழு தானிய உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
# கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், இறைச்சி, எண்ணெய் வறுவல் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.
# எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. பூண்டு, இஞ்சி, காலிஃபிளவர், பூசணிக்காய், வெங்காயம் போன்றவற்றைக் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
# நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய், நிலவேம்பு, மஞ்சள், பாதாம் பிசின், காவிக்கல், அம்மான் பச்சரிசி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு 21 நாள்கள் இதைச் சாப்பிடலாம்.
# அத்திக்காயை சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் புளித்த ஏப்பம் குறையும்.
# 10 கிராம் ஆலம் விழுது, 10 கிராம் ஆலம் விதை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம்.
# மணத்தக்காளி கீரையுடன் பருப்பு சேர்த்துக் கடைந்து, தொடர்ந்து 15 நாட்களுக்குச் சாப்பிடலாம்.
# துத்தி இலையை அரைத்துச் சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.
# 100 கிராம் மாம்பருப்பை மேல் தோல் நீக்கிப் பொடி செய்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு மணத்தக்காளி கீரையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் மாம்பருப்புப் பொடியைக் கலந்து வெயிலில் காயவைத்து மீண்டும் பொடி செய்துகொள்ளவும். தினமும் காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு கிராம் பொடியை மோர் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
# காலையில் இறக்கிய பதநீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூளைக் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
# சோற்றுக் கற்றாழையின் சோற்றுடன் புளிக்காத எருமைத் தயிரைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
# 5 அல்லது 6 பூண்டை ஒரு டம்ளர் பசும்பாலில் போட்டு நன்றாகக் காய்ச்சி வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
# மாசிக்காயின் தூள் 1 ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் குழைத்துத் தினமும் காலை, மாலை இரண்டு வேளை சாப்பிடலாம்.
# ஒரு கைப்பிடி கசகசாவைத் தண்ணீர் விட்டு அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் முன் குடிக்கலாம். அத்தி இலையுடன் வேப்ப இலையைச் சம அளவு சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
# அத்தி இலைக் கொழுந்து, அவரை இலைக் கொழுந்து, குப்பை மேனிக் கீரை இம்மூன்றையும் சம அளவு சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
# மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் வாய்ப்புண்ணும் குணமாகும்.
# அகத்திக் கீரை இலைகளை வெங்காயம் சேர்த்து வேகவைத்து நன்றாகப் பிழிந்து, அதில் கிடைக்கும் சாற்றைக் குடித்து வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
# அத்தி மரப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, சம அளவு பசும்பால் கலந்து சிறிது கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.


Baskar Jayaraman's photo.