Saturday, 3 September 2022

பத்திய சமையல்!!!

💚❤️😀😄🟢 ப த் தி ய   ச மை ய ல் 🟢😄😀❤️💚.               
இப்போதெல்லாம் ப்ரஸவங்கள் பெரும்பாலும் மெடர்னிடி ஹோம்களிலேயே நடக்கின்றன. நார்மல் டெலிவரியாக இருந்தால் இரண்டாம் நாளும் சிசேரியனாக இருந்தால் மூன்றாம் நாளும் தாயும் சேயும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
தாய், சேய்இருவருக்கும் Post  Natal Care முக்கியமானது. நான் கொஞ்சம் பழைய கால மனுஷன். எனவே அந்தக்கால
நடப்பு முறைகளையே சொல்லப்போகிறேன். குழந்தை பிறந்த அன்றே தாய்க்கு வெற்றிலையில் கோரோஜனை என்ற மருந்தைத்தடவி மென்று சாப்பிட தருவர். கோரோஜனை ஒரு சிறந்த ஆன்டிஸெப்டிக். பிறந்த அன்றோ மறுநாளோ பாலடையில் தாய்ப்பாலை பீய்ச்சி அதில் இரண்டு மூன்று சொட்டு விளக்கெண்ணை விட்டு குழப்பி குழந்தைக்கு புகட்டுவர் இதற்கு செவ்வெண்ணை என்று பெயர். இதனால் குழந்தையின் தொண்டைச்சளி கரைந்து கணீர் என குரல் வளம் பெருகும். தாயாருக்கு தினந்தோறும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ப்ரஸவ லேகியம்( நடகாய லேகியம்)  ஒரு நெல்லிக்காயளவு சாப்பிடக்கொடுப்பர்.குழந்தை ப்ரஸவித்த மூன்றாம் நாளிலிருந்து திட ஆகாரம் (பத்திய சாப்பாடு) தர
தொடங்குவர். பத்தியம் போட்ட அப்புறந்தான் குழந்தை பிறந்த செய்தியை சொந்த பந்தங்களுக்கு லெடர் போடுவா. அறையில் இருக்கும் பிள்ளைபெத்தாளுக்கு பத்துநாளும் பத்திய சாப்பாடுதான். பத்திய சாப்பாடு சமைக்க
வேண்டிய முக்கிய மூலப்பொருட்கள் நெய், மிளகு சீரகம், பாசிப்பருப்பு,காய்கறிகளில் அதிக பிஞ்சாக புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு,பூண்டு,    கறிவேப்பிலை,தளிர் வெற்றிலை பாக்குதூள் சுண்ணம்பு முதலியன. பிள்ளைபெத்தாளுக்கான பத்திய சமையலை அவளது அம்மாவே சமைத்து பரிமாறுவாள். அளவாக சமைக்க வேண்டும். மீதம் வைப்பதோ மீந்ததை வேறொருவர் சாப்பிடுவதோ கூடாது. பிள்ளைபெத்தாள் சாப்பிடும்போது அம்மாவைத்தவிர வேறு எவரும் பார்க்க விடமாட்டார்கள்.
சமையல் விதரணைகளை சொல்கிறேன். கறிவேப்பிலையை
வதக்கி புளி உப்பு மிளகு வைத்து அரைத்து பூண்டு வேகவிட்டு
மிளகு குழம்பு செய்து வைத்துக்கொள்ளலாம். தினமும் பூண்டை பாலில் வேகவைத்து பூண்டை மென்று தின்று பால் குடிக்க வைக்கலாம். பூண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.  பிஞ்சு அவரை, புடல், கத்தரி இவற்றை சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு பொரிச்ச கூட்டு இன்னொரு நாள் வதக்கின கறி என மாற்றி மாற்றி செய்யலாம். பொரிச்ச கூட்டுக்கு பயத்தம்பருப்பும் மிளகும் உப்பும் தான். முருங்கைப்பிஞ்சு பொரிச்ச கூட்டுக்கு மட்டுந்தான். கறி செய்ய முடியாது. தினம் தினம் ரஸம் பண்ண வேண்டாம். ரஸம் பண்ணா கண்டதிப்பிலி பூண்டு ரஸம் பண்ணணும். தேங்கா சேர்த்துக்கவே கூடாது. சேர்த்துண்டா தாய்ப்பால் கெட்டிப்பட்டு குழந்தைக்கை செரிமானம் ஆகாது.எப்படி பிள்ளைபெத்தாளுக்கு பத்தியம் போடறது?  சாப்பிடுவதற்கு முன்பே குழந்தைக்கு ‘ எடுத்து விட’ (தாய்ப்பாலூட்டி விட) வேண்டும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழிந்த பின்னர் தான் மறுபடி எடுத்துவிட வேண்டும்.
சாதம் கொழைவா இருக்கணும். வெள்ளி பேலாவுல சாதத்தை போட்டு நெய்யை குத்தி நண்ணா மசிச்சு பொரிச்ச கூட்டையோ, மொளகு குழம்பையோ,ரஸத்தையோ விட்டு பிசையணும். பிள்ளைபெத்தாளை உள்ளங்கையை குழிச்சுக்கச் சொல்லி புத்துருக்கு நெய்யை நெறைய விட்டு குடிக்க சொல்லணும பிசைஞ்சு வச்சிருக்கற சாதத்தை சுடச்சுட சாப்ட வைக்கணும். தொட்டுக்க வதக்கின கறி. தாய்க்கோ கொழந்தைக்கோ ஜலதோஷம் இல்லேன்னா புளிக்காத பசுந்தயிர்சாதம் போடலாம்.தயிரோடு கூட கொஞ்சம் வென்தீர்த்தம் விட்டு பிசையணும். வென்தீர்த்தம்
குடிக்கணும். சாப்ட்டு முடிச்சதும் வெற்றிலை பாக்கு போட்டுக்கணும். இந்த பத்திய சாப்பாட்டை காலை பத்து மணிக்குள்ள சாப்டூடணும். அப்புறம் அப்பபோ பசிக்கத்தான்
பசிக்கும். காஃபி,பால், ஹார்லிக்ஸ் னு கொடுக்கலாம். புழங்கலரிசி ஒடசல்ல கஞ்சி போட்டு பால்விட்டு கொடுக்கலாம்.


No comments: