Saturday, 2013-03-09 08:16:47] |
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது. இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். |
அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும். ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். |
No comments:
Post a Comment