Sunday 29 September 2019

Golu-கொலு!!!

கொலுவின் தாத்பரியம் என்ன தெரியுமா?

நவராத்திரியின், மிக முக்கியமான அம்சம் கொலு வைப்பதாகும். வீட்டையே மிக அழகாக மாற்றி, பெண்களை உற்சாகம் கொள்ளவைக்கும் கொலுவின் தாத்பரியம் என்ன தெரியுமா? மகிஷாசுரனின் வதத்துக்காக பிரம்மா, சிவன், விஷ்ணு முதலான அனைத்து தேவர்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்து பெரும் ஜோதியாகி அந்த ஒளிவடிவே தேவியாக உருமாறினாள் அல்லவாப அப்போது அம்பிகைக்கு மூன்று தெய்வங்கள் உட்பட எல்லோரும் ஆயுதங்கள் தந்து தத்தம் சக்தியிழந்து பொம்மைகளாக நின்றார்களாம்.

எனவே தான், பொம்மைகளாக நின்ற தெய்வங்களை கொலு வைத்துச் சிறப்பிக்கிறோம். அதுபோல கொலு என்றாலே, குதூகலமும் கொண்டாட்டமுமாக மாறி விடுபவர்கள் குழந்தைகள் தான்! கொலுவுக்கு வரும் குழந்தைகள் அனைவருமே கொலுவில் வைத்துள்ள பொம்மைகளையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்து ரசிப்பார்கள்.

அப்படி வரும் குழந்தைகள், கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பக்தி நெறி சம்பவங்கள் மற்றும் ககதைகள் கொண்ட தெய்வங்களின் உருவச்சிலைகளைப் பார்க்கும்போது, அதைப்பற்றி ஆவலுடன் கேட்கிறார்கள். இதன் மூலம் புராணம், இதிகாசம் போன்றவற்றை அறிந்து கொள்கிறார்கள்.

இதனால் அந்தச் சிறு வயதிலேயே ஆன்மிகம், ஒழுக்கம், பக்தி, நேர்மை போன்றவறை அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கல்வெட்டாகப் பதிந்து போகின்றன. அவர்கள் தூய்மையானவர்களாக வளர்கிறார்கள். இதுவும் கூட, வீடுகளில் நவராத்திரியின் போது பொம்மை கொலு வைப்பதின் முக்கிய நோக்கம் எனலாம்.

புரட்டாசி மாசம் மகாளய அமாவாசையன்று கொலு அலங்காரம் தொடங்குகிறது. அப்போது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் கொலுப்படிகள் வைக்கப்பட வேண்டும். படிகளின் மேல் தூய துணி விரிக்கப்பட்டு, அம்பிகையின் கலசமும் விநாயகர் சிலையும் முதலில் வைக்கப்படும்.

பின்னர் மற்ற தெய்வங்களின் பொம்மைகள் அழகாக வரிசையாக வைக்கப்படுகின்றன. பழங்கால பாரம்பரிய பொம்மையாகிய மரப்பாச்சிகளும் இதில் இடம் பெறும். தேவி, யோக மாயையின் உதவியுடன் விஷ்ணு மது-கைடபர்களை வதம் செய்தது பிரளயத்தின்போது அல்லவாப எனவே, இந்த உலகம் நீரினால் தான் சூழப்பட்டிருந்தது என்பதைக் குறிக்கும் விதமாகவும், நீர்வாழ் ஐந்துக்கள் தான் முதன் முதல் தோன்றியவை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவும் தான், நாம் கொலுவின் போது தரையில் தெப்பக்குளம் கட்டி அதில் நீர்வாழ் ஜந்துக்களான மீன், ஆமை போன்ற பொம்மைகளை மிதக்க விடுகிறோம்.

இறைவனின் முதல் அவதாரமும் `மச்சம்' என்று சொல்லப்படும் மீன்தானே! இவற்றோடு வனவாசம் செய்த ராமபிரானை நினைவூட்டும்படி செடி, கொடிகள், மரங்கள், மலைகள் போன்றவைகளையும் அமைக்கலாம். பிறகு கீழிருந்து மேலாக, முதல் இரண்டு மூன்று படிகளில் மற்ற உயிரினங்களான பறவைகள், ஊர்வன, மிருகங்கள் போன்றவைகளையும், அதற்குமேல் ஆதி மனிதர்களைப் போன்ற குறவன், குறத்தி, செட்டியார் பொம்மை, வேடுவன், வேடுவப் பெண்மணி, பாம்பாட்டி போன்றவர்களும் வைக்கப்படுவார்கள்.

அதற்கு மேல்படியில் மனிதப் பிறவிகளான மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர், புத்தர், ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களும், அதற்கும் மேல்படிகளில் தெய்வத்தின் அவதாரங்கள் மற்ம் திருவிளையாடல்களைக் குறிக்கும் பொம்மைகளும், எல்லாவற்றுக்கும் மேலாக முதல் படியில் அம்பிகையின் கலசமும், அம்பிகை, மகாலட்சுமி, விசாலாட்சி, புவனேஸ்வரி முதலான அன்னைகளின் சிலைகளும் வைக்கப்பட வேண்டும்.

மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி சக்தியானது எப்படி படிப்படியாக சஹஸ்ராரத்தை அடைகிறதோ, அவ்வாறே படிகளையும் வைத்து பொம்மைகளையும் வைத்து மனித வாழ்வின் கடைசி எல்லை, பரப்பிரம்மப் பேரானந்தமய நிலையை அடைவது தான் என்பதை குறிப்பால் உணர்த்துவதே கொலு வைப்பதின் உண்மையான தாத்பரியம். இறைவனின் பத்து அவதாரங்களும் கூட அதுபோலவே மனிதனின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

மீனாக, ஆமையாக, பன்றியாக, சிங்கமாக வடிவெடுத்தவர் ஆதிமனிதனை நினைவு படுத்தும் விதமாக குட்டையான மனிதனாகவும், சற்றே கோபமுள்ள பரசுராமனாகவும், குற்றம் குறை ஏதுமற்ற பூரண மனிதன் ஆக ராமன் ஆகவும், இந்த மாதிரியான தூயமனிதன் அடுத்து அடைவது தெய்வ நிலை தான் என்பதைக் குறிக்கும் விதமாக பலராம, கிருஷ்ண அவதாரமாகவும், கடைசியில் அனைத்து உயர்ச்சக்தியும், ஒடுங்கும் இடம் இறைசக்தியிடமே என்பதை குறிக்கும் படியான கல்கி அவதாரம் கடைசி என்றும் வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

முதல் நாள் பூஜிக்கப்பட்ட கலசமும் பொம்மைகளும் படிகளில் வைக்கப்பட்டுவிட்ட பின்னர், எல்லா பொம்மைகளிலும் தேவியின் சக்தி மையம் கொண்டு விடுவதாக ஐதீகம். இப்படி அமாவாசையன்று பொம்மைகளை அலங்கரித்துவிட்டாலும் அடுத்த நாள் தான் பண்டிகை தொடங்கும்.

தினமும் காலையில் குளித்து தூய்மையுடன் கொலுவின் முன்னால் சுத்தப்படுத்தி, கோலம் இட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அன்னம், பருப்பு, நெய் இவற்றுடன் ஏதாவது சித்திரான்னம் (எலுமிச்சை சாதம், வெண்பொங்கல் போன்றவை) செய்து, வெற்றிலை, பாக்கு பழத்துடன் நைவேத்தியம் செய்வது விசேஷம்.

இந்த ஒன்பது நாட்களும் மாலைவேளைகளில் குறித்து விளக்கேற்றி, நவதான்யங்களைக் கொண்டு தினமொரு சுண்டல் செய்து, பழம் தேங்காய் இவற்றை நைவேத்யம் செய்து தேவி மகாத்மியம், துர்கா ஸ்பதசதீ, லலிதா சஹஸரநாமம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்களை முடிந்தவரை பாராயணம் செய்யலாம்.

சங்கடங்கள் மறைத்து சவுபாக்கியம் பெருகும். கொலு வைக்கும் இல்லத்தரசிகள் தினந்தோறும் இளம் பெண்கள், கன்னிப்பெண்களைப் பூஜைக்கு அழைத்து, பூஜை முடிந்தவுடன் தன் கையாலேயே புனுகு, ஐவ்வாது, கஸ்தூரி, சந்தனம், குங்குமம், சாந்து, ஸ்ரீசூர்ணம், மை ஆகியவற்றை இட்டு அவர்களையும் தேவியாகவே பாவித்து வணங்க வேண்டும்.

அவர்களை வழியனுப்பும் போது வெற்றிலை பாக்கு, மஞ்சள் இயன்ற தட்சணை ரவிக்கைத்துண்டு ஆகியவற்றைக் கொடுத்தனுப்புவது விசேஷம். ஒவ்வொரு நாளும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து, அன்றைய பண்டிகையை முடிக்க வேண்டும். கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை, விஜயதசமி என்று விசேஷ தினங்களாக கொண்டாடப்படுகின்றன.

விஜயதசமி பண்டிகையின் கடைசி தினமாதலால், அன்று மாலை தெய்வ சக்தியுள்ள பதுமைகளையும் கலசத்தையும் கொலுவினின்றும் அகற்றுவதற்கான விசேஷ பிரார்த்தனை செய்ய வேண்டும். கலசம் வைத்து பூஜை செய்தவர்கள் தேவியை எழச்செய்து, அவளுக்குரிய இடத்துக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

அன்றிரவு கொலுவில் வைக்கப்பட்ட ஏதாவது இரு பதுமைகளை, கிழக்கு மேற்காக படுக்கவைத்து, பத்து நாட்கள் தெய்வமாக நின்று அருள் புரிந்த நீங்கள் இனி ஓய்வெடுக்கலாம் எனக்கூறி நவராத்திரி பூஜையை ஆரத்தி எடுத்து முடித்து வைத்து, மறுநாள் பொம்மைகளை அகற்றலாம்.

🙏🙏🙏

No comments: