Tuesday, 5 January 2016

சப்ஜி!!!



தலைநகரில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக குளிர் வந்து விட்டது. கூடவே குளிர் கால காய்கறிகளும்! குளிர் காலம் வந்து விட்டால் தில்லியில் காலி ஃப்ளவர், பச்சைப் பட்டாணி, கேரட், முள்ளங்கி என சில குளிர் கால காய்கறிகள் புத்தம் புதிதாய் கிடைக்க ஆரம்பித்து விடும். இந்தக் காலங்களில் தான் காலி ஃப்ளவர் பயன்படுத்தி சப்பாத்திக்கான விதம் விதமான சப்ஜிகள் செய்ய முடியும். இன்று நாம் பார்க்கப் போகும் [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி அப்படி ஒரு சப்ஜி தான்!

தேவையான பொருட்கள்:


காலி ஃப்ளவர் [1], பச்சைப் பட்டாணி [1 கப்], பெரிய வெங்காயம் [1], தக்காளி [1], பூண்டு [2 பல்], இஞ்சி [ஒரு சிறிய துண்டு], பச்சை மிளகாய் [1], மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஆம்சூர், ஜீரகம், பெருங்காயத் தூள், எண்ணெய், உப்பு [தேவைக்கு ஏற்ப] மற்றும் அலங்கரிக்க கொத்தமல்லி தழை. அம்புட்டு தேன்!

எப்படிச் செய்யணும் மாமு:



காலி ஃப்ளவரை தனித் தனிப் பூக்களாக எடுத்த பிறகு அதை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதனை சிறிய சிறிய துண்டுகளாக கத்தி மூலம் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கொஞ்சம் சூடானதும், அதில் ஜீரகம் போட்டு பொரிந்தவுடன், பெருங்காயத்தினைச் சேர்க்கவும். பிறகு சிறிது சிறிதாய் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்க்கவும்.  பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

மல்லித் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்க்கவும். சற்றே வதக்கிய பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கிக் கொள்ளவும். அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் காலி ஃப்ளவர் மற்றும் பட்டாணியைச் சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பினை மேலே தூவி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கி வைத்திருக்கும் ஒரு மூடியால் மூடி வைக்கவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நடுநடுவே கரண்டியால் வதக்கவும்.
பச்சைப் பட்டாணியின் வாசம் மூக்கைத் துளைத்துக்கொண்டிருக்க, சற்றே மூடியைத் திறந்து கொஞ்சமாக ஆம்சூர் பொடியைத் தூவவும். மேலாக ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு கரண்டியால் கலக்கவும்.  இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பினை நிறுத்தி, நாம் செய்து முடித்த [G]கோபி[b][k]கி [b]புர்ஜியின் மேலாக பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவவும்.

சாதாரணமாகவே குளிர் காலங்களில் மூன்று வேளையும் சப்பாத்தி தான் சாப்பிட வேண்டியிருக்கும்! அரிசி சாதம் சாப்பிட்டால் குளிர் இன்னும் அதிகமாகத் தெரியும்! அதன் கூட [G]கோபி[b] [k]கி [b]புர்ஜி இருந்து விட்டால் இன்னும் இரண்டு சப்பாத்திகள் அதிகமாக உள்ளே இறங்கும் என்பது நிச்சயம்!

என்ன நண்பர்களே, இன்றைக்கு உங்க வீட்ல செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்களேன்!