Friday, 29 April 2016

Moral Story!!!

நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன் கேட்டான். 'கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்.' முல்லா நஸ்ருதீன் சட்டென பதில் உரைத்தார். அதெப்படி? 'ஒரு கழுதையை தயார் செய்து கொள். நாளை என்னோடு பயணம் செய்ய தயாராகிக் கொள்...' கழுதையை முன்னால் நடக்க விட்டு முல்லாவும், அவர் மகனும் பின்னால் தொடர்ந்தனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன் கேட்டான், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்! 'எந்த மடையர்களாவது கழுதையை நடக்க விட்டு, அதன் பின்னால் செல்வார்களா... கழுதை ஒரு வாகனம்' . முல்லா, தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அநுமதித்தார். சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய்......மகன் கேட்டான். 'என்ன அநியாயம் இது. நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை மேல் அமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.' முல்லா கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான். வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. முல்லாவை பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான். என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர் கள். மகன் வினவினான். 'என்ன கொடுமை இது. நீ சிறுவன்... உன்னை நடக்க சொல்லி விட்டு, அந்த பெரிய மனிதன் என்ன சொகுசாக கழுதை மேல் அமர்ந்து செல்கிறான். நீயும் ஏறிக்கொள் , இதில் ஒன்றும் தவறு இல்லை.' முல்லாவும், மகனும் கழுதை மேல் அமர்ந்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். வழியில், ஒரு சந்தை குறிக்கிட்டது. கழுதை மேல் இருவர் அமர்ந்து செல்வதை கண்ட மக்கள் கூப்பாடு போட்டனர். கழுதை சற்று மிரண்டு பின் நின்றது. 'என்ன அநியாயம் இது. இந்த கழுதை மேல் இருவர் அமர்ந்தால் கழுதை என்னாகும்.' மக்களின் குரலுக்கு செவி சாய்த்த முல்லாவும், மகனும் கழுதையை தங்கள் தோளில் சுமந்தபடி நடந்து சென்றனர். வழியில், ஒரு ஆற்றை கடக்க குறுகிய பாலம் வழியே நடந்தனர். இதை கண்ட மக்கள் வாய் விட்டு சிரித்தனர். 'என்ன கோமாளித்தனம் இது. எந்த பைத்தியக்காரனாவது, கழுதையை தோளில் சுமந்து செல்வானா? மக்களின் வெடிச் சிரிப்பில் கழுதை மிரண்டது. ஆற்றில் விழுந்தது; துடி துடித்தது; பின் மூழ்கியது; கண்ணில் இருந்து மறைந்தது. முல்லா சொன்னார்... "இது தான் நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; வீண் பழி சுமத்தும், ஏளனம் செய்யும்; ஏசும், எட்டி உதைக்கும், வசை பாடும். கண்டவன் சொல்வதற்கெல்லாம் தலை சாய்க்காதே. உன் மனசாட்சிக்கு மட்டும் தலை வணங்கு. இல்லை என்றால், உன் முடிவும் கழுதையின் முடிவு போல் வீணாக முடிந்து விடும்."

No comments: